Saturday 11 June 2016

ஹூடுட் சட்டம் தேவை தானா?



ஹூடுட் சட்டம் இந்நாட்டிற்குத் தேவை என்பதாக இஸ்லாமிய கட்சியான பாஸ் ஒரு கட்டாயச் சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியோடு தாங்களும் ஒத்துப்போவதாக ஆளுங்கட்சியான அம்னோவும் தலையாட்டிக் கொண்டிருக்கிறது!

ஆளுங்கட்சியில் அம்னோவே மிகப்பெரிய கட்சியாக விளங்குகிறது. அது மலாய்க்காரர்களைக் கொண்ட கட்சி. அத்தோடு ஆளுங்கூட்டணியில் சீனர்களும் (மலேசிய சீனர் சங்கம்) இந்தியர்களும் (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) கட்சிகளும் மற்றும் சபா, சரவாக்கிலுள்ள பிற கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.

பாஸ் என்பது முற்றிலுமாக  மலாய்க்காரர்கள் கட்சி. அந்தக் கட்சியோடு .ஆளுங்கட்சியான அம்னோ சேரும் போது அது மிகப்பெரிய மலாய்க்காரர்களைக் கொண்ட கட்சியாக விளங்கும். நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியாக அது உருவாகும்!

இஸ்லாம், இஸ்லாமிய நாடு என்று பேசுபவர்கள் அந்த மலாய்க்கூட்டணியையே விரும்புகின்றனர். அதே சமயத்தில் ஆளுங்கூட்டணியில் உள்ள சீனர், இந்தியர் ஹூடுட் சட்டத்தையும் விரும்பவில்லை; அந்த இரு கட்சிகளின் கூட்டணியையும் விரும்பவில்லை!

எந்த ஒரு முடிவும் வராத நிலையில் அம்னோ தரப்பில் உள்ள சிலர் 'சீனர்கள்,  இந்தியர்களின் ஆதரவு  எங்களுக்குத் தேவை இல்லை" என்று இப்போதே பேசவும்  ஆரம்பித்துவிட்டனர்! அந்த அளவுக்கு ஹூடுட் சட்டத்தின் மேல் தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டனர்.

அந்த இரு கட்சிகளும் ஹூடுட் சட்டத்தை வைத்து இணையலாம் என்று பேசினாலும் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அதன் பழைய வரலாறு அப்படி!

ஆனாலும் ஹூடுட் சட்டத்தின் மேல் ஏன் இந்த அளவு தீவிரம் காட்ட வேண்டும்? இன்று பல இஸ்லாமிய நாடுகளில் ஹூடுட் சட்டம் இருக்கிறது. அந்த நாடுகளில் எந்த அளவு குற்றச்செயல்கள் குறைந்திருக்கின்றன? அப்படி ஒன்றும் குறைந்ததாகத் தெரியவில்லை!

எந்த ஒரு சட்டம் வந்தாலும் - அது இஸ்லாமிய சட்டமோ அல்லது இஸ்லாமிய அல்லாத சட்டமோ -  பதவியில் உள்ளவர்களோ, அரசியல்வாதிகளோ, பணக்காரர்களோ இந்தச் சட்டங்களினால் பாதிக்கப்படுவதில்லை! பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளே! சதாம் ஹுசேன் செய்த தவறுகள் நிறைய. ஆனால் ஹூடுட் சட்டத்தால் என்ன செய்ய முடிந்தது?

இன்று பல ஆப்பிரிக்க இஸ்லாமிய நாடுகளில் பட்டினி, பஞ்சம் என்பது மிகச்சாதாரண விஷயம். அங்கும் பல நாடுகளில் ஹூடுட் சட்டம் உள்ளது. ஆனால் இந்த நாடுகளில் ஏன் இந்தப் பட்டினி,  பஞ்சம்?  எல்லாம் நேர்மையற்ற ஆளும் வர்க்கத்தினர், அதிகாரிகள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் என்று அடுக்கிக்கொண்டு போகலாம். இந்த ஹூடுட் சட்டத்தால் என்ன செய்ய முடிந்தது?

நமது நாட்டில் ஷரியா சட்டம் வந்த பிறகு என்ன நடந்து கொண்Mடிருக்கிறது? இஸ்லாம் பெயரைச் சொல்லி இந்து சமயத்தினரே  அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இஸ்லாமிய சட்டம் சரியானதாக இருக்கலாம். ஆனால் நடைமுறை என்று வரும் போது பல சிக்கல்கள் இருக்கின்றன. நடைமுறைபடுத்துவது பல சிக்கல்களைக் கொண்டுவரும்.

இந்நாடு இஸ்லாமிய நாடு என்று சொல்லப்பட்டாலும் இது பல மதத்தினர் வாழ்கின்ற ஒரு நாடு. இங்கு ஹூடுட் சட்டத்தை வலிந்து திணிப்பது என்பது தேவையற்ற ஒன்றே! யாருக்கும் பயன் இல்லாத ஒரு சட்டம்!

தேவை இல்லை என்பது எனது கருத்து!



No comments:

Post a Comment