பிரதமர் வருவாரா? அப்படியெல்லாம் அவர் வந்துவிடமாட்டார் என்பது பலருக்குத் தெரியும். ஆனாலும் என்ன செய்ய? பிரதமர் ஆயிற்றே, அழைப்பது தேவஸ்தானத்தின் கடமை.
அவரும் பிரதமராயிற்றே! என்ன செய்ய? போகத்தான் வேண்டும். எம்.ஜி.ஆர். வேடம் போட்டாயிற்று! போகத்தான் வேண்டும்.
அப்படியும் வேண்டாம்! இப்படியும் வேண்டாம்! ஓர் இரண்டும் கெட்டான் நாளைத் தேர்ந்தெடுத்து போய் வந்துவிடுவோம் என்கிற நிலைமையில் தான் பிரதமர் வந்திருக்கிறார்.
அவரைக் குற்றம் சொல்லியும் புண்ணியமில்லை. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் நஜிப் பத்துமலைக்குப் போய் வந்தபிறகு இன்று அவர் என்ன நிலைமையில் இருக்கிறார் என்பதை பிரதமருக்கு நெருங்கியவர்கள் சொல்லத்தானே செய்வார்கள்? வாழ்நாளெல்லாம் கொள்ளையடிப்பவன் கூட மூடநம்பிக்கைகளை நம்பத்தானே செய்கிறான்! நாம் சாதாரணமாகச் சொல்வோம்: மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்பதாக. ஆனால் இன்று மடியில் கனமில்லாத அரசியல்வாதி யார்?
இப்போது பிரதமர் அன்வார் வருங்கால மலாய்த் தலைவர்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்திருக்கிறார். திருவிழா கொண்டாட்டத்திற்கு முன்பாகவே சும்மா தலையைக் காட்டிவிட்டுப் போய்விடுங்கள் என்பது தான் இதன் மூலம் அவர் கொடுக்கும் செய்தி. ஒரு வேளை அவருடைய மனசாட்சியின்படி அது சரியாகக் கூட இருக்கலாம்.
இந்த நேரத்தில் நாம் சொல்ல வருவதெல்லாம் இனி வருகின்ற திருவிழா காலங்களில் முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்காதீர்கள். அதனை அவர்கள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. இந்து சமயத்தைச் சார்ந்த தலைவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுங்கள். அதனை அவர்கள் மறுக்க மாட்டார்கள். மற்ற மதத்தினரை ஏன் வற்புறத்த வேண்டும்?
இனி இதுபோன்ற விஷயங்களில் தெளிவான முடிவு எடுங்கள். தேர்தல் காலம்வரும் இவர்களுக்கு ஒவ்வொரு கோவிலிலும் என்ன செய்ய வேண்டுமோ அப்போது செய்யுங்கள்! அப்போது இவர்கள் வாய் திறக்கமாட்டார்கள். நமக்கும் காரியம் ஆகும்!
No comments:
Post a Comment