
நான் மறக்க முடியாதது என்றால் பள்ளி, கடற்கரை ஓரமாக இருந்ததால் காலை பள்ளிக்கூடம் போனதும் முதல் வேலை மீன் பிடிப்பது தான்! அப்போது கரை கட்டப்படாத கடலாக இருந்ததால் தண்ணீர் வகுப்பறை அருகேவரையில் வரும். கடலையே பார்க்காத என்னைப் போன்றவர்களுக்குக் கடல் நீரைப் பார்ப்பதே மிகவும் மகிழ்ச்சியான விஷயம் தானே! மீன்களைப் பிடிப்பதும் அவைகளை மீண்டும் தண்ணிரீலேயே விடுவதும் எங்களின் காலை நேர விளையாட்டு! தண்ணீர் வெய்யில் வரும் நேரத்தில் எல்லாம் வடிந்துவிடும். கடலுக்குப் போகாமலே கடல் நீரில் விளையாடுவது அதற்குப் பின்னர் அமையவில்லை.
இன்னொரு மறக்க முடியாத நினைவுகள் என்றால் அந்த சமயத்தில் அங்கு விற்கப்பட்ட நாசிலெமாக். அந்தக் காலத்தில் பெரியவர்களால், அவர்கள் கைகளால், செய்யப்பட்ட நாசிலெமக் அதன் சுவையே தனி. அதன் பிறகு அந்தச் சுவையே கிடைக்கவில்லை. கொஞ்சம் சோறு, சம்பல், ஒரு ஊடான் - அது போதும். அதன் பின் பசி என்பதே இல்லை! ஆனால் அதன் விலையை என்னால் ஞாபகத்திற்குக் கொண்டுவர மூடியவில்லை. காரணம் அப்போது காற் காசு, அரைக் காசு, முக்கால் காசு, ஒரு காசு புழக்கத்தில் இருந்த நேரம். ஐந்து காசு கூட அப்போது இருந்ததா? தெரியவில்லை.
எப்படியோ இரண்டு ஆண்டுகளை அந்தப்பள்ளியில் கழித்துவிட்டேன். 1950-ம் ஆண்டு சிரம்பான் St.Paul's Institution பள்ளிக்கு என் தந்தையார் மாற்றிவிட்டார்.
அறிவோம்: புத்தகங்களைப் படிப்பது என்பது இப்போது மிகவும் குறைந்து போனது.இளம் பெற்றோர்கள் யாரும் புத்தகங்களைப் படிப்பதில்லை. கைப்பேசிகளிலேயே படித்துவிடுகிறோம் என்கிறார்கள். குழந்தைகள் படிப்பதைவிட பார்ப்பதைத் தான் விரும்புகிறார்கள். புத்தகங்கள படிப்பதை மீண்டும் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். அமெரிக்க முன்னாள் ஜனாபதி ஆபிரகாம் லிங்கன் 32 மைல் நடந்து போய் ஒரு புத்தகத்தை வாங்கி வந்தராம். அவரைப்பற்றி தான் இன்றுவரை உலகம் பேசிக் கொண்டிருக்கிறது. புத்தகத்தின் சிறப்பு அது தான்.
No comments:
Post a Comment