Wednesday 22 June 2016

சிரித்து வாழவேண்டும்!



"சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!"என்பது கவிஞர் புலமைபித்தனின், எம்.ஜி.ஆர். பாடல்!

இங்கு நாம் சிரித்து, நல்ல நலத்தோடு வாழ்வது பற்றி பேசுவோம். பிறரைச் சிரிக்க வைக்கலாம்; நம்மைப் பார்த்து பிறர் சிரிக்க வேண்டாம்!

இன்று சிரிப்பது என்பது பெரியதொரு பிரச்சனையாகி விட்டது! மனிதர்கள் சிரிப்பதில்லை! அந்த அளவுக்கு மனிதர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள்! எல்லாருமே ஏதோ ஒரு மன இறுக்கத்தில் இருக்கிறோம்! இறுக்கத்தை இறக்கிவிட வழி இல்லை! காசு கொடுத்தால் கூட சிரிக்க ஆளில்லை! அதனால் தொலைக்காட்சிகளே  நம்மைச் சிரிக்க வைக்கப் பல அலைவரிசைகளை ஏற்படுத்தியிருக்கின்றன! அப்போதும் கூட சிலர் சிரிப்பதே இல்லை!

அட! சிரிப்பு எங்கே போயிற்று? சிறுபிள்ளைகளாய் இருந்த போது எப்படியெல்லாம் சிரித்திருப்போம்! இப்போது கூட குழைந்தைகள்   300 லிருந்து 500 வரை ஒரு நாளைக்குச் சிரிக்கிறார்களாம்! பெரியவர்களோ 20 முறைதான் ஒரு நாளைக்கு அவர்களால் சிரிக்க முடிகிறதாம்! சாப்பாட்டைக் குறைத்தால் உடம்புக்கு நல்லது. சாப்பாட்டைக் கட்டுப்படுத்தாமல் சிரிப்பைக் கட்டுப்படுத்தினால் சாப்பாட்டோடு சிரிக்காத சிரிப்பும் உடம்பில் நோயை ஏற்படுத்தும்!

சிரிப்பதில் அப்படி என்ன நமக்குக் கஷ்டம்? சிறு குழந்தைகளைப் பார்க்கிறோமே எவ்வளவு நெருக்கடிகளிலும் அவர்கள் விளையாட்டும் சிரிப்புமாகத்தானே இருக்கிறார்கள். பெரியவர்களில் கூட ஒரு சிலர் எந்நேரத்திலும் சிரித்த முகத்தோடையே இருப்பார்கள். அவர்களுக்குப் பிரச்சனைகளா இல்லை?  பிரச்சனைகள் இருக்கின்றன என்பதற்காக முகத்தை ...உர்...என்றா வைத்துக் கொண்டிருக்க முடியும்! அது ஒரு பக்கம் இருக்கட்டும். இதுவும் ஒரு பக்கம் இருக்கட்டும்!

நடிகர் நாகேஷ் - இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும். ஆனால் அவரின் வாழ்க்கையில் ஏகப்பட்ட நெருக்கடிகள், துன்பங்கள்! அதனை நினைத்து அவர் என்ன கன்னத்தில் கைவைத்துக் கொண்டா இருந்தார்? அவரின் துன்பங்களை மறந்து நம்மை என்னமாய் சிரிக்க வைத்தார்!

"இடுக்கண் வருங்கால் நகுக" என்று தானே ஐயன் திருவள்ளுவர் சொல்லிவிட்டுப் போனர். "அழுக" என்று சொல்லவில்லையே! பிரச்சனைகள் தீருவதற்கு சிரிப்பும் ஒரு வழி தான்.. சிரிக்கும் போது மன இறுக்கம் குறையும். இறுக்கம் குறைந்தால் நம்மால் சிந்திக்க முடியும். பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

சிரித்து வாழ்வோம்! சிறப்பாக வாழ்வோம்! சீரும் சிறப்புமாக வாழ்வோம்! சிந்தித்து வாழ்வோம்! செல்வத்தோடு வாழ்வோம்!

No comments:

Post a Comment