Saturday, 22 February 2025

இப்படியும் எழுதலாமே! (9)



கடிதம் எழுதுவது எப்படி?  கடிதம் எழுதுவது ஒரு கலை.

 இடைநிலைப்பள்ளியில்  படிக்கும் போது இது போன்ற தலைப்புகளில் புத்தகங்கள் தேவைப்பட்டன.  மற்ற மாணவர்களைப் போல நானும் வாங்கிப் படித்திருக்கிறேன்.   மாதிரிக் கடிதங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். 

ஆனால் நடைமுறை என்று வரும்போது நமக்கு அப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை.  தமிழ்நாட்டிலிருந்து  உறவுகளிடமிருந்து கடிதங்கள் வரும். பதில் எழுத ஆளில்லை. அக்கம் பக்கமும்  ஆள் இல்லை.  என் பெற்றோர்கள் ஏதோ ஒவ்வொரு எழுத்தாகக் கூட்டிப் படிப்பார்கள். ஆனால் எழுதுவதற்கு உதவாது. எனக்கு அப்போது ஏழு வயது இருக்கும்.  என் தந்தையார் என்னை எழுதச் சொன்னார்.  நான் மூன்றாம் வகுப்புவரைத் தமிழ் பள்ளியில்  படித்திருக்கிறேன். எழுதுவேன்.  ஆனால் ஒவ்வொரு சொல்லாகச்  சொல்ல வேண்டும். அதுதான் விதிமுறை.

அப்படித்தான் நான் கடிதங்கள் எழுதினேன்! அக்கம் பக்கத்தாருக்கும் கடிதங்கள்  எழுதினேன்!  ஒன்று மட்டும் உறுதியானது.  நான் தமிழை மறக்க வழி இல்லாமல் போயிற்று.

அப்போதெல்லாம் கடித முகவரி எல்லாம் தமிழில் எழுதினால் போதும். நமக்கும் வந்து சேர்ந்துவிடும். அங்கும் போய் சேர்ந்துவிடும். அஞ்சலகங்களில் இலங்கைத் தமிழர்களின் ஆதிக்கம் அதிகம்.  காரணம் இதுதான். 

ஒரு மொழியை மறக்காமல் இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்து எழுதி பயிற்சி செய்வதுதான். இது தான் எனது அனுபவம். 


அறிவோம்:  மலேசியாவின் முதல் அஞ்சலகம் எதுவாக இருக்கும்?  தைப்பிங் நகரில் உள்ள அஞ்சலகம் தான் மிகப்பழமையான அஞ்சலகமாக கருதப்படுகிறது. 1884-ம்  ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்த அஞ்சலகம் இப்போது மியுசியமாக  மாற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment