சுமார் இருபது இலட்சம் மக்கள் கூடுகின்ற ஒர் இடத்தில் பல குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். நமது இனமோ இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக திருந்தும் இடத்தில் இருக்கின்றனர்.
இதில் ஒரு சிலர் குடித்துவிட்டு ஆட்டம் போடுவது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பக்தியைப் பரப்பும் இடத்தில் இப்படித்தானா குடியைப் பரப்புவது? ஒரு சிலருக்கு அது புரிவதில்லை? எங்கே வேண்டுமானாலும் குடிப்போம் என்று குடித்துவிட்டு வம்பு இழுப்பவனை யார் என்ன செய்வது? ஒரு வேளை அவனது குடும்பம் அப்படித்தான் இருக்க வேண்டும். எப்படியோ நாளடைவில் அவர்கள் திருந்துவார்கள் என நம்புவோம்.
ஒரு வகையில் பத்துமலை தேவஸ்தானம் பாரட்டப்பட வேண்டும். தேவையற்ற காவடிகளை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டனர். குடித்துவிட்டு ஆடுபவர்களையும் கட்டுப்படுத்தி விட்டனர். ஆனால் அதனையும் மீறித்தான் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிருக்கின்றன.
பெருங்கூட்டம் கூடும் இடங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். முன்பெல்லாம் திருடர்கள் வேற்று இனத்தவராக இருந்தார்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. நமது பெண்களே திருடர்கள்! அது தான் கொடுமையிலும் கொடுமை. சரி, யார் திருடினால் என்ன? திருட்டு திருட்டுத்தான். வேறு வழியில்லை.
அதனால் தான் பொது இடங்களில் நகைகளைப் போடாதீர்கள் என்று சொல்லுகிறார்கள். என்ன செய்ய? போட்டால் தானே மற்றவர்கள் பார்ப்பார்கள் என்று இவர்கள் சொல்லுகிறார்கள்! திருடு போனால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று புரிந்து கொண்டால் சரி! நிறைய மக்கள் கூடுகின்ற இடத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும். மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு பத்துமலை தைப்பூச திருவிழா, குறைந்த குறைபாடுகளோடு, சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்து முடிய நாமும் இறைவனை இறைஞ்சுவோம்.
No comments:
Post a Comment