நாட்டில் நடக்கும் சில விஷயங்களைப் படிக்கும் போது "ஐயோ! மனிதர்கள் இவ்வளவு கொடூரமானவர்களா?" என்று நாமும் சேர்ந்து புலம்ப வேண்டியுள்ளது.
குழந்தைகளுக்கு மதுபானங்களைக் கொடுத்து குடிக்க வைப்பது என்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை. இப்படிச் செய்பவர்கள் மொடாக் குடியர்களாகத்தான் இருக்க வேண்டும். அதுவுமின்றி அம்மையும் அப்பனும் இருவருமே குடிகாரர்களாக இருந்தால் தான் இப்படியெல்லாம் செய்ய முடியும்!
இன்றைய நிலையில் குழந்தைகள் பலவகைகளில் துன்புறுத்தப் படுகிறார்கள் என்பது உண்மை. பல காணொளிகளைப் பார்க்கின்ற போது நமது கண்களில் இரத்தக்கண்ணீர் தான் வரும். அந்த அளவுக்குக் குழந்தைகளுக்குக் கொடுமைகள் நடக்கின்றன. யார் என்ன செய்ய முடியும்? பேச முடியாத குழந்தைகள்.
குழந்தைகள் துன்புறுத்தல் என்பது பல தரப்புகளிலிருந்தும் வருகின்றன. வேலைக்காரப் பெண்கள் மூலம், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத தாய், குடிகாரத் தந்தை, வளர்ப்புப் பெற்றோர்கள் - இப்படிப் பல தரப்பு மனிதர்கள் இந்த குழந்தைகளின் துன்புறுத்தல்களுக்குக் காரணமாக அமைகின்றனர். தொடர்ந்து காணொளிகளில் வந்து கொண்டு தான் இருக்கின்றன, பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இப்போது உள்ள குழந்தைகள் மகா மகா சுட்டிகள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதனால் விளையாட்டுத்தனம் அதிகம். அவர்களைச் சரியான பாதையில் கொண்டு செல்வது பெற்றோர்களின் கடமை. ஆனால் வேலைக்காரர்கள் எதுபற்றியும் கவலைப்படுவது இல்லை. அவர்களும் கொடுமை செய்கின்றனர். குழந்தைகளால் ஒன்றும் செய்ய இயலாது.
ஆனால் குழந்தைகளுக்கு மதுபானம் கொடுப்பது என்பது அதிகமாக நாம் பார்ப்பதில்லை. ஆனால் அது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. நமது பார்வைக்கு வருவதில்லை, அவ்வளவு தான்.
ஒரு முறை நான் பார்த்த காணொளியில் தொட்டியில் படுக்கப் போட்டிருக்கும் ஒரு குழந்தைக்கு அப்பன் மதுபானத்தை வாயில் ஊற்றுகிறான். குழந்தை சப்பு சப்பு என்று சப்புகிறது. அதைப் பார்த்து அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஏகப்பட்ட சந்தோஷத்தோடு சிரி சிரி என்று சிரிக்கிறார்கள். என்னத்த சொல்ல!
இப்போது நமது பத்திரிக்கைகளில் வந்த செய்தி அதிர்ச்சியான செய்தி. சொல்ல என்ன இருக்கிறது? ஒரு சிறுவனிடம் மதுபானத்தைக் கொடுத்து குடிக்க வைக்கிறார்கள். குழந்தைகளுக்கு என்ன தெரியும். ஏற்கனவே நமது சமுதாயம் குடிகார சமுதாயம் என்று பெயர் எடுத்தவர்கள். இப்போது சிறு குழந்தையிலிருந்தே குடிப்பழக்கத்தை ஏற்படுத்த இளம் பெற்றோர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பதாகாத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
மற்ற இனத்தவர்கள் இது போன்று செய்ய வாய்ப்பில்லை. நம் ஆள் தான் இதையெல்லாம் செய்வான். ஏதோ ஒரு செய்தி இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது. நமக்குத் தெரியாமல் குழந்தைகளுக்கு என்ன என்ன கொடுமைகள் நடக்கிறதோ?
சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடும் தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும் என்பதைத்தவிர நாம் சொல்ல வேறு ஒன்றுமில்லை!
No comments:
Post a Comment