Thursday, 27 February 2025

செயின் போல் பள்ளி (14)




                        வனத்து சின்னப்பர் சிற்றாலயம்,தேர்ட் மைல் எஸ்டேட்
                                                               எஸ்டேட் நுழைவாயில்

நான் 
சிரம்பானில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்  எனது பெற்றோர்கள் சிரம்பான் அருகே அள்ள தேர்ட் மைல் எஸ்டேட்  (அதாவது தமிழில் மூனாங்கட்டை என்பார்கள்) அங்கே மாறி வந்தார்கள்.

அவர்கள் நோக்கம் சரியாக இருந்தாலும் குறைந்தபட்சம் நான் இரண்டு மைல் தூரம் நடந்து போக வேண்டும்! அதுவும் காட்டுவழியில்! நல்ல வேளை அப்போது  என்னோடு அச்சுதன் என்னும் இன்னொரு மாணவரும்  சேர்ந்து கொண்டார். அவர் வரவில்லை என்றால்  நான் தனியாகத்தான்  போக வேண்டும். நான் பள்ளிப் போகின்ற காலத்தில் விடுமுறை எடுத்ததாக நினைவில் இல்லை.

இந்தத் தோட்டம் எனக்கொரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.  எங்கள் வீட்டுப் பக்கத்திலேயே  சாரங்காபாணி என்னும் பெரியவர் சிறிய மளிகைக்கடை நடத்தி வந்தார். அவ்ர் தினசரி "தமிழ் நேசன்" நாளிதழை வாங்கிவந்தார். அப்போது தான் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் தான் "பராசக்தி" படம் வந்த நேரம்.  தமிழ்ப்பள்ளிகளில் படித்த பலர் சிவாஜி கணேசன் வசனங்களைப் பேசி கல்வியில் கோட்டை விட்டனர். அதில் என் நண்பன் சுகுமாரனும் ஒருவர்.  அவர் கருணாநிதியின் புத்தகங்களைக் கொண்டுவந்து குவிப்பார்! அவர் படித்தாரோ இல்லையோ நான் அனைத்தையும் படித்தேன்.

அப்போது தான் "இந்தியன் மூவி நியூஸ்" சினிமா மாத இதழ் சிங்கப்பூரிலிருந்த வந்த நேரம்.  அந்தோனி என்னும்  அண்ணன் ஒருவர் தவறாமல் அந்த மாத இதழை வாங்கி வருவார். நான் தவறாமல் படிப்பேன்!  பக்கத்து வீட்டுப் பெரியவர் ஒருவர் விக்கிரமாதித்தன், தேசிங்குராஜன்,  நல்லதங்காள்  புத்தகங்களை வாங்கிவந்து ராகம் போட்டுப் படிக்கச் சொல்வார். இப்படித்தான் பலதரப்பட்ட மாத இதழ்களை, நூல்களைப் படிக்கின்ற பழக்கம்  எனக்கு ஏற்பட்டது. பள்ளிப்பாடங்களுக்கு உதவ தான் யாருமில்லை!

நான் மேல் குறிப்பிட்ட அண்ணன் அரசாங்கத்தில் பதிவு இலாகாவில்  பணிபுரிந்தவர், அதனால் அவரே எனக்கு அலுவலகத்திற்குப் போகாமலே அடையாளக்கார்டை எடுத்துக் கொடுத்தவர். 

அந்தத் தோட்டத்தில் இருந்த போது ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.  அது தான் படிக்கின்ற பழக்கம்.



அறிவோம்: சீனாவின் அதிசய "மூங்கில் மரம்" பற்றி அறிந்திருக்கிறீர்களா?  விதையை  மண்ணில் விதைத்து, நான்கு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும்.தினசரி தண்ணீர் ஊற்ற வேண்டும், உரம் போட வேண்டும் ஆனால் எந்தவொரு வளர்ச்சியும் வெளியே பார்க்க முடியாது. அது தனது வேர்களை மண்ணுக்கு அடியில்  வலிமையாக ஆழப்படுத்திக் கொண்டு போகும்.  ஐந்தாம் ஆண்டு  அதன் தளிர்கள் தலை தூக்கும். பின்னர் அது கிடுகிடு என வளர்ந்து அடுத்த இரண்டு மாதத்தில் 150 அடிவரை வளருமாம்! 

No comments:

Post a Comment