Saturday 20 August 2022

யாழ்ப்பாணத்திலிருந்து .....(3)

    


                                                 

விளையாட்டுத்துறை என்று எடுத்துக் கொண்டால் ஒரு காலகட்டத்தில் அவர்களது பெயர் மிகவும் பிரபலம். அனைத்து மலேசியர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தனர்.

அன்று மணிஜெகதீசன் என்றால் ஓட்டப்பந்தயத் துறையில் மிகவும் பிரபலமாக விளங்கியவர். அவர் படிக்கும் காலத்திலேயே கொடிகட்டிப் பறந்தவர். பின்னர் படித்து மருத்துவ டாக்டராக உயர்ந்தவர்.

பெண்களில்,  ஓட்டப்பந்தய வீரர் என்றால் ராஜாமணியை அறியாமல் இருக்க முடியாது. பெண்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

அதே போல பூப்பந்து விளையாட்டு என்றால் பஞ்ச் குணாளன் மிகவும் பெயர் பெற்று விளங்கியவர்.

இவர்கள் எல்லாம் யாழ்ப்பாணத் தமிழர் வழி வந்தவர்கள். இவர்கள் காலத்துக்குப் பின்னர்  பலர் வந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் பெயர் தான் மறக்க முடியாத பெயர்களாக  இன்னும் விளங்குகின்றன.

மேற் குறிப்பிட்ட துறைகள் மட்டும் அல்ல இன்னும் பல விளையாட்டுத் துறைகளில் இவர்கள் பெயர் பதித்தவர்கள். குறிப்பாக ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளிலும் பெயர் பெற்றவர்கள்.  எனினும் அத்துறை சம்பந்தப்பட்டவர்களை நான் அதிகம்  அறிந்திருக்கவில்லை.

மலேசிய மக்களில் சிறு எண்ணிக்கையில் அவர்கள் இருந்தாலும் பல சாதனைகளை அவர்கள் புரிந்திருக்கின்றனர். அவர்களின் சாதனைகளுக்கு அடிப்படை என்பது ஒன்றே ஒன்று தான். அது தான் கல்வி.

கையில் கல்வி என்று ஒன்று இருந்துவிட்டால் போதும் அவன் இந்த உலகையே ஆள முடியும். அந்த கல்வியை வைத்துக் கொண்டு தான் இன்று தமிழ்ச்சமுகம் உலகெங்கிலும் தனது ஆளுமையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. கல்வியின் பலத்தை நாம் தெரிந்து கொண்டோம்.

மலேசியாவில் யாழ்ப்பாணத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் ஒரே காலகட்டத்தில் இங்கு வந்தவர்கள் தான்.  ஒரு சாரார் கல்வியோடு வந்தவர்கள். அதனால் அவர்கள் உயர்வு பெற்றார்கள்.  ஒரு சாரார் கல்வி கற்காதவர்களாக இங்கு வந்தவர்கள். அதனால்  பெருந்துன்பத்துக்கு உள்ளானார்கள். படிப்படியாக, கல்விகற்று, இன்று இவர்களும் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உயரம் அதிகம்.  இருப்பினும் தொடக்கூடிய அளவு தூரம் தான்!

இரு வெவ்வேறு  இடங்களிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்திற்கு  விளையாடுவதற்கான திடல் சமமாக  அமையவில்லை. இருந்தாலும் ஒரு சாராரின் வெற்றி தமிழ்ச்சமூகத்தின் வெற்றி தான்!

இன்னும் வரும்

No comments:

Post a Comment