Wednesday 15 June 2016

இந்துக்கள் அழுக்கானவர்களா?


ஆமாம்! அப்படித்தான் சொல்கிறது மலேசியத் தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் தனது பாடத்திட்டம் ஒன்றில்!

எப்போதும் இந்துக்களையே குறிவைத்துச் சுடும் உயர்கல்விக் கூடங்கள் இம்முறை சீக்கிய மதத்தினரையும் சேர்த்துக் கொண்டது தான் வில்லங்கமாகி விட்டது!  இந்துக்களைச் சமாதானப்படுத்தி விடலாம்; ஒரு வருத்தம்  சொன்னால் போதும். பிரச்சனை அடங்கிவிடும்! அதற்கு மேல் கேட்க ஆளில்லை!

"எங்களை எப்படி அழுக்கானவர்கள் என்று சொல்லலாம்" என்று சீக்கியர்கள் பொங்கி எழுந்து விட்டனர்!

இப்போது இதுபற்றி  பலவிதமான பதில்கள் அரசு தரப்பிடமிருந்து.  உயர்கல்வி அமைச்சு இதனை அங்கீகரிக்கவில்லை என்பதாக ஒரு விளக்கம்! பல்கலைக்கழக   துணை வேந்தர் இது பற்றி அறிந்திருக்கவில்லை என்பதாக ஒரு செய்தி! இனிமேல் தான் துணை வேந்தர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது! தனது ஆளுகையின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை அறியாத ஒரு துணைவேந்தர் அவர்!

நேர்ந்தத்  தவறுகளுக்காக துணை வேந்தர் மன்னிப்புக் கேட்டுவிட்டதாக உயர்க்கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே தேசிய சீக்கிய இயக்கம்  "இந்துக்களும் சீக்கியர்களும் அழுக்கானவர்கள்" என்று கண்டுபிடித்த அந்தக் 'கொலம்பஸ்' சை பணிநீக்கம் செய்ய வேணடும் என்று  கொடி பிடித்திருக்கின்றனர்! அதுவே நமது நிலையுமாகும்!

மன்னிப்பு என்பதை ஒரு சடங்காக இல்லாமல் எல்லாத் தமிழ் நாளிதழ்களிலும் ஒரு பக்க விளம்பரமாக வெளியிட வேண்டும். தொடர்ந்து சமயங்களை இழிவு படுத்துவதும் பிறகு மன்னிப்பு என்பதும் ஏதோ ஒரு விளையாட்டாக ஆகிவிட்டதாகவே தோன்றுகிறது!

சமயத்தைப்பற்றி எழுதுபவர்கள் அந்த அந்த சமயங்களைப் பற்றி படித்து, அறிந்து, புரிந்து எழுத வேண்டும். ஞானசூனியங்கள் எல்லாம் சமயங்களைப் பற்றி எழுதுவது என்பது தங்களுக்குகுத் தானே சூனியம் வைத்துக் கொள்ளுவதற்கு ஒப்பாகும்!

போலீஸ் புகார் என்பது வழக்கமான ஒன்று. எல்லாம்  கண்துடைப்பு வேலை! இதுவரை கொடுக்கப்பட்ட புகார்கள் எந்தப் பலனும் அளிக்கவில்லை! இனிமேலும் அளிக்கப்போபோவதில்லை!

நமது குரல் "பணிநீக்கம்" என்பதாகவே ஒலிக்கட்டும்! குரல் ஒங்கி ஒலிக்கட்டும்!

1 comment: