Thursday 2 June 2016

பொருளாதார பலமே தலை நிமிர வைக்கும்!


நாம் தனிப்பட்ட முறையில் எவ்வளவோ பலசாலிகளாக இருக்கலாம்; திறமைசாலிகளாக இருக்கலாம். புதியப்புதிய ஆராய்ச்சிகளைச் செய்யலாம்; புதியப்புதிய கண்டுபிடிப்புக்களைக் கண்டு பிடிக்கலாம்.

ஆனால் பணத்திற்கு முன் எதுவும் எடுபடாது! பொருளாதார உயர்வு மட்டும் தான் ஒருவனை உயர்த்திக் காட்டும். பொருளாதார பலமே இந்தச் சமுதாயத்தை உயர்த்திக் காட்டும்!

பணம் இல்லாத சமுதாயம் எப்படியெல்லாம் மிதிபடும் என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நம்மிடம் அரசியல் பலமும் இல்லை; பண பலமும் இல்லை.

அரசியல் பலம் இருந்தால்  அதிகாரத்தைக் காட்ட முடியும், மலாய்க்காரர்களைப் போல! ஆனால் பண பலம்,  அந்த அதிகாரத்தையும் கூட வாங்கிவிடும், சீனர்களைப் போல!

அரசியல் பலம் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் பண பலம் அதனையும் மீறி செயல்பட முடியும். பொருளாதாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களின் குரல் ஒங்கி ஒலிக்கும். பொருளாதாரத்தில் பலவீனமான சமுதாயமான நமது குரல், யாருடைய காதுக்கும் எட்டுவதில்லை. தமிழ் ஊடகங்களின் வரும் நமது அவலச் செய்திகளை  அரசாங்கம் கண்டு கொள்வதில்லை.

பொருளாதார பலம் இல்லாத ஒரே காரணத்தினால் நாம் ஒரு தீண்டத்தகாத சமுதாயமாகப் பார்க்கப் படுகிறோம். எல்லாவற்றிலும் ஒதுக்கப்படுகிறோம்.

நமது பொருளாதாரத்தை நாமே உயர்த்திக்கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும். அரசாங்கம் கொடுக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நமது இந்திய வர்த்தக சங்கங்கள் கொடுக்கின்ற பயிற்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

நாம் குறைகளை மட்டுமே சுட்டிக்கொண்டிருந்தால் பணம் உள்ளவனைப்பார்த்து பொறாமை தான் பட வேண்டி வரும்! நாம் பொறாமை படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை! மற்றவர்கள் துணிந்து செய்வதை நாம் பார்த்து ரசிக்க முடிகிறதே தவிர, நாமும் ஏன் அவர்களைப் போல துணிந்து செயல்படக் கூடாது என்பதை யோசிப்பதில்லை!

பொருளாதார பலமே வெற்றியின் ரகசியம்!  பொருளாதார பலமே நம்மை தலைநிமிர வைக்கும்!

No comments:

Post a Comment