Tuesday, 18 February 2025

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் எப்படி? (5)

அப்போதெல்லாம் பெருநாள் கொண்டாட்டம் என்றால் எங்களுக்கு கிறிஸ்துமஸ்  இன்னொன்று ஈஸ்டர்.

ஞாயிற்றுக்கிழமை  வழிபாடு என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத காலம். சுருக்கமாகச் சொன்னால்  போக்குவரத்து இல்லாத காலம்.   இந்த இரண்டு பண்டிகைகளுக்கும்  இரவில்  வழிபாடுகள் நடக்கும்.   தோட்ட நிர்வாகம்  லோரி கொடுத்து உதவி செய்யும். மாலை நேரத்தில்  லோரியில் ஏற்றிக் கொண்டு போய் கோவிலில்  இறக்கி விடுவார்கள்.  வழிபாடு  இரவு 11.30 க்கு.

கோவில் அருகிலேயேகிறிஸ்துவ பள்ளிக்கூடம். (St.Paul's Institution) அங்குள்ள பள்ளி மண்டபத்தில் அனைவரும் தங்கி இரவில்  வழிபாட்டுக்குப்  போவோம். அது போன்ற நாள்களில்  தியேட்டர்களில் புதிய தமிழ்ப்படம் ஒன்றை இரவு காட்சியாகப்  போட்டுவிடுவார்கள். அதைப் பார்த்துவிட்டுத்தான் இரவு வழிபாடு. அடுத்த நாள் காலை பஸ் பிடித்து வீடு திரும்புவோம். வீடுதிரும்புமுன் ஏதோ ஒரு சீனர் கடையில் மீ கோரெங் சாப்பிட்டுவிட்டுத்தான்  திரும்புவோம். அப்போது தமிழர்களின் சாப்பாட்டுக் கடை  ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை.

இது தான் பண்டிகைக் காலங்களில்  நமது வாடிக்கை.  பண்டிகை என்றாலே மகிழ்ச்சி  தானே. அதிக  மகிழ்ச்சி என்பது: லோரியில் பயணம் செய்வது 2) சினிமா படம் பார்ப்பது!  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை எல்லாம் பார்த்ததில்லை. 

ஆட்டு இறைச்சி சாப்பாடு என்பது  பண்டிகைக்காலம்  மட்டும் தான், ஓர் ஆட்டை வாங்கி  நாலைந்து குடும்பங்கள் கூர் போட்டுக் கொள்வார்கள். கோழி  இறைச்சி என்றால் வீட்டில் வளர்க்கப்படும் கோழி தான். அதற்கு வீட்டிற்கு யாராவது உறவினர்கள் வரவேண்டும்.  மீன் உணவைப் பார்த்ததில்லை. அதற்குச் சிரம்பான்  மார்க்கெட் போக வேண்டும். ஆனால் அதெல்லாம் ஒரு பிரச்சனையாகத்  தோன்றியதில்லை.  ஏங்கியதுமில்லை.

பண்டிகைகள் அப்போதும் மகிழ்ச்சியைக் கொடுத்தன இப்போதும் கொடுக்கின்றன.  வசதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  பண்டிகை என்பதே மகிழ்ச்சியான விஷயம் தான்!

No comments:

Post a Comment