Saturday 4 June 2016

வெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்!


வெற்றி பெற வேண்டுமென நினைப்பவர்கள் வெற்றி பனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

'நான் வெற்றி பெற வேண்டும்' என நினைத்துக் கொண்டே தோல்வி மனப்பான்மையை அனுதினமும் அசைப் போட்டுக் கொண்டிருந்தால் நாம் எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது! காரணம் நம் உள்ளம் முழுக்க தோல்வியுறுவோம் என்னும் நினைப்பு ஆனாலும் இடையிடையே வெற்றி பெற வேண்டும் என்னும் உந்துதல் என்று நிலையில் நமது எண்ணங்களை நாம் வளர்த்துக் கொண்டிருந்தால்  நாம்  எப்படி வெற்றி பெற முடியும்?

நமது எண்ணங்கள் 24 மணி நேரமும் வெற்றி வெற்றி என்பதாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய வேறு எண்ணங்களை நமது மனதின் உள்ளே நுழையவிடக் கூடாது. இரண்டில் ஒன்று தான்.  வெற்றி அல்லது தோல்வி! இரண்டையும் மனதில் போட்டுத் தாலாட்டிக் கொண்டிருக்கக் கூடாது! இப்போது நாம் என்ன நிலையில் இருந்தாலும் - தோல்வியின் விளிம்பில் இருந்தாலும் - நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்னும் ஆவேசம் மனதில் உழன்றுக்கொண்டே இருக்க வேண்டும்.  வெற்றிக்கான முயற்சிகளில் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும். வழிகளை மாற்றலாம் ஆனால் 'வெற்றி மட்டுமே' என்னும் நமது நோக்கத்தை மாற்றிக்கொள்ளக் கூடாது!

தோல்விகள் அனைத்தும் தற்காலிகத்  தடைக்கற்கள்  தான்!தோல்விகளைப் பற்றிப் பேசும் போது நமக்கு உடனடியாக ஞாபகத்திற்கு வருபவர்  முன்னால் அமெரிக்க அதிபர் ஆப்ரஹாம் லிங்கன். எத்தனை எத்தனை தோல்விகள்! ஆனால் அத்தனை தோல்விகளையும் அனுபவித்த பின்னர் தான் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார்! தோல்விகள் அவரை மண்டியிட வைக்க முடியவில்லை! வெற்றியை நோக்கியே அவர் பயணித்துக் கொண்டிருந்தார்! கடைசியில் வெற்றியும் பெற்றார்!

நேற்று காலமான குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் வெற்றியின் ரகசியம் என்ன? அவர் கோதாவில் இறங்கி விட்டால் தனது எதிரியைப் பார்த்து "வாடா வா! துணிவு இருந்தால் வா! உன்னை நொறுக்கித் தள்ளுகிறேன் வா!" என்று தனது வெற்றியை முன்னமையே அவர் தீர்மானித்து விடுகிறார்! எதிரியைப் பலவீனப் படுத்தி தனது வெற்றியை முன்னைமையே உறுதிப்படுத்துகிறார்!

வெற்றி பெற வேண்டும் என்னும்  எண்ணம் உள்ளவர்கள் 'நான் வெற்றி பெறுவேன்' என்று மனதிலே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர் கொள்ளுகின்ற அத்தனை இடையூறுகளையும் பலவீனப்படுத்த வேண்டும்! வெற்றியை மட்டுமே நோக்கி பயணிக்க வேண்டும்.

தோல்விகளை மனதிலிருந்து அகற்றிவிட்டு வெற்றியை மட்டும் மனதிலே நிரப்புபவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்!

எப்போதும், எல்லா நிலையிலும் வெற்றி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!




No comments:

Post a Comment