Thursday, 30 June 2016
நண்பர்கள் நலமா...?
உங்களைச் சுற்றியுள்ள உங்கள் நண்பர்களைப் பாருங்கள். அனவைரும் நலம் தானே? உங்கள் நண்பர்கள் நலமாக இருந்தால் நீங்களும் நலமாகத்தான் இருப்பிர்கள்!
நாம் சிரித்து வாழ்வதும், மகிழ்ச்சியாக வாழ்வதும் நமது சுற்றுப்புறமும் ஒரு காரணமாக அமைகிறது. சிரித்துப் பேசி, மகிழ்ச்சியாக வாழ்வது என்பது ஒரு சிலருக்குக் கனவாகவே போய்விடுகிறது!
ஒரு சில நண்பர்களைப் பார்த்திருப்பீர்கள். ஏதாவது ஒரு பிரச்சனை அவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும்! அவர்களைப் பொருத்த வரைக்கும் அந்தப் பிரச்சனைகளிலிருந்து அவர்களால் விடுபடவே முடிவதில்லை! "உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது" என்று கவிஞர் கண்ணதாசன் பாடிவிட்டுப் போனார்! அந்த வரிகள் இவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்!
எல்லாம் உப்புச்சப்பில்லாத பிரச்சனைகளாக இருக்கும்! ஆனால் இவர்கள் பண்ணுகின்ற சேட்டைகள் நம்மைக் கலங்கடித்து விடும்! இவர்களுடைய சோகங்கள் இவர்களோடு போய்விட்டால் நமக்கு மிக மிக சந்தோஷம். ஆனால் சுற்றுபுறத்தையே இவர்கள் கலங்கடித்து விடுவார்கள்! அவர்கள் சோகங்கள் நம்மைத் தாக்கி நாமும் தேவையற்ற சோகங்களில் வீழ்த்தப்படுவோம்!
ஒரு சிலர் நோய்களப்பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களோடு நாமும் கலந்துவிட்டால் போதும் வேறு வினையே வேண்டாம்! நமக்கும் நோய் வந்துவிடும்! ஒரு நண்பரை எனக்குத் தெரியும்.நோய்களைப் பற்றி பேசுவதில் வல்லாதி வல்லவர்! நமது நாட்டில் உள்ள அத்தனை டாக்டர்களையும் தெரியும்; அத்தனை மருத்துவ நிபுணர்களையும் தெரியும். எந்த டாக்டர் எந்த வியாதியைக் குணப்படுத்துவார்! எந்த டாக்டரிடம் போனால் எந்த வியாதி குணமாகும் அத்தனையும் விரல் நுனியில் வைத்திருப்பார்! கடைசியில் அவரும் ஏதோ ஒரு பெயரைச் சொல்லி அந்த வியாதியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்! நோயில்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது! நமக்கு நோய் என்றால் டாக்டரைப் பார்ப்போம்; டாக்டர் சொல்லுவதைக் கேட்போம். அத்தோடு பிரச்சனை முடிந்தது.
ஆனால் 24 மணி நேரமும் நோய்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பவர்கள் மிக ஆபத்தானவர்கள்! மற்றவர்களுக்கு நோயைப் பரப்புவர்கள்! ஒரு நோயும் இல்லாமல் நாமும் ஏதாவது ஒரு நோயால் வாடிக் கொண்டிருப்போம்!
நாம் பெரும்பாலும் நண்பர்களோடு சேர்ந்து நேரத்தை கழிக்கிறோம். சிரித்துப் பேசி மகிழ்ந்திருப்போம்! அந்த வேளையில் நோய்களைப் பற்றி பேசுவதும் சோகங்களையே பகிர்ந்து கொள்ளுவதும் நமக்கு எந்த நலனையும் கொண்டுவரப் போவதில்லை! நல்லதையே பேசி நலமோடு வாழ்வோம்! நல்ல நண்பர்கள் நமக்கு நலத்தைக் கொண்டுவருவார்கள். நோய் பரப்பும் நண்பர்கள் நோயைக் கொண்டு வருவார்கள்!
நலமோடு வாழ்வோம்! நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்போம்!
Labels:
கோடிஸ்வரர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
great advice timely
ReplyDelete