Monday 8 August 2022

அலட்டிக் கொள்ளாதீர்கள்!

 



                                                       தேர்தல் காலம் நெருங்குகிறது என நமக்குத் தெரியும். அதிகம் அலட்டிக் கொள்ளாதீர்கள்.

எததனையோ தேர்தல்கள் வந்து போய்விட்டன. அல்லது புதிதாக வாக்கு அளிப்பவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் தேவையெல்லாம்  ஒன்று தான்.  இத்தனை ஆண்டுகள் வாக்களித்தோம் நம் சமுதாயம் எந்த அளவு பயன் அடைந்தது. அல்லது நமது வீட்டுக் குழந்தைகளுக்கு ஏற்ற கல்வி கிடைத்ததா, வேலை வாய்ப்புக்கள் கிடைத்ததா என்று ஒரு சிறிய ஆராய்ச்சி போதும் நீங்களே ஒரு முடிவு எடுத்துவிடலாம்.   

  புதிதாக, முதன் முதலாக வாக்களிப்பவர்கள் வருகிறார்கள். பள்ளி வாழ்க்கையில் என்ன நல்லது நடந்தது, கல்லூரிகளில் இடம் கிடைத்ததா, வேலை வாய்ப்புக்களில் புறக்கணிக்கப்பட்டோமா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.  இப்படி ஒரு சில கேள்விகளோடு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.  நீங்கள் என்னதொரு முடிவுக்கு வருகிறீர்களோ  அவர்களுக்கு வாக்களியுங்கள்.  வாக்களிப்பதோடு உங்கள் அரசியலை முடித்துக் கொள்ளுங்கள்.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் கைகால்களில் விழுவார்கள்! அதெல்லாம் அரசியல் விளையாட்டில் ஒரு பகுதி. அவர்களின் நடிப்பில் ஏமாந்து விடாதீர்கள். அவர்கள் வெற்றி பெற்ற பிறகு நாம் தான் அவர்களில் கால்களில் விழ வேண்டும்!

இன்னும் சில அரசியல்வாதிகள் மகா கெட்டிக்காரர்கள். ஏதோ நாம் சாப்பாடே இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது போல அரிசி, பருப்பு, பால்டின்,சாடின் - இப்படி சிலவற்றைக் கொடுத்து வாக்களியுங்கள் என்று காலில் விழுவார்கள்! கணவர்களுக்குத் தண்ணி அடிப்பதற்குச் சாராயம் வாங்கிக் கொடுக்கும் வேட்பாளர்களும் உண்டு!

நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். இதையே அவர்கள் மலாய்க்காரர், சீன வாக்காளர்களிடம் செய்ய முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். அடிதான் விழும்!

இந்திய வாக்களர்களுக்கு ஏதேனும் செய்ய முடியும் என்றால்  இதனைச் செய்யுங்கள். அடையாளக்கார்டு இல்லாமல், குடியுரிமை இல்லாமல் நாடற்றவர்கள்  என்று சொல்லிக் கொண்டு  பிறந்ததிலிருந்து இங்கு வேலைவெட்டி இல்லாமல்  இருக்கிறார்களே அவர்களுக்கு உதவி செய்யுங்கள். 

சிறு தொழில் செய்யும் வியாபாரிகளுக்குக் கடனுதவி செய்யுங்கள். அரசாங்கம் கொடுக்கும் அந்த உதவி  கூட இவர்களுக்குப் போய் சேர்வதில்லை.. தேர்தல் காலத்தில் கூட அதனைச் செய்யலாம்.

அதனால் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு எது நல்லதோ அதைச் செய்யுங்கள். ஒரு சில அரசியல்வாதிகளிடமிருந்து உங்களுக்கு  ஏதோ சில உதவிகள் கிடைத்திருக்கலாம். அவர்களுக்கு உங்களின் நன்றியைக் காட்ட அவர்களுக்கு வாக்களிப்பது இயல்பு தான்.

வாக்களிப்பது நமது உரிமை. அதனைச் சரியாக செய்யுங்கள் என்பதே நமது வேண்டுகோள்!


No comments:

Post a Comment