Thursday 9 June 2016

படிக்கும் பழக்கம் தொடர வேண்டும்!


வாழ்க்கையில் நாம் எதனையும் நிறுத்தலாம்;  ஆனால் படிக்கின்ற பழக்கத்தை மட்டும் நாம் நிறுத்தவே கூடாது!

பள்ளியோடு புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை பலர் நிறுத்தி விடுகின்றனர். காரணம் அந்த அளவுக்குப் பள்ளிப் புத்தகங்கள்  மேல் ஒரு வெறுப்பு!  பதிமூன்று, பதினான்கு ஆண்டுகள் புத்தகங்களைப் பார்த்துப் பார்த்து ஒரு சலிப்பு ஏற்பட்டு விட்டது!

பள்ளிப் புத்தகங்கள் என்பது பள்ளியில் தேர்ச்சி பெற. ஆனால் வெளியுலக வாழ்க்கையில்  தேர்ச்சி பெற ஏகப்பட்ட புத்தகங்கள் உள்ளன. இலக்கியங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல கோணங்களில், பல புத்தகங்கள். 

இந்தப் புத்தகங்கள் எல்லாம் வாழ்க்கையின் வழிகாட்டிகள். ஆம்! புத்தகங்கள் வழிகாட்டும்.  புத்தகங்கள் மூலம் மற்றவர்களின் அனுபவங்கள் நமக்கு வழி காட்டுகின்றன.

நாம் செய்யும் தவறுகளைப் புத்தகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. அனைத்தும் வாழ்க்கை அனுபவங்கள்.

இந்த அனுபவங்களை நாம் யாரிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது. கற்றுக்கொடுப்பவர்கள் யாரும் இல்லை. காரணம் நாம் தவறுகளோடு தான் வாழ்கிறோம்! அனைவர்களுமே தவறு செய்பவர்களாகத்தான் இருக்கிறோம்!

நாம் கம்பராமாயணத்தையும் படிக்கலாம்; கம்பார் கனிமொழி எழுதிய கவிதைகளையும் படிக்கலாம்! பாரதியாரையும் படிக்கலாம், புண்ணியவானையும் படிக்கலாம்! புஜாங் பள்ளத்தாக்கைப் பற்றியும் படிக்கலாம்; அந்தமான் தீவுகளைப் பற்றியும் படிக்கலாம்!

எதனைப் படித்தாலும் அத்தனையும் மற்றவர்களின்  அனுபவங்கள் தான்! நீங்கள் தேடுவது ஏதோ ஒன்று அங்கு இருக்கும். நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒன்று தீடீரென உங்கள் கண்களுக்குத் தோன்றும்! உங்கள் கேள்விகளுக்கு அங்கு ஒரு பதில் இருக்கும்!

அது தான் படிப்பதினால் நாம் அடையும் பயன்! தனிமனிதனாக வாழ்ந்து விடலாம்! ஆனால் புத்தகங்கள் இல்லாமல் நாம் வாழ்ந்துவிட முடியாது!  கூடவும் கூடாது!

புத்தகங்களோடு வாழ்வது என்பது அறிஞர் பெருமக்களோடு வாழ்வது, டாக்டர் மு.வ. அவர்கள் பெரும் தமிழறிஞர். வாழ்க்கைச் சிக்கல்களை அவர் எழுதிய புத்தகங்கள் நமக்கு நல்லதொரு  பாடம் தரும். அவர் எழுதிய புத்தகங்கள் நம்மோடு இருப்பது என்பது ஒரு அறிஞர் நம்மோடு இருக்கிறார் என்பதற்குச் சமம். வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் என்பதற்குச் சமம்.

நமது வாழ்க்கையை நாம் சிக்கலின்றி கொண்டு செல்ல படிக்கும் பழக்கத்தை எந்தக் காலத்திலும் நிறுத்தி விடாதீர்கள். தொடருங்கள்; படிப்பதைத் தொடருங்கள்! நல்ல பழக்கம்!

No comments:

Post a Comment