Tuesday 14 June 2016

அடாடா! தமிழரா நீங்கள்?


நமது நாட்டில் ஒருவரை - எந்த இனத்தவர் - என்று அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம் தான்!

ஒருவரைப் பார்த்து இவர் சீனரா, இந்தியரா, மலாய்க்காரரா அல்லது வெள்ளைக்காரரா என்பதை உடனடியாகத் தீர்மானிக்க முடியவில்லை! அந்த அளவுக்கு நம்மிடையே 'கலப்பு'  இனம் மிகந்துவிட்டதோ! அப்படியும் சொல்ல முடியவில்லை! ஒரு வேளை நமது நாட்டின் பருவ  நிலை கூட காரணமாக  இருக்கலாம்!

என்னைப் பார்த்தால் இப்போது உள்ள இளந்தலை முறையினர் மலாய் மொழியில் பேசுகின்றனர். தாடி வைப்பது மலாய்க்காரர் மட்டும் தான் என்னும் நினைப்பு அவர்களுக்கு!

ஒரு டாக்டர் நண்பரைத் தெரியும். முதன் முதலில் நான் அவரைப் பார்த்தபோது என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை! சீனரா, இந்தியரா, மலாய்க்காரரா  என்று ஒன்றும் புரியவில்லை! ஆங்கிலப் பத்திரிக்கையை வாங்குவார், போவார்! பேசவதில்லை! ஒரு நாள் தீடீரென "என்னப்பா,  பெட்ரோல் விலையை ஏத்திட்டானுங்க!"  என்று சொன்னதும் தான் தெரியும் அவர் தமிழர் என்று! கொஞ்சம் நெருக்கம் வந்ததும் அவர் நாமக்கல்காரர் என்று சொன்னார்! அவர் தாயார் ஒரு சீனப்பெண்மனி. அவ்வளவு தான் விஷயம்!

ஒரு முறை ஒரு "Mr.Menon" என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார்.நானும் சரி என்றேன். ஆனால் வந்து இறங்கியவரோ ஒரு சீனர்! என்னப்பா இது?    "எங்கப்பா மாதவ மேனன்! நான் மகாதேவ மேனன்! அம்மா சீனர்! நம்ம ஊருல இதெல்லாம் சகஜம் தானே!"  ஆமாம்!  அது உண்மை தான்!

எல்லாம் சரிதான். யார், எவர் என்று அடையாளம் காண்பதில் தானே சிக்கல்! தீடிரென ஒரு நாள் ஞானோதயம் ஏற்பட்டது!  அடடா! தமிழர்களை அடையாளம் காண்பதில் ஒரு சிக்கலும் இல்லை! வலது கையில், கோவிலில்  மந்தரித்தக்  கயிறு கட்டியிருப்பாளர்களே! அது தான் அடையாளம்!

இப்போது அந்த அடையாளத்தைத் தான் நான் பார்க்கிறேன். கயிறு கட்டி இருந்தால் அவர்களிடம் தைரியமாக தமிழில் பேசுகிறேன். இல்லாவிட்டால்? மலாய் தான் உத்தமம்!

அப்போதுங்கூட சில சமயங்களில் நமது புலமைக்கு அப்பாற்பட்ட மனிதர்களும்  இருக்கத்தான் செய்கிறார்கள்! அவர்களே பேசினால் தான் உண்டு!  அவன் பங்களாவா! நேப்பாளியா!.வியட்நாமியனா!

பல இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் இது போன்ற குழப்பங்கள் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை! இப்போது வெளி நாட்டினரும் சேர்ந்து கொண்டதால் குழப்பமோ குழப்பம்!

அடடா! தமிழர் தானே நீங்கள்?


No comments:

Post a Comment