Monday, 17 February 2025

பாஷாணம் சாப்பிட்டால் என்ன ஆகும்? (4)


 தோட்டங்களில் பாஷாணம் அடிப்பது சாதாரண விஷயம்.  செடி கொடிகள்,  புதர்கள், வளரும் லாலான்கள்  இவைகளுக்கெல்லாம்  பாஷாணம் அடிப்பது  எப்போதும் உள்ளது தான்.

தொழிலாளர்களுக்கு இதனை முன்னமையே அறிவித்துவிட்டால்  அவர்கள் தங்கள் மாடுகளை மேய விடமாட்டார்கள்.  கொட்டகையில் கட்டிப்போட்டு விடுவார்கள்.

ஒரு முறை  நிர்வாகம் அறிவிக்கவில்லை.  மாடுகள் மேய போய்விட்டன. மலைக்காடுகளில் மாடுகள் மயங்கி விழுகின்றன. அப்போதெல்லாம்  மாட்டு டாக்டர், கால்நடை இலாக்கா எல்லாம் கேள்விப்படாத காலம்.  மாடுகளையெல்லாம் இழுத்துக்கொண்டு வந்தார்கள். அதற்கான சிகிச்சை எந்த புண்ணியவான் சொன்னாரோ! எங்கள் வீட்டு முன் தான் சிகிச்சை நடந்தது.  அதில் எங்கள் மாடும் சம்பந்தப்பட்டிருந்தது.

என்ன சிகிச்சை?  மலத்தொட்டியிலிருந்து மனிதமலத்தை அள்ளிவந்து  மாட்டின் வாயில் ஊற்றி குடிக்க வைப்பது! அது தான் சிகிச்சை!  என்னவோ,  மாடுகள் பிழைத்துக்  கொண்டன!  நமக்கு என்ன தெரியும்? அது ஒரு வைத்திய முறை! அவ்வளவு தான். நஞ்சை நஞ்சால் தானே எடுக்க வேண்டும்?

5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைக் கண்டுபிடித்து  அப்போதே கத்தி, வாள்களைத் தயார் செய்த தமிழனுக்குத் தெரியாத  வைத்தியமா? என்ன கொஞ்சம் நாற்றமடிக்கும், அவ்வளவு தான்!

அந்தக் காலகட்டத்தில்  எங்களிடமும் ஓரிரு மாடுகள் இருக்கும்.  எல்லாம் பாலுக்காகத்தான். தயிர் எப்போதும் இருக்கும். அப்போதெல்லாம் பால் தூய்மையாக இருக்கும்.  அதன் பின்னர் என்னவோ  சீமை மாடு என்றார்கள், சீமைப்புல் என்றார்கள், அதிகம் பால் கறக்கும் என்றார்கள் ஆனால் நமக்கு அது ஒத்துவரவில்லை. அந்தப்பால் குடித்தாலே வயிற்றோட்டம் தான்! இப்போதுவரை அப்படித்தான்.அப்போது நாங்கள்  சிந்தி ரக மாடுகளைத்தான் வாங்குவோம்.  இப்போது சிந்தி மாடுகள் உள்ளனவா என்று தெரியவில்லை. எல்லாம் காலத்தின் கோலம்!


No comments:

Post a Comment