Wednesday, 30 May 2018
இந்து சங்கம் அதிருப்தியா...?
அரசாங்கம் இந்து அறப்பணி வாரியம் அமைப்பதில் மலேசிய இந்து சங்கம் அதிருப்தி அடைவதாக இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ மோகன் தெரிவித்திருக்கிறார்.
அவர் அதிருப்தி தெரிவிப்பதில் முக்கியமான ஒன்று: கோவில் சொத்துக்கள் பற்றியது. மாற்று அரசாங்கம் வந்தால் அல்லது மதவாத அரசாங்கம் அமைந்தால் கோயில் சொத்துக்களை அவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கிறதே என்று அவர் கூறியதில் ஒரு நியாயம் உண்டு.
ஒரு விஷயம் ந்மக்குப் புரிகிறது. நமது இந்துக் கோயில்களில் நிறையவே சொத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பது டத்தோ மோகன் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
நமது கோயில்களில் ஏன் எப்போதும் கோயில் தலைவர்களிடையே அடிபுடி சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது இப்போது நமக்கு புரிகிறது.
இப்போது நமக்குத் தெரிகிற பிரச்சனை என்னவெனில் பணம் என்று வந்து விட்டால் உடனே அடிதடியும் கூடவே எழுந்து விடுகிறது என்பது தான்.
நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். பணத்தை ஏன் சேர்த்துக் கொண்டே போகிறீர்கள்? ஒரு கோயிலைப் பணக்கார கோயிலாக ஆக்குவது யார்? பக்தர்கள் தானே! அவர்கள் என்ன பணக்காரர்களா? அதுவுமில்லை. பெரும்பாலும் நடுத்தர மக்களே. இந்த நடுத்தர மக்களிடையே ஏகப்பட்ட பிரச்சனைகள் என்பதும் புதிய விஷயம் அல்ல.
இந்த நடுத்தர மக்கள் பிள்ளைகளின் கல்வி தான் எல்லாப் பிரச்சனைகளையும் விட முதன்மையான பிரச்சனை. இந்தக் கல்வி பிரச்சனையில் கோயில்கள் உதவி செய்தாலே நமது சமுதாயமே ஒரு பெரிய மாற்றத்தைக் காணும். கல்வி கற்ற சமுதாயம் என்பதே நமக்குப் பெருமையான விஷயம். இருக்கின்ற பணத்தை கல்விக்காக செலவு செய்வது மிகவும் புண்ணியம். அதைவிட பெரிய புண்ணியம் வேறு எதிலும் இல்லை. பணத்தை சேர்த்து வைத்து கோயிலைப் பணக்கார கோயிலாக மாற்றிவிட்டு பிறகு அதன் சொத்துக்காக அடித்துக் கொள்ளுவது நம்மிடையே அதிகம். பிறகு தலைவரின் வாரிசுகளையே மீண்டும் மீண்டும் தலைவராக ஒரு வாரிசைக் கொண்டு வந்து வேறு யாரும் தலைவராக ஆகாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
ஏன் இப்படிக் கோயிலுக்குத் துரோகம் செய்கிறோம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கல்விக்குச் செய்வதைவிட வேறு என்ன புண்ணியம் உண்டு. அதுவும் ஏழை சமுதாயம். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நமது கோயில்களுக்கும் கடமை உண்டு. பணத்தைச் சேர்த்து, சேர்த்து இப்போது 'கோயில் நடராஜா' வின் நிலை என்ன? ஓடி ஒளிய வேண்டியது தான்!
ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட சமீபத்தில் கோயிலின் பிரச்சனைக்குத் தான் வருகிறார்களே தவிர பள்ளிக்காக யாரும் வருவதில்லை என்கிறார்.
கடைசியாக, கோயிலுக்குப் பணத்தைச் சேர்த்து வைத்து அப்புறம் அதற்காக நீதிமன்றத்துக்கு அலையாய் அலைந்து கொண்டு இருப்பதை விட தலைவராக இருக்கும் போதே நல்ல காரியங்களைச் செய்யுங்கள். உங்களுக்குப் புண்ணியம் வந்த சேரும்.
Tuesday, 29 May 2018
பெர்னாமவில் மீண்டும் தமிழ்ச்செய்தி
கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெர்னாமா தமிழ், சீனச் செய்திகள் மீண்டும் வரக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனைப் பரீசீலனை செய்யுமாறு பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
முதலில் இது ஏன் நிறுத்தப்பட்டது என்பதைக் கவனிப்போம். ஒன்று சிக்கனம் கருதி நிறுத்தப்பட்டிருக்கலாம். சீனர்களுக்கோ, இந்தியர்களுக்கோ செய்திகள் தேவை இல்லை என்று அதிகாரிகள் நினைத்திருக்கலாம். இன்னொன்று பெர்னமா தருகின்ற செய்திகளை யாரும் சீண்டுவதில்லை எனவும் அவர்கள் நினைத்திருக்கலாம்.
கடைசியாக சொன்னது தான் சரி. செய்திகள் என்றால் கடைசி நிமிடம் கிடைக்கின்ற செய்திகளும் அவர்களின் செய்திகளில் இடம் பெற வேண்டும். எனக்குத் தெரிந்த வரை பெர்னமா தனது கடமையை சரி வர செய்யவில்லை என்பது தான்.
தமிழில் அவர்கள் செய்திகள் எப்படி இருந்தன. நேற்றைய செய்திகள், முந்தா நாள் செய்திகள் அப்புறம் செய்திச் சுருள்கள் - இப்படித்தான் அவர்கள் செய்திகள் அமைந்திருந்தன. புதிதாக ஏதேனும் செய்திகள் அவர்களிடம் இல்லை. இல்லை என்பதைவிட அவர்களுடைய அதிகாரிகள் புதிய செய்திகளை அனுமதிப்பதில்லை! அதற்கு ஒரு முட்டாள் தனமான காரணம் உண்டு! எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் பிரதான தேசிய மொழி செய்திக்குப் பின்னர் தான் மற்ற மொழிகளில் அந்தச் செய்திகள் வர வேண்டுமாம்! இவர்கள் தான் முட்டாள்கள் என்றால் மற்றவர்களையும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டார்கள்! பழைய செய்திகளைப் பார்க்க வேண்டும் என்பது என்ன நமது தலையெழுத்தா! இப்படித் தான் பழைய செய்திகளைக் கொடுத்து தமிழ்ச் செய்தியின் குரல்வலையைப் பிடித்து திருகிவிட்டார்கள்!
அப்புறம் இந்தியர்கள் பெர்னாமா தமிழ்ச் செய்திகளுக்கு வரவேற்புக் கொடுக்கவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு! வரவேற்பு இல்லையென்றால் அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளாமல் அந்தத் தமிழ்ச் செய்தியையே மூடி விடுவது என்பது முட்டாள்களுக்கு கைவந்த கலை! காரணம் அவர்களைப் பொறுத்தவரை வீண் செலவு!
இனி மேல் இவர்களின் செயல்பாடு எப்படி இருக்குமென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் தமிழ்ச் செய்தி என்பது இனிமையான செய்தி தான்!
Monday, 28 May 2018
கொடி பிடிப்பதை விடுங்கள்...!
ம.இ.கா. கலாச்சாரத்தை நம்மால் இன்னும் கை விடமுடியவில்ல! முப்பது, நாற்பது ஆண்டு கால பழக்கத்தை விடுவது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்குப் புரிகிறது!
நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இந்தியர்களில் பலர் சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர். அனைவருக்கும் நமது வாழ்த்துகள்!
சில இடங்களில் ஏதோ ஒரு சிலர் ஒன்று கூடி குறிப்பிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரை அமைச்சராக்க வேண்டும் என்று நாளிதழ்களில் அறிக்கை விடுவதைப் பார்க்கிறோம்.
இது முற்றிலும் ம.இ.கா. வில் இருந்த "இவர் பதவிக்கு வந்தால் நமக்கு இலாபம்" என்னும் சுயநல போக்குடையவர்கள் இப்படி அறிக்கை விட்டுக் கொண்டு இலாபம் தேட முயற்சி செய்வார்கள்!
இதனை நாம் தொடர வேண்டாம். யார் தகுதியானவர்கள் என்பது தலைமைக்குத் தெரியும். நாம் ஒருவரைச் சுட்டிக் காட்டும் போது மற்றவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்பது தானே பொருள்? என்ன முக்கியம்? அவரது சேவை தான் முக்கியம். அவரவர் வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். செய்ய விடுங்கள் என்பது தான் எனது வேண்டு கோள். இப்படி அறிக்கை விட்டு அந்தப் பதவி கிடைக்கவில்லை என்றால் ....? அவருக்கு என்ன ஆகும்? தான் எதற்கு வந்தோமோ அதனை மறந்து விடுவார்!
இன்று சராசரி குடிமகன் என்னும் முறையில் நாம் என்ன செய்ய வேண்டும்? நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ - அவர்கள் முன் கூனி குறுகி நிற்காதீர்கள். நமக்காக சேவை செய்யத்தான் அவர்களுக்கு அந்தப் பதவிகளைக் கொடுத்திருக்கிறோம். நம்முடைய பிரச்சனைகளுக்கு அவர்கள் தீர்வு காண வேண்டும். அது தான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. அந்த வேலைகளை அவர் செய்தால் போதும். அவர்களிடம் போய் பணம் கேட்டு பிச்சை எடுக்க வேண்டாம். தேவைகளுக்காக மட்டும் அவர்களிடம் போங்கள்.
மாண்புமிகுகளுக்கு அந்தப் பதவி கொடுங்கள், இந்தப் பதவி கொடுங்கள் என்று கொடி பிடிக்காதீர்கள். அது நமது வேலை அல்ல. அவர்களின் சேவையின் மூலம் பட்டங்கள்,பதவிகள் பெறட்டும். அந்தத் தகுதியை அவர்கள் வளர்த்துக் கொள்ளட்டும். அவர்களும் குறுக்கு வழிகளில் மக்களைத் தூண்டி விட்டு பதவியில் அமர வேண்டும் என்னும் எண்ணத்தை விட வேண்டும்.
இனி நமக்கு இந்த "கொடி பிடிக்கிற" வேலைகள் வேண்டாம்!
என்னடா பழக்கம் ....?
இது நோன்பு மாதம். முஸ்லிம்களின் புனித மாதம். காலையிலிருந்து மாலை வரை நோன்பு இருந்து - ஒரு நாள், இரு நாள் அல்ல - ஒரு மாத நோன்பு.
நோன்பு என்பது எல்லா மதங்களிலும் உள்ளது தான். ஆனால் தொடர்ந்தாற் போல் இருப்பதில்லை. ஏதோ ஒரு வகையில் வேறு பட்டிருக்கும். தனிப்பட்ட மனிதர்கள் ஒரு சிலர் மிகக் கடுமையான நோன்பு இருப்பதைப் பற்றி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.
நான் அது பற்றியெல்லாம் பேசப் போவதில்லை. காரணம் நான் நோன்பு இருந்ததில்லை! அதைப் பற்றி நான் அதிகம் அறிந்ததுமில்லை! மன்னிக்கவும்!
நான் சொல்ல வருவதெல்லாம், குறிப்பாக இந்த நோன்பு மாதத்தில், ஒரு சிலர் செய்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. என்ன இது,கண்ட இடங்களிலெல்லாம் எச்சில் துப்பும் பழக்கம்? சாதரணமாகவே பொது இடங்களில் எச்சில் துப்புவதை நான் விரும்பாதவன். ஆனால் இது நோன்பு மாதம். புனித மாதம். புனித மாதத்தில் இப்படி செய்வதைக் கூட புனிதம் என்று நினைக்கின்ற மனிதர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்! அப்படித் தான் நான் நினைக்கிறேன்!
இவர்களை எப்படி மாற்றுவது? அவர்களிடம் சொல்லவும் முடியவில்லை. காரணம் காலையிலிருந்து நோன்பு இருக்கிறார்கள். நாம் எதையாவது சொன்னால் அவர்கள் மனம் புண்படும். அவர்கள் நோன்பு எடுப்பதை நாம் கிண்டல் செய்கிறோம் என நினைப்பார்கள். இது கொஞ்சம் சிக்கலானது. இது சமயம் சம்பந்தப்பட்டது என்பதால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
ஆனால் இவர்களுக்கு இதனைப் புரியவைப்பது சமயவாதிகளின் கடமை. அதுவும் பள்ளிவாசல்களில் இதனை உணர்த்த வேண்டும். ஒருவர் நோன்பு எடுப்பது புனிதம் தான். அந்தப் புனிதம் அவருக்குப் போய்ச் சேருகின்றது. ஆனால் அவரே பொது வெளியில் எச்சில் துப்புவராக இருந்தால் அவர் எச்சில் துப்புவதன் மூலம் மற்றவர்களுக்கு வியாதியைப் பரப்புபவராக ஆகி விடுகிறார்!
எப்படி இருந்தாலும் இந்தப் பழக்கம் நிறுத்தப்பட வேண்டும். புனித மாதம் புனித மாதமாகவே இருக்கட்டும்! இந்தப் புனித மாதத்தில் புனிதமற்ற செயல்கள் வேண்டாம்!
Sunday, 27 May 2018
கல்வியில் மாற்றம் வரும்...!
கல்வியில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம். நமது புதிய கல்வியமைச்சர் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்னும் நம்பிக்கை உண்டு.
புதிய கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலேக் ஓர் இஸ்லாமிய கல்வியாளராக இருந்தாலும் அவரின் கீழ் கல்வி அமைச்சு சிறப்பாக இயங்கும் என நம்பலாம். ஆரம்பத்தில் அவர் தீவிரவாத அமைப்புக்களுடன் சம்பந்தப்பட்டவர் என்று சொல்லப்பட்டாலும் பின்னர் அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சொல்லப்படுகிறது.
டாக்டர் மஸ்லீ கல்வி முறை மாற்றத்தில் தனக்கு உத்வேகம் தறுவது பின்லாந்து நாட்டின் (Finland) கல்வி முறை என்கிறார். க்டந்த காலங்களில் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் அனைவருமே அரசியல்வாதிகளுக்குப் பயந்துகொண்டு தான் தங்களின் வேலைகளைச் செய்ய முடிகிறது. ஆசிரியர்களும் சரி கல்வி கற்கும் மாணவர்களும் சரி அனைவருமே சுதந்திரமாக இயங்க முடியவில்லை என்பது தான் உண்மை.
ஆனாலும் இனி இந்த நிலை இருக்காது. மாணவர்கள் கூன் விழுந்த முதுகுடன் புத்தகங்களை அடுக்கிக்கொண்டு போக வேண்டிய நிலை மாறும்.
அதுவும் இல்லாமல் நமது மாணவர்கள் மூன்று மொழிகள் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் டாக்டர் மஸ்லீ எதிர்பார்க்கிறார். தேசிய மொழி அதே சமயத்தில் ஆங்கிலம் முக்கியத்துவம் வாய்ந்த மொழியாகவும், மூன்றாவது மொழியாக தாய் மொழியும் தெரிந்து கொள்வது அவசியம் என்கிறார்.
டாக்டர் மஸ்லீ நாட்டில் நல்லதொரு கல்வி முறை அமைய நிச்சயம் வழிகாட்டுவார் என்று நம்பலாம்.
நம்மைப் பொறுத்தவரை தமிழ்ப்பள்ளிகள் தமிழ்க்கல்வி தொடர வேண்டும். தேசிய மொழியும், ஆங்கில மொழியும் தொடர வேண்டும். நமது கல்வியாளர்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஏற்ற முறையில் கல்வி கற்கும் வாய்ப்பை நமது மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலேக் அவர்களின் மூலம் கல்வி மேம்படும் என நம்பலாம்!
Saturday, 26 May 2018
உன்னால் முடியும் தம்பி..!
பதினான்காவது பொதுத் தேர்தலில் மலாக்காவில் ஒர் அதிசயம் நடந்திருக்கிறது.
மலாக்கா மாநில ஜனநாயக செயல் கட்சியின் உதவித் தலைவரும், காடேக் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.சாமிநாதன் சரித்திரம் படைத்திருக்கிறார். மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருக்கும் அவருடைய பின்னணி நம்மை வியக்க வைக்கும்.
முன்னாள் லாரி ஓட்டுனரான அவர் ஜனநாயக செயல் கட்சியின் நீண்ட கால உறுப்பினர். ஒரு லாரி ஓட்டுனராக இருந்த அவர் பின்னர் சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். இப்போது அவரின் நிறுவனம் இரண்டு லாரிகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் அவருக்கு ஓர் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து சேவையைத் திறம்பட செய்வார் என்பதில் ஐயமில்லை.
சேவை செய்தவதற்கும் கல்விக்கும் சம்பந்தம் இல்லை தான். ஆனாலும் இப்போதைய நிலையில் கல்வி மிக மிக முக்கியமானது என்பதை அவர் இப்போது புரிந்து கொண்டிருப்பார் என நம்பலாம். கல்வி என்பது பெரிய விஷயம் அல்ல. எப்போது வேண்டுமானாலும் நாம் நமது கல்வித் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. இப்போது வீட்டிலிருந்தே கல்வி பயிலுவதற்கான வசதிகள் உள்ளன. இந்தக் கல்விக்காக தினசரி ஒரு மணி நேரம் செலவழித்தாலே போதும். நீங்களும் பட்டதாரியாக ஆகி விடலாம். நமது உள்ளூர் பல்கலைக்கழகங்கள் கூட வாய்ப்புக்களை வழுங்குகின்றன.
இதெல்லாம் உங்கள் பின்னாலிருந்து பேசுபவர்களின் வாயை அடைக்க, அவ்வளவுதான்! கல்வி உங்களுக்கு ஒரு கம்பீரத்தை அளிக்கும். ஏன் தலைவர் லிம் கிட் சியாங் கூட ஆரம்ப காலத்தில் பத்திரிக்கை நிருபராக இருந்தவர். அதன் பின்னர், அவர் அரசியல் தளத்தில் இருக்கும் போது தான் அவர் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதே போல நீங்களும் செய்யலாம், தவறில்லை.
உங்களால் எதனையும் சாதிக்க முடியும். சீனர்களே அதிகம் உள்ள கட்சியில் உங்களால் உதவித் தலைவராக வர முடியும் என்றால் உங்களால் எதனையும் சாதிக்க முடியும். அதுவும் தமிழன் அல்லவா! நம்மால் எதுவும் முடியும்! பாரிசான் ஆட்சியையே அகற்றி விட்டோம் அல்லவா! நம்மால் முடியும்!
உன்னால் முடியும் தம்பி!
Friday, 25 May 2018
டாக்டர் மகாதிர். ஒரு முன் மாதிரி!
தங்களை வயதானவர்கள் என்று யார் நினைக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் டாக்டர் மகாதிர் ஒரு முன்மாதிரி.
ஐம்பது, அறுபது வயது கடந்து விட்டாலே நமக்கெல்லாம் வயதாகி விடுகிறது! அப்படி ஒரு பழக்கத்திற்கு நாம் அடிமையாகி விட்டோம். அதற்கு ஏற்றால் போல் நமது பிள்ளைகளும் "வயசாகி விட்டது! சும்மா வீட்டிலே இருங்க!" என்று சொல்லி நமக்கு நிரந்திர ஓய்வு கொடுத்து விடுகிறார்கள்!
நம்முடைய சீன சகோதரர்களைப் பாருங்கள். ஓய்வு என்று ஏதாவது உண்டா? எந்த வயதிலும் ஏதோ அவர்களால் முடிந்த வேலையைச் செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
ஆனால் இதனையெல்லாம் விட நமக்குத் தெரிந்த மிகப் பிரபலமான மனிதர் என்றால் இப்போதைய நமது பிரதமர் டாக்டர் மகாதிர் தான். அவருடைய வயது என்பது இப்போது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ரகசியம் ஒன்றுமில்லை. அவருக்கு வயது 93. இந்த வயதிலும் எப்படி உழைக்க முடிகிறது ?என்று கேள்விகள் எழுப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர்! அவர் நீண்ட காலம் ஓய்விலிருந்தவர். நாட்டு நடப்பு சரியாக இல்லை என்று தெரிந்ததும் களத்தில் இறங்கி விட்டார்.
அவர் டாக்டர் என்பதால் அவருக்கு ஒன்றும் வியாதி வராது என்று சொல்ல முடியுமா? அல்லது அவரது மனைவியும் டாக்டர் என்பதால் அவருக்கு வியாதி வராது சென்று சொல்ல முடியுமா? அவரவர் வியாதியை அவரவர் தான் சுமக்க வேண்டும் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
டாக்டர் மகாதிர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அதுவும் நமது IJ என்னில். அதற்கான மருந்துகளையும் இன்னும் சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும். அதனையெல்லாம் தவிர்க்க முடியாது.
ஆனால் எந்த வியாதி வந்தால் என்ன எல்லாம் நம் மனம் தான் காரணம். வியாதி இருக்கிறது. மருந்துகள் சாப்பிடுகிறோம். அவ்வளவு தான்! அதற்காக நாம் என்ன ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டா இருக்க முடியும்?
அது தான் டாக்டர் மகாதிரின் சிறப்பு. அவர் எல்லாக் காலங்களிலும் எப்போதும் போலத் தான் இருக்கிறார். ஓய்வில் இருந்தாலும் அவர் வழக்கம் போல சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார்! தன்னை எப்போதும் போல சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுகிறார்.
நாம் எவ்வளவு காலம் இருப்போம் என்பதெல்லாம் நம் கையில் இல்லை. ஆனால் இருக்கும் காலத்தில் நாம் நம்மை ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களுக்குப் பயன் தரும் வகையில் வாழ்க்கையை வாழ அமைத்துக் கொள்ள வேண்டும்.
வயதான மனிதர்களுக்கெல்லாம் மகாதிர் ஒரு எடுத்துக் காட்டு.93 வயதில் ஒரு பிரதமரா என்று உலகம் வியக்கிறது! அதுவும் இரண்டாவது முறையாக! முதல் முறை ஆளுங்கட்சி பிரதமர். இரண்டாவது முறை எதிர்கட்சி பிரதமர்!
வயது ஆனாலும் டாக்டர் மகாதிர் அடுத்த தேர்தல் வரை நிச்சயமாக இருப்பார்!
Wednesday, 23 May 2018
சிறிய கட்சிகளுக்கும் பொறுப்புகள் கொடுக்கப்பட வேண்டும்!
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஆட்சி அமைப்பதற்கு இந்தியர்களின் பங்கும் கணிசமானது என்பதை நாம் அறிவோம்.
ஒரு பேட்டியின் போது கூட பக்காத்தான் பிரமுகர் ஒருவர் இந்தியர்கள் 88 விழுக்காடு பக்காத்தானுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பதாகக் கூறியிருக்கிறார். யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை என்பது உண்மை தான். காரணம் நாம் எல்லாக் காலங்களிலும் ம.இ.கா. விசுவாசிகளாகவே இருந்து வந்திருக்கிறோம்.
நாம் இந்த அளவுக்குப் பக்காத்தானுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறோம் என்றால் நம்மிடையே உள்ள சிறு சிறு அரசியல் கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு. ஆனால் வெளிப்படையாக நமக்குத் தெரிந்தவை என்றால் வேதமூர்த்தியின் ஹின்ராப், இராஜரத்தினத்தின் நியு ஜென் கட்சிகள் தான். இன்னும் பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் வெளிப்படையாக ஆதரவு கொடுத்தவர்கள் இவர்கள் தான். அதுவும் குறிப்பாக நியு ஜென் கட்சியைப் பாராட்ட வேண்டும். இப்படித் துணிச்சலாக வெளியே வந்து பக்காத்தானோடு குரல் கொடுத்தவர்கள் நியு ஜென்.
நாம் சொல்ல வருவதெல்லாம் இது போன்ற சிறிய சிறிய கட்சிகள் எல்லாம் பக்காத்தானுக்காக உழைத்திருக்கிறார்கள் என்பது தான். இப்படி உழைத்த கட்சிகளுக்கு நிச்சயமாக ஓர் அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும்.
மேல்சபை என்று சொல்லப்படும் செனட்டர் பதவிகளுக்கு இந்தக் கட்சிகளில் உள்ளவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். அவர்களின் உழைப்புக்கு போதுமான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் பொறுப்புக்கள் தரப்பட வேண்டும். சும்மா பொம்மைகளாக தலையாட்டிவிட்டு போவோர்களாக இருக்கக் கூடாது. ஏற்கனவே அந்தத் தலையாட்டிகளை நாம் பார்த்து விட்டோம்! இனி வேண்டாம். இந்தியர்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் நிறையவே உள்ளன. செய்வதற்கு இன உணர்வும், மான உணர்வும் வேண்டும். அந்த உணர்வு உள்ளவர்கள் தான் சமுதாயதிற்குச் சேவை செய்ய முடியும்.
இப்போது பக்காத்தான் கட்சியில் உள்ளவர்களுக்கு அந்த இன உணர்வு உண்டு. நம்முடைய தேவைகள் அனைத்தையும் இன்றைய அரசாங்கத்தால் செய்ய முடியும். தொடர்ந்து அவர்கள் சேவையை நல்ல முறையில் தர முடியும். என நான் நம்புகிறேன்.
சிறிய கட்சிகளையும் கொஞ்சம் பாருங்கள் என கேட்டுக் கொள்ளுகிறேன்! வாழ்த்துகள்!
Tuesday, 22 May 2018
தலைப்பாகை ,மீண்டும் வலம் வர......!
இன்று காலை படித்த செய்திகளில் மிகப் பிடித்தமான செய்தி என்றால் அது நமது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் பதவியேற்றது தான். வழக்கம் போல என்றால் அது ஒரு சாதாரண நிகழ்வாக ஆகியிருக்கும். காரணம் இது நாள் வரை நாம் செம்மறியாடுகளின் பதவி ஏற்புக்களைத் தான் பார்த்து வந்தோம்!
குலசேகரனின் பாணி வேறு. அவர் மனிதவளத் துறை அமைச்சராக பதவி ஏற்கும் போது தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
தலைப்பாகையை நாம் மறந்து விட்டோம். அதனை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் குலா. அதுவும் நமது கலாச்சாரம் தான். தமிழகத்தில் விவசாயிகள் இன்றும் தலைப்பாகை அணிவதை நாம் பார்க்கிறோம். விவசாயிகள் அல்லாதவர் கூட எப்போதும் ஒரு துண்டோடு வலம் வருவதைப் பார்க்கலாம். ஏதாவது வேலையில் இறங்கும் போது உடனடியாக அந்தத் துண்டை எடுத்து தலைப்பாகையாக கட்டிக் கொண்டு களத்தில் இறங்குவர். அதாவது வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்குவர். தலைப்பாகைக் கட்டினாலே தானாகவே சுறுசுறுப்பு ஓட்டிக் கொள்ளும்!
தலைப்பாகைக் கட்டுவதை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. மீரா நியு ஜென் கட்சியின் தலைவர் இராஜரத்தினம் மட்டும் தான் தலைப்பாகை அணிபவராக இருக்கிறார்.
ஏதோ எப்படியோ தலைப்பாகைக்கு ஒரு புது மரியாதையைக் கொண்டு வந்திருக்கிறார் குலசேகரன். நமது இளைஞரிடையே ஒரு வேளை இது தொடரலாம். இனி இவரைப் போன்று பதவி ஏற்பு சடங்குகளில் பங்குபெறுபவர்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணம். இது தொடர வேண்டும். நமது கலாச்சாரமும் இஸ்தானா நெகராவில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
இனி பதவி உறுதிமொழி எடுக்கும் மாண்புமிகுகள் தலைப்பாகையைத் தொடர்வார்கள் என நம்புவோம்!
Sunday, 20 May 2018
பெயரில்லா தமிழ்ப் பள்ளிகள்...!
தமிழ் மலர் நாளிதழில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அக்கட்டுரையை எழுதியவர் எழுத்தாளர் 'இலக்கியக்குரிசில்' இராமையா மாணிக்கம் அவர்கள். மூவாரில் உள்ள தமிழ்ப்பள்ளி ஒன்றுக்கு முன்னாள் ம.இ.கா. தலைவர் டான்ஸ்ரீ க. பாசமாணிக்கம் பெயரை வைக்க வேண்டும் என்பதாக செய்தி. அவரின் பெயரை வைக்கக் கூடாது என்பதாக அவர் எழுதியிருந்தார். பாசமாணிக்கம் அவர்களால் சமுதாயம் எந்தப் பயனும் அடையவில்லை. அதனால் அவரின் பெயர் வைப்பது சரியானது அல்ல என்பது தான் அவர் சொல்ல வந்த செய்தி. நானும் அதனை வரவேற்கிறேன்.
தமிழ்ப்பள்ளிக்கு ம.இ.கா. தலைவர்கள் பெயர் வைக்க வேண்டுமென்றால் கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வேண்டும். அந்தத் தலைவர்கள் இந்தச் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகள் என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தலைவர்கள் சரியான சேவைகள் செய்திருந்தால் இந்தச் சமுதாயத்தின் நிலை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக போக வழியில்லை. யாருக்கும் புண்ணியமில்லாத - அவர்கள் குடும்பத்திற்கு மட்டுமே சேவை செய்ய வந்தவர்களின் பெயர்களை - தமிழ்ப்பள்ளிகளுக்குச் சூட்டுவது படிக்கும் மாணவர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.
இன்னும் பல தோட்டப்புற பள்ளிகள் பழைய தோட்டப் பெயருடனேயே குறிப்பிடப்படுகின்றன. அவைகள் மாற்றப்பட வேண்டும். தோட்டங்களே காணாமல் போய்விட்டன. பள்ளிகளுக்கு மட்டும் ஏன் அந்தப் பெயர்? சான்றுக்கு: லாடாங் பகாவ் தமிழ்ப்பள்ளி, லாடாங் செனவாங் தமிழ்ப்பள்ளி, லாடாங் சிரம்பான் தமிழ்ப்பள்ளி - இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். தோட்டங்களே இல்லாத போது அந்த லாடாங் ஏன் ஒட்டிக் கொண்டிருக்கிறது? ஒரு சில தலைமையாசிரியர்கள் ஒரு சில முயற்சிகள் எடுத்தும் அந்த "லாடாங்கை" மாற்ற முடியவில்லை. தமிழ்ப்பள்ளிகளைக் கேவலமாகவே வைத்திருக்க வேண்டும் என்னும் மனப்போக்கு கல்வி அதிகாரிகளிடமிருந்தது. போனது போகட்டும். இப்போது அதனை மாற்ற முடியும். இப்போது நமது நேரம். இப்போதே என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனைச் செய்ய முயற்சி செய்யுங்கள். சும்மா முயற்சியே செய்யாமல் பின்னர் குறை சொல்லுவதில் பயனில்லை.
புதிய பக்காத்தான்அரசாங்கத்தில் தமிழ்ப்பள்ளிகளின் நிலை மாறும் என நம்பலாம். ஆகவே சூட்டோடு சூடாக மாற்றங்கள் நிகழ வேண்டும். இனி தமிழ்ப்பள்ளிகளின் பெயர் மாற்றங்கள் கட்டாயம் நடைபெற வேண்டும். பள்ளிகளின் பெயர்கள் ஒன்று: தமிழ் வளர்த்த பெரியவர்களின் பெயர்களாக இருக்க வேண்டும். அல்லது தமிழோடு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களாக இருக்க வேண்டும்.
இனி 'இலக்கியக்குரிசில்' குறிப்பிட்டது போல பெயரில்லா தமிழ்ப்பள்ளிகள் இனி நமக்கு வேண்டாம்!
தமிழ்ப்பள்ளிக்கு ம.இ.கா. தலைவர்கள் பெயர் வைக்க வேண்டுமென்றால் கொஞ்சம் அதிகமாகவே யோசிக்க வேண்டும். அந்தத் தலைவர்கள் இந்தச் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகள் என்ன என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்படித் தலைவர்கள் சரியான சேவைகள் செய்திருந்தால் இந்தச் சமுதாயத்தின் நிலை இந்த அளவுக்கு கீழ்த்தரமாக போக வழியில்லை. யாருக்கும் புண்ணியமில்லாத - அவர்கள் குடும்பத்திற்கு மட்டுமே சேவை செய்ய வந்தவர்களின் பெயர்களை - தமிழ்ப்பள்ளிகளுக்குச் சூட்டுவது படிக்கும் மாணவர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.
இன்னும் பல தோட்டப்புற பள்ளிகள் பழைய தோட்டப் பெயருடனேயே குறிப்பிடப்படுகின்றன. அவைகள் மாற்றப்பட வேண்டும். தோட்டங்களே காணாமல் போய்விட்டன. பள்ளிகளுக்கு மட்டும் ஏன் அந்தப் பெயர்? சான்றுக்கு: லாடாங் பகாவ் தமிழ்ப்பள்ளி, லாடாங் செனவாங் தமிழ்ப்பள்ளி, லாடாங் சிரம்பான் தமிழ்ப்பள்ளி - இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். தோட்டங்களே இல்லாத போது அந்த லாடாங் ஏன் ஒட்டிக் கொண்டிருக்கிறது? ஒரு சில தலைமையாசிரியர்கள் ஒரு சில முயற்சிகள் எடுத்தும் அந்த "லாடாங்கை" மாற்ற முடியவில்லை. தமிழ்ப்பள்ளிகளைக் கேவலமாகவே வைத்திருக்க வேண்டும் என்னும் மனப்போக்கு கல்வி அதிகாரிகளிடமிருந்தது. போனது போகட்டும். இப்போது அதனை மாற்ற முடியும். இப்போது நமது நேரம். இப்போதே என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனைச் செய்ய முயற்சி செய்யுங்கள். சும்மா முயற்சியே செய்யாமல் பின்னர் குறை சொல்லுவதில் பயனில்லை.
புதிய பக்காத்தான்அரசாங்கத்தில் தமிழ்ப்பள்ளிகளின் நிலை மாறும் என நம்பலாம். ஆகவே சூட்டோடு சூடாக மாற்றங்கள் நிகழ வேண்டும். இனி தமிழ்ப்பள்ளிகளின் பெயர் மாற்றங்கள் கட்டாயம் நடைபெற வேண்டும். பள்ளிகளின் பெயர்கள் ஒன்று: தமிழ் வளர்த்த பெரியவர்களின் பெயர்களாக இருக்க வேண்டும். அல்லது தமிழோடு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களாக இருக்க வேண்டும்.
இனி 'இலக்கியக்குரிசில்' குறிப்பிட்டது போல பெயரில்லா தமிழ்ப்பள்ளிகள் இனி நமக்கு வேண்டாம்!
Saturday, 19 May 2018
டாக்டர் மகாதிர் இல்லை என்றால் பக்கத்தான் ஆட்சி சாத்தியமில்லை!
தேர்தலுக்குப் பின்னர், 60 ஆண்டு பாரிசான் ஆட்சிக்குப் பின்னர், டாக்டர் மகாதிர் இல்லையென்றால் பக்காத்தான் ஆட்சி சாத்தியமா என்று கேள்வி எழுப்பினால் சாத்தியம் இல்லை என்று தான் நான் சொல்லுவேன்.
நடந்த முடிந்த தேர்தலில் பக்காத்தான் 122 தொகுதிகளை வென்றது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன், 133 தொகுதிகளை வென்றதாகக் கூட இருக்கட்டுமே, அதனால் என்ன! யார் ஆட்சி அமைப்பார்? லிம் கிட் சியாங் ஆட்சி அமைக்க முடியுமா? முகைதீன் ஆட்சி அமைக்க முடியுமா? நஜிப் அந்த அளவுக்கு கேனையனா என்ன! சும்மா ஆட்சியைத் தூக்கிக் கொடுத்து விடுவாரா!
நஜிப்பை பொறுத்தவரை அவர் தேர்தலில் தோற்றுப் போனாலும் இராணுவம் மூலமாக ஆட்சியைத் தக்க வைத்தக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் இருந்தவர்.அது தான் அவருடைய 'பிளான் 2'! இதனைத் தேர்தலில் தோற்றுவிட்ட பிறகு அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதைக் கவனித்தால் புரியும். "யார் என்ன சொன்னாலும் பேரரசர் வந்த பிறகு தான் ஆட்சி அமைப்பது யார் என்று முடிவு செய்ய வேண்டும்" என்று மீண்டும் மீண்டும் சொன்னது அந்தக் காரணத்தினால் தான்! டாக்டர் மகாதிர் இல்லையென்றால் நஜிப் கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடித்திருப்பார்! அதில் சந்தேகமில்லை!
டாக்டர் மகாதிரைப் பொறுத்தவரை அவர் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர். நஜிப் தேர்தலில் தோற்றுவிட்ட பிறகு அவருடைய நடவடிக்கைகள் எப்படி அமையும் என்பதை ஓரளவு புரிந்து கொண்டவர். அதனால் தான் உடனடியாக தனது வேலைகளை ஆரம்பித்துவிட்டார். பேரரசரைப் பார்த்து ஆட்சி அமைப்பதற்கான ஆணையையும் பெற்று விட்டார். அதிகாரபூர்வமாக பிரதமர் என்றும் அறிவித்துவிட்டார். அதன் பிறகு தான் அவருடைய வேலைகள் ஆரம்பமாயின!
ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியால் தான் - அதுமட்டும் அல்ல அரசாங்க அனுபவப்பட்ட அரசியல்வாதியால் தான் - இது போன்ற 'அபாயகரமான" சூழலை சமாளிக்க முடியும்! டாக்டர் மகாதிர் மட்டும் இல்லையென்றால் நாம் இப்போது இராணுவ ஆட்சியில் கீழ் வலம் வந்து கொண்டிருப்போம்! அத்தோடு மக்களைப் பழி வாங்கும் எல்லைக்கும் நஜிப் போயிருப்பார்!
இந்தச் சூழலை டாக்டர் மகாதிர் ஒருவரால் மட்டுமே சமாளிக்க முடியும். வேறு யாராலும் முடியாது! லிம் கிட் சியாங் முடியாது! அன்வாராலும் முடியாது! முகைதீனாலும் முடியாது! வேறு யாராக இருந்தாலும் முடியாது!
டாக்டர் மகாதிர் அந்த இடத்தில் இருந்தார். அவர் ஆளும் அரசியல் சூழல் தெரிந்தவர். பல ஆண்டு அனுபவம் பெற்றவர். யாரை எப்படி குறி பார்த்து அடிப்பது என்பதைத் தெரிந்து வைத்திருப்பவர். அதனால் தான் அவரால் மிகவும் சாதுரியமாக இந்த அரசியல் சூழலை சமாளிக்க முடிந்தது! அதுவும் எந்த சேதாரமுமின்றி சமாளிக்க முடிந்தது!
உண்மையைச் சொன்னால் டாக்டர் மகாதிர் இல்லையென்றால் இப்போது பக்காத்தான் ஆட்சி இருக்காது! காரணம் நாடு சரியான வில்லனிடம் மாட்டிக் கொண்டிருந்தது! அந்த வில்லனிடம் இருந்து தப்பிக்க வைத்தவர் டாக்டர் மகாதிர்!
டாக்டர் மகாதிரால் தான் இன்று பக்காதான் ஆட்சி சாத்தியமாயிற்று என்பது உண்மை!
டாக்டர் மகாதிர் இல்லையென்றால் இன்று பக்காத்தான் ஆட்சி இல்லை!
ஆரம்பிச்சிட்டாங்கய்யா...!
தேர்தல் முடிந்துவிட்டது! எதிர்பாராதது நடந்து விட்டது!
இனி யாருக்கு என்ன பதவி என்பது பற்றியெல்லாம் பேச்சு வார்த்தைகள், பத்திரிக்கை அறிக்கைகள், பிரச்சாரங்கள் - எல்லாம் தூள் பறக்கும்! யாருக்கும் பொறுமை இல்லை! அறிக்கை விடுவதில் யார் முந்திக் கொள்ளுகிறார்களோ அவர்களுக்குத் தான் பதவி என்பதாக அவர்களே ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள்!
பதவிகள் இப்படியெல்லாம் வருவதில்லை, நண்பனே! அது அமைச்சர் பதவியாகட்டும், செனட்டர் பதவி ஆகட்டும், ஏதோ ஒரு குழுவில் அங்கம் பெருவதாக ஆகட்டும், அதெல்லாம் உங்கள் தலைவனுக்குத் தெரியும். எப்போது உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உங்கள் தலைவன் அறிவான். "நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், என்னால் தான் உங்களுக்கு அந்த வெற்றி கிடைத்தது, ஓட ஓட உழைத்தேன், வேர்வை சிந்த சிந்த உழைத்தேன்!" இது போன்ற கதைகளை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்! உங்கள் ஒருவரின் உழைப்பினால் யாரும் வெற்றி பெற வில்லை. இன்றைய இந்த வெற்றி என்பது ஒருவரால் வந்தது அல்ல. இளைஞர் சமுதாயத்தின் கூட்டு முயற்சி. ஒரு வெறித்தனமான உழைப்பு. நமது சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்கள். அதனால் ஏற்பட்ட கோபம், ஆத்திரம். இது ஒரு வகையான அமைதிப் புரட்சி என்று சொல்லலாம்.
அதனால் எதற்கும் அவசரப்படாதீர்கள். பொறுமையாய் இருங்கள். ம.இ.கா. வில் இவ்வளவு நாள் அடித்துக் கொண்டும், கடித்துக் கொண்டும் இருந்தோமே, அது போதும்! அப்போது இந்த சமுதாயம் என்ன பயன் அடைந்தது? அவர்களால் நாம் ஏமாந்தது தானே மிச்சம்! அதன் தொடர்ச்சியை இங்கும் கொண்டு வராதீர்கள்.
இப்போது நமக்குத் தேவை எல்லாம் பக்காத்தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள். அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றும் பட்சத்தில் உங்களுடைய உதவி அவர்களுக்குத் தேவைப்படும். அப்போது உங்களுக்குத் தேவையான பதவிகளும் உங்களைத் தேடி வரும்.
நீங்கள் நல்ல சேவையாளர் என்றால் பதவிகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் ஆள்களை வைத்து உங்களை விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை! உங்கள் சேவை தொடரட்டும்!
Friday, 18 May 2018
இரண்டு அமைச்சர்கள்...!
பதினான்காவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஓரு புதிய ஆரம்பம் ஏற்பட்டிருக்கிறது.
அமைச்சரவையில் இரண்டு இந்தியர்களுக்கு முழுமையான அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்னும் நீண்ட நாளைய கனவு இப்போதைய பக்கத்தான் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அன்றைய அரசாங்கத்தில் இரு முழு அமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்தவர் நம்மவர் தான்! அதுவே தொடர்ந்தது. அரசியல்வாதிகளின் பொறாமைக் குணத்திற்கு அளவே இல்லை!
Gobind Singh Deo
இன்றைய அமைச்சரவையில் இரண்டு இந்தியர்கள் முழு அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். நாடறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் மனிதவள அமைச்சராகவும், கர்ப்பாலின் புதல்வர் கோபிந்த் சிங் டியோ பல்லூடக,தொடர்புத்துறை அமைச்சராகவும் பிரதமர் டாக்டர் மகாதிர் அறிவித்தார்.
M.Kulasegaran
மலேசிய வரலாற்றில் ஒரு சீக்கியர் அமைச்சராவது இதுவே முதல் முறை. ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு. பாரிசான் அரசாங்கத்தில் அதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தலைவர்கள் அவர்களை வளரவிடவில்லை! காரணம் அவர்கள் படித்தவர்கள்! கோபிந்த் சிங் டியோ குடும்பத்தினருக்கு ஜ.செ.க. வுடனான தொடர்பு என்பது ஓர் ஐம்பது ஆண்டுகாலத் தொடர்பு. அவரது தந்தையார் கட்சிக்காக பல தியாகங்களைச் செய்தவர். பலமுறை சிறைக்குப் போய் வந்தவர், ஜ.செ.க. வோடு ஐக்கியமாகி விட்ட ஒரு குடும்பம். கோபிந்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் நியாயமான ஒரு செயல்.
அதே போல எம்,குலசேகரன். மலேசிய அரசியலில் மிகவும் பிரபலமான ஒரு பெயர். இந்தியர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளிலும் அவர் குரல் தான் முதலில் ஒலிக்கும். அதுவும் இந்திரா காந்தியின் மத மாற்ற வழக்கில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியவர். அதனால் மக்களிடையே இன்னும் பிரபலமானார். குலாவைத் தெரியாதவர் யார்? அப்படியே அவரை நமக்குத் தெரியவில்லை என்றாலும் அவருக்கு நம்மைத் தெரியும்! நமது பிரச்சனைகள் தெரியும். இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் எப்படி இருக்கின்றன, என்ன நிலையில் இருக்கின்றார்கள் என்பதை அவர் அறிந்தவர், மனித வள அமைச்சர் என்னும் முறையில் அவருக்கு வேலைகள் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றன.
இரண்டு முழு அமைச்சர்கள் என்று நாம் பெருமைப்படுகிறோம். அதே போல அவர்களும் இந்தச் சமுதாயம் பெருமைப்படும் அளவுக்குத் தங்களது உழைப்பை நல்க வேண்டும்.
இந்தச் சமூகம் வெற்றி பெற வேண்டும்! அதுவே நமது அவா!
இந்திய வாக்காளர்கள் 85%....!
14-வது பொதுத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் - 85 விழுக்காட்டினர் - எதிர்கட்சியான பக்காத்தானுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் என்ன பொருள்? இது நாள் வரை பாரிசானுக்கே காலங்காலமாக வாக்களித்து வந்தவர்கள் எப்படி, இப்படி ஒரு மன மாற்றத்துக்கு வந்தனர்?
தேர்தலின் சொல்லப்பட்டக் கணக்கு சுமார் 63 தொகுதிகளில் இந்தியர்கள் யாருக்குத் தலை ஆட்டுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும் என்று நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே வந்தன நமது ஊடகங்கள். இந்த 63 தொகுதிகளில் பாரம்பரியமாக நாம் பாரிசானுக்கு வாக்களித்து வந்திருக்கிறோம். இந்த முறை நாம் அப்படி வாக்களித்திருந்தால் ஒரு வேளை பாரிசானுக்கு இப்போது இருப்பதை விட 63 தொகுதிகளில் கூடுதலாக வென்றிருக்கலாம். ஆனால் இந்த 63 தொகுதிகளிலும் உள்ள வாக்காள இந்தியர்கள் எதிர்கட்சியான பக்காத்தான் பக்கம் திரும்பி விட்டார்கள்! பாரிசான் (ம.இ.கா.) என்னும் பாரம்பரியத்தை உடைத்து தகர்த்து விட்டார்கள்!
வயதானவரிடையே ம.இ.கா. கொஞ்சம் எடுபட்டிருக்கலாம். அது துன் சம்பந்தன் மேல் உள்ள பாசம்; முன்னாள் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் மேல் உள்ள "நல்லவர்" என்கின்ற அந்த அபிப்பிராயம். அவர்கள் தலைவர்களாக இருந்த காலத்தில் நாம் இந்த அளவுக்குக் கீழ் மட்டத்துக்குப் போகவில்லை. தரமான வாழ்க்கை முறை இருந்தது.
ஆனால் இப்போதைய நிலை வேறு. எல்லா வகையிலும் நாம் புறக்கணிக்கப்பட்டோம். நேற்று வந்த வங்காள தேசத்துவனுக்குக் கொடுக்கப்படுகின்ற மரியாதை கூட நமக்குக் கொடுக்கப்படவில்லை. இந்நாட்டில் பிறந்தவன் நாடற்றவன் ஆனால் வேறு நாட்டிலிருந்து வந்தவன் இந்நாட்டுக் குடிமகன்! பொங்கி எழுந்தனர் நமது இளைஞர்கள். அது போதும் பாரிசான் ஆட்சியை வீழ்த்த!
63 தொகுதியில் நமது வாக்குச்சீட்டு 85 விழுக்காடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது! ஒரு அரசாங்கத்தை வீழ்த்த அது போதும்.
அராஜகம் அதிகரிக்கப்படும் போது பொங்கி எழுவான் தமிழன் என்பதை நம் இளைஞர்கள் காட்டிவிட்டார்கள்! வாழ்த்துகள்!
Thursday, 17 May 2018
ம.இ.கா. ...அடுத்து என்ன?
ம.இ.கா.வைப் பற்றி பேசும் போதெல்லாம் நமக்குக் கோபம் வருவது இயற்கையே. காரணம் அந்த அளவுக்கு - அதுவும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவர்களை நினைக்கும் போதெல்லாம் - இந்திய சமூகத்தைச் சீரழித்து விட்டார்களே என்கிற கோபம் நமக்கு உண்டு.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில் அவர்களின் நிலை இன்னும் மோசமாகி விட்டது. அது நாம் எதிர்பார்த்த தோல்வி தான். அந்த அளவுக்கு இந்தியர்கள் அவர்கள் மேல் வெறுப்பை உமிழ்ந்திருக்கின்றனர்.
அது சரி, இனி மேல் இவர்களின் நிலை என்ன? இவர்களில் பெரும்பாலானோர் பட்டம், பதவி இல்லாமல் வாழ முடியாதவர்கள்! டத்தோ பட்டங்களுக்காக ஏங்குபவர்கள்! அல்லது செனட்டர் அ,ல்லது யாரோ ஒரு ஒருவருக்கு உதவியாளர் - இப்படித்தான் அவர்கள் சிந்திப்பாளர்கள்! இனி அவர்கள் ம.இ.கா. கிளைகளை விட்டுவிட்டு அவர்களின் பார்வையைப் பக்காத்தான் பக்கம் திருப்புவார்கள் என நம்பலாம்! அவர்கள் அப்படி திருப்பவில்லை என்றால் அவர்களின் கண் ம.இ.கா.வின் சொத்துக்கள் மீது இருக்கலாம்! ஆமாம் ம.இ.கா.வுக்கும் கணிசமான சொத்துக்கள் இருக்கின்றன, பல கோடிகள் என சொல்லப்படுகின்றது. அதனைக் கைப்பற்ற வேண்டும் என நினைப்பவர்கள் அங்கேயே ஒட்டிக்கொண்டு இருக்கலாம்.
ஆமாம், கட்சியை இவர்களால் காப்பாற்ற முடியுமா? முடியும். அதற்கு நிறைய உழைப்பு வேண்டும். அவர்கள் உழைப்பைப் போடத் தயாராக இல்லை! இத்தனை ஆண்டுகள் அரசாங்கம் கொடுத்த மானியங்களை வைத்து ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள் இனி அந்த ஆட்டம் ஆட முடியாது! பணம் இலவசமாக வர வழியில்லை! சொந்தப்பணத்தையும் போடத் தயாராக இல்லை!
ம.இ.கா. வால் இனி ஒரு பத்தாண்டுகளுக்காவது இந்தியர்களின் வெறுப்பிலிருந்து தப்பிவிட முடியாது! அதுவும் பக்காத்தான் அவர்களின் கடமையைச் சரியாகச் செய்தால் - இந்தியர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் - அவர்கள் ஏன் ம.இ.கா. பக்கம் போகப் போகிறார்கள்.
ஆளும் பக்கத்தான் கட்சியோடு ஒப்பிடும் போது ம.இ.கா.வில் படித்தவர்கள் இல்லை! படித்தவர்களை அவர்கள் வரவேற்பதில்லை! படிக்காதவர்களை வைத்துக் கொண்டு தான் அவர்கள் இந்தியர்களைச் சுரண்டிக் கொண்டிருந்தார்கள்!
அடுத்து என்ன? இனி ம.இ.கா. தலைதூக்க முடியாது!
Tuesday, 15 May 2018
சட்டத்துறைத் தலைவராக அம்பிகா சீனிவாசன்
அடுத்த சட்டத்துறைத் தலைவர் யார் என்னும் கேள்வி இப்போது மலேசியர்களிடையே விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி..
நடப்பு சட்டத்துறைத் தலைவர் அப்பாண்டி அலியை விடுமுறையில் செல்லுமாறு டாக்டர் மகாதிர் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்! ஆக, சட்டத்துறை அலுவலகம் இப்போது தலைவர் இல்லாமல் தலையாட்டிக் கொண்டிருக்கிறது!
இப்போது, சமூகப் போராளியும், முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவருமான அம்பிகா சீனிவாசன் அவர்களைச் சட்டத்துறைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்னும் மக்களின் குரல் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அம்பிகா அவர்களைப் பற்றி யார் குறை சொல்ல முடியும்? அவரின் நேர்மையைப் பற்றி யார் சந்தேகப்பட முடியும்? மனதில் பட்டதை ஒளிவுமறைவின்று பேசுபவர். அதனால் பல தொல்லைகளுக்கு ஆளானவர். ஆனால் அவர் யாருக்கும் பயப்படத் தயாராக இல்லை! பாரிசான் அரசாங்கத்தைப் பதவியில் இருந்து வீழ்த்த அவரும் ஒரு காரணமாக இருந்தவர். அவர் அரசாங்கத்தை எதிர்க்கிறார் என்பதனால் அம்னோ ரௌடிகள் அவர் வீட்டு முன்னால் கேலியும் கிண்டலுமாக 'போராட்டங்களை' நடத்தினார்கள்! இவர் அம்னோ ரௌடிகளுக்கெல்லாம் பயந்தவராகத் தெரியவில்லை! அவர்களே வேறு வழியில்லாமல் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ஓடிப்போனார்கள்!
பல போராட்டக் களங்களைச் சந்தித்தவர் அம்பிகா. சமீபகாலங்களில் அரசாங்கத்தை முழு மூச்சாக எதிர்த்து வந்தவர். அவர் அமரிக்க அரசாங்கம் வழங்கும் துணிச்சல் மிக்க பெண்மணி என்னும் வீரப்பெண்மணி விருதையும் பெற்றிருக்கிறார். அத்தோடு பிரான்ஸ் தேசத்தின் "செவாலியர்" என்னும் விருது கொடுத்தும் கௌரவிக்கப் பட்டிருக்கிறார்.
அம்பிகா சட்டத்துறைத் அலைவராக வந்தால் அது நாட்டுக்குப் பெருமை. நீதித்துறையில் நீதி விளங்க அவருடைய தலைமைத்துவம் தேவை. பார்ப்போம்!
Monday, 14 May 2018
டாக்டர் மைக்கல் தேவராஜ்...!
கடந்த பொதுத் தேர்தலில் நான் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தவர்களில் ஒருவர் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பி.எஸ்.எம். கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ்.
பொதுவாக அவரைப்பற்றியான ஒரு நல்ல அபிப்பிராயம் மக்களிடையே இருந்தது. அவர் நல்ல சேவையாளர் என்பதாக பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். அவரது மருத்துவ சேவையின் மூலம் அனைவருக்கும் மருத்துவத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார். அவர் மூலம் பழங்குடி மக்களும் பயன் அடைந்திருக்கிறார்கள்.
நல்ல சேவையாளர் தோற்றுவிட்டாரே என்று நினைக்கும் போது நமக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் ஒரு கருத்தை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். இது வரை நடந்த தேர்தல் நடைமுறைகள் வேறு. இந்த முறை நடந்தது முற்றிலும் வேறு. இந்த முறை போட்டி என்பது கட்சிகளுக்கு இடையே அல்ல. ஒரே ஓரு கோடு தான். டாக்டர் மகாதிர்- நஜிப் இவர்கள் இருவர் மட்டும் தான்.
இவர்கள் இருவரை வைத்துத் தான் தேர்தலே நடந்தது. ஆக இந்த முறை தேர்தல் நடைமுறையே மாறிவிட்டது. ஒன்று அவர் அல்லது இவர். அவரா இவரா மக்களே நீங்களே தேர்ந்தெடுங்கள் என்கிற பாணியில் தேர்தல் நடைபெற்றது. இது நமது நாட்டிற்கு புது பாணியிலான தேர்தல். ஒரு மாற்றத்திற்காக மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் டாக்டர் மகாதிர் தான் வெற்றிபெற வேண்டும் என மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். அதனால் தான் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தோற்றுப் போனார்.
அவரது தோல்வி நமக்கு வருத்தமே. ஆனால் மகாதிரின் கூட்டணீ வெற்றிப் பெற்றதில் நமக்கு மகிழ்ச்சியே!
Saturday, 12 May 2018
இராஜரத்தினம் என்ன சொல்ல வருகிறார்?
பக்கத்தான் ஆதரவு கட்சியான மிரா நியு ஜென் கட்சி என்ன சொல்ல வருகிறது?
அதன் தலைவர் இராஜரத்தினம் இந்தியர்களின் பல்வேறு பிரச்சனைகளைக் கலைய அரசாங்கம் இந்தியர்களுக்கென தனித் துறையை அமைத்து செயல்பட வேண்டும் என அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறார். இதில் முக்கியமானது அவரே சொல்லியிருப்பது போல குடியுரிமை, அடையாள ஆவணங்கள் இன்றி பல லட்சம் பேர் இருப்பதாக கூறியிருக்கின்றார்.
அவர் சொல்லுவது நியாயம் தான். இல்லையென்று யாரும் சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு கருத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பக்காத்தான் தனது தேர்தல் அறிக்கையில் இந்தியர்களின் குடியுரிமை, அடையாள அட்டை பிரச்சனையை, அவர்கள் பதவிக்கு வந்தால் (100) நூறு நாள்களில் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறது.
இப்போது இராஜரத்தினம் என்ன சொல்ல வருகிறார்? "எங்களுக்கு நூறு நாள்கள் எல்லாம் வேண்டாம் ஒரு பத்து வருடத்திலோ அல்லது 20 வருடத்திலோ முடித்துக் கொடுத்தால் போதும். அந்த அமைப்புக்கு நானே தலைவராக இருந்து உதவி செய்கிறேன்." என்று சொல்ல வருகிறாரா? அவர் தலைவராக வருவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் இப்படி ஒரு கருத்தை அவரோ அவரது கட்சியோ சொல்லக் கூடாது; வாயைத் திறக்கவும் கூடாது!
அவர்களால் நூறு நாள்களில் முடியும் என்று அவர்கள் சொல்லும் போது அதனை நாம் ஏற்றுக் கொண்டோம். அதற்குத் தான் நாம் அவர்களுக்கு வாக்களித்து பதவியில் அமர வைத்தோம். இன்னும் அமைச்சரவை அமைக்கப்படாத நிலையில் இப்படி ஒரு கருத்து நமது பக்கம் இருந்து போகக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
புதிய சமுதாயம் என்று சொல்லிக் கொண்டு பழைய பாணியிலேயே சிந்திப்பதை நிறுத்த வேண்டும். பழையவர்களாக இருந்தாலும் புதிய பாணியில் சிந்திக்க வேண்டும். நமது தாத்தா மகாதிர் அப்படித்தானே சிந்திக்கிறார்!
பகாத்தான் வாக்களித்தபடி இந்தியர்களின் குடியுரிமை, அடையாள அட்டை பிரச்சனை நூறு நாள்களில் தீர்க்கப்படும் என நான் நம்புகிறேன். இந்தியர்கள் அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையை இதன் மூலம் நிருபிக்க வேண்டும்.
பக்கத்தான் வாழ்க! வளருக!
அதன் தலைவர் இராஜரத்தினம் இந்தியர்களின் பல்வேறு பிரச்சனைகளைக் கலைய அரசாங்கம் இந்தியர்களுக்கென தனித் துறையை அமைத்து செயல்பட வேண்டும் என அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறார். இதில் முக்கியமானது அவரே சொல்லியிருப்பது போல குடியுரிமை, அடையாள ஆவணங்கள் இன்றி பல லட்சம் பேர் இருப்பதாக கூறியிருக்கின்றார்.
அவர் சொல்லுவது நியாயம் தான். இல்லையென்று யாரும் சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு கருத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பக்காத்தான் தனது தேர்தல் அறிக்கையில் இந்தியர்களின் குடியுரிமை, அடையாள அட்டை பிரச்சனையை, அவர்கள் பதவிக்கு வந்தால் (100) நூறு நாள்களில் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறது.
இப்போது இராஜரத்தினம் என்ன சொல்ல வருகிறார்? "எங்களுக்கு நூறு நாள்கள் எல்லாம் வேண்டாம் ஒரு பத்து வருடத்திலோ அல்லது 20 வருடத்திலோ முடித்துக் கொடுத்தால் போதும். அந்த அமைப்புக்கு நானே தலைவராக இருந்து உதவி செய்கிறேன்." என்று சொல்ல வருகிறாரா? அவர் தலைவராக வருவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் இப்படி ஒரு கருத்தை அவரோ அவரது கட்சியோ சொல்லக் கூடாது; வாயைத் திறக்கவும் கூடாது!
அவர்களால் நூறு நாள்களில் முடியும் என்று அவர்கள் சொல்லும் போது அதனை நாம் ஏற்றுக் கொண்டோம். அதற்குத் தான் நாம் அவர்களுக்கு வாக்களித்து பதவியில் அமர வைத்தோம். இன்னும் அமைச்சரவை அமைக்கப்படாத நிலையில் இப்படி ஒரு கருத்து நமது பக்கம் இருந்து போகக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
புதிய சமுதாயம் என்று சொல்லிக் கொண்டு பழைய பாணியிலேயே சிந்திப்பதை நிறுத்த வேண்டும். பழையவர்களாக இருந்தாலும் புதிய பாணியில் சிந்திக்க வேண்டும். நமது தாத்தா மகாதிர் அப்படித்தானே சிந்திக்கிறார்!
பகாத்தான் வாக்களித்தபடி இந்தியர்களின் குடியுரிமை, அடையாள அட்டை பிரச்சனை நூறு நாள்களில் தீர்க்கப்படும் என நான் நம்புகிறேன். இந்தியர்கள் அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையை இதன் மூலம் நிருபிக்க வேண்டும்.
பக்கத்தான் வாழ்க! வளருக!
Friday, 11 May 2018
ம.இ.கா.விற்கு வெட்கமில்லை!
ம.இ.கா. தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது தான் பொதுவாக நமது ஆசை. காரணம் அக்கட்சி இந்தியர்களின் நலனில் எந்தவித அக்கறையும் காட்டாமல் ம.இ.கா. தலைவர்களின் நலனில் அக்கறை காட்டியது தான் அவர்கள் இந்திய சமுதாயத்திற்குச் செய்த துரோகம்.
அந்தக் கட்சியின் எந்தத் தலைவனுமே சாதாரண வாழ்க்கையோ, நடுத்தர வாழ்க்கையோ, நடுத்தரத்திற்கு மேம்பட்ட வாழ்க்கையோ வாழவில்லை என்பதே அதற்குச் சான்று.
இப்போது நடைப்பெற்ற பதினான்காவது பொதுத்தேர்தல் பெரும்பாலும் அவர்களைத் துடைத்தொழித்து விட்டது என்பதை நாம் அறிவோம்.
ஆனாலும் ம.இ.கா.வினர் இந்தத் தேர்தல் தோல்வி பற்றி வெட்கப்பட ஒன்றுமில்லை. ஒரே காரணம் இந்தத் தேர்தலில் ம.இ.கா.வினர் மட்டும் தோல்வியடையவில்லை. அனைத்து பாரிசான் கட்சியினருமே தோல்வியடைந்திருக்கின்றனர். அம்னோ பெருந்தலைகள், ம.சீ.ச. பெருந்தலைகள் அனைவருமே தோல்விகளைத் தழுவியிருக்கின்றனர். அம்னோ இந்த அளவு தோல்வி அடையும் என்பதை யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும் அது நடந்தது! அம்னோவோடு ஒப்பிடும் போது ம.இ.கா.வின் தோல்வி பெரிதாக ஒன்றுமில்லை!
ம.இ.கா. தோல்வி அடைய வேண்டும் என்பது தான் இந்திய சமுதாயத்தின் எண்ணமாக இருந்தது என்பது உண்மை. ஆனால் நமது எண்ணம் வேறு விதமாக இருந்தது. அந்தக் கட்சி அடித்து நொறுக்கப்பட வேண்டும், மீண்டும் தலைதூக்கக் கூடாது, அவமானப்பட்டு புழுங்கிச் சாக வேண்டும் என நாம் நினைத்தோம். ஆனால் அது நிகழவில்லை. அம்னோ தோற்றது, ம.சீ.ச. தோற்றது, இவர்களும் தோற்றார்கள்! அவ்வளவு தான். நாம் நினைத்தது நடக்கவில்லை. மற்ற பாரிசான் கட்சிகளுக்கு என்ன நடந்ததோ அதுவே தான் இவர்களுக்கும் நடந்தது! அதனால் அவர்கள் வேட்கப்படும்படியாக ஒன்றும் நடக்கவில்லை.
இனி ம.இ.கா.வை வழி நடத்தி, அதனது பழைய நிலைக்குக் கொண்டுவர துன் சம்பந்தன் இல்லை! அவர் தான் கட்சிக்கு "சேவை" என்னும் நல்லதொரு பாதையைக் காண்பித்து விட்டுப் போனார். பின்னர் வந்தவர்கள் "தேவை" என்பதைக் காட்டிவிட்டுப் போனார்கள்! இவர்கள் பணம் போட்டுக் கட்சியை வளர்க்க மாட்டார்கள்! இன்னொருத்தர் போட்டு வைத்தால் அதனில் பயணம் செய்வார்கள்!
எது எப்படி இருப்பினும் இந்தத் தோல்வியினால் ம.இ.கா.வினர் வெட்கப்பட ஒன்றுமில்லை, நாம் நினைத்தது நடக்கவில்லை என்பதைத் தவிர!
Monday, 7 May 2018
இது தான் கடைசி வாய்ப்பு...!
இது தான் கடைசி வாய்ப்பு, நண்பர்களே! சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். சொல்லுகிறேன். தவற விட்டால் அதற்கானத் தண்டணையை அனுபவிக்கப் போகிறவர்கள் நாமாகவும் இருக்கலாம்; நமது பிள்ளைகளாகவும் இருக்கலாம்; நமது பேரன் பேர்த்திகளாகவும் இருக்கலாம்.
நாளை நடக்கும் (9.5.2018) பதினான்காவது பொதுத் தேர்தலைத் தான் சொல்லுகிறேன்.
இந்தத் தேர்தல் டாக்டர் மகாதிர்- நஜிப்புக்குமானப் போட்டி என்பதை மட்டும் நினைவிற் கொள்ளுங்கள். மகாதிர் தொடர்ந்து 22 ஆண்டுகள் பிரதமராக இருந்தவர். அவர் கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கியவர். அவருடைய வயது 93. இந்த வயதில் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்து நடப்பு அரசாங்கத்தை எதிர்க்கிறார் என்றால்....? நமது நாட்டின் நடப்பு எப்படி இருக்கிறது - எவ்வளவு அபாயகரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேலை இல்லாப் பிரச்சனை, GST பிரச்சனை. விலைவாசி பிரச்சனை இன்னும் பல. அது பொதுவான நமது நாட்டின் பிரச்சனை.
நமது இந்தியர்களின் பிரச்சனைகள் என்ன? மிகப் பெரிய பிரச்சனை இந்தியர்களின் குடியுரிமை, அடையாளக்கார்டு. ஆமாம் இங்கு இந்த நாட்டில் பிறந்த லட்சக்கணக்கான பேர் நீல நிற அடையாளக் கார்டுகள் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஏதோ ஒரு தவறைச் சுட்டிக்காட்டி அடையளக்கார்டுகள் கொடுக்கப்படுவதில்லை. அந்தத் தவறுகளை வெளியிலிருந்து யாரும் வந்து செய்வதில்லை. செய்வதே அரசாங்க ஊழியர்கள் தான்! மடையர்களை வேலையில் வைத்துக் கொண்டு மற்றவர்களையும் மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! நம்மை நாடற்றவர்கள் என்று சொல்லும் போது நமக்கு அது வலியைத் தருகிறது. நேற்று, முந்தாள் வந்த வங்காளத்தேசிகள் இந்நாட்டுக் குடிமகனாக தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். ஒரே காரணம் அவர்கள் இஸ்லாமியர்கள். இப்படி ஒரு காட்டுமிராண்டி அரசாங்கத்தை எங்கே பார்க்க முடியும்?
யாரும் கேள்விகள் கேட்க முடியாத ஒரு நாதியற்ற சமூகமாக நாம் இருக்கிறோம். நமது மொழியின் நிலை என்ன. இரு மொழி திட்டம் என்று சொல்லி தமிழை ஒழிக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள் மீண்டும் பதவிக்கு வந்தால் அம்னோவும், ம.இ.கா.வும் சேர்ந்து தமிழை ஒழித்து விடுவார்கள். 200 ஆண்டுகளாக இந்த நாட்டில் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்குப் பெருமை சேர்க்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. ஆனால் தமிழ் அவமதிக்கப்படுகிறது. நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
நமது இனம் தலை நிமிர, வருங்காலத்தில் நமது இனம் செம்மையான வாழ்க்கை வாழ அரசியல் மாற்றம் வேண்டும். வெறும் வாக்குறுதிகள நம்பி வாக்களிக்க வேண்டாம். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை! மீண்டுமா வாக்குறுதி!
நண்பர்களே இது கடைசி வாய்ப்பு. பாரிசானை வீழ்த்த வேண்டும். டாகடர் மகாதிர் தான் மீண்டும் பிரதமராக வர வேண்டும்.
டாக்டர் அரசாங்கம் தான் வரவேண்டும். நோயாளியிடம் அரசாங்கம் இருக்கக் கூடாது!
பெரிசு: 93, சிறிசு: 22.....!
இந்தத் தேர்தலில், முதன் முறையாக, முதுமையானவர் ஒருவர் போட்டியிடுகிறார் என்றால் அது டாக்டர் மகாதிர். அவருக்கு வயது 93. ஆக இளமையானவர் போட்டியிடுகிறார் என்றால் அது பி. பிரபாகரன். அவருக்கு வயது 22.
.
டாக்டர் மகாதிரைப் பற்றியான அறிமுகம் தேவை இல்லை. ஆனால் அவர் இந்த 22 வயதான பிரபாகரனை ஆதரிக்கும்படி பிரச்சாரம் செய்கிறார்.
யார் இந்த பிரபாகரன்? இவர் சுயேட்சை வேட்பாளராக பத்து தொகுதி நாடாளுமன்றத்திற்கு போட்டியிடுகிறார். இன்னும் அவர் தனது சட்டக்கல்வியை முடிக்கவில்லை. இன்னும் இரண்டு வாரத்தில் தனது சட்டக்கல்வி தொடர்பான பரிட்சை எழுத வேண்டியவர். படிக்க வேண்டிய இக்கட்டான நேரத்தில் அரசியல் பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார். சுயேட்சை வேட்பாளர் ஜெயிக்க முடியுமா?
ஆனால் இங்கு தான் யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டது. இவர் போட்டியிடுவது சாவி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக. அவர் போட்டியிடுவதே ஒரு தமாஷான விஷயமாக கருதப்பட்டது. ஆங்காங்கே இவரைப் போன்ற சுயேட்சைகள் தேர்தலில் நிற்பது என்பது வாடிக்கை தான். அதில் பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று வாக்குகளைப் பிரிப்பது. ஆனால் இவர் ஒரு சட்டத்துறை மாணவர் என்பதால் அவர் அரசியல் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் காரணமாக இருக்கலாம். அவர் வேடிக்கையாக செய்த ஒன்று வினையாகப் போகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இந்தப் பத்து தொகுதியில் முன்னாள் இரு முறை நாடாளுமன்ற உறுப்பினரும் போராளியுமான தியான் சுவா இந்தத் தேர்தலில் போட்டியிட முடியாத ஒரு சூழலை தேர்தல் ஆணையம் உருவாக்கி விட்டது. அவர் பி.கே.ஆர். சார்பாக தேர்தலில் போட்டியிட வேண்டியவர். ஆனால் வாய்ப்புக் கொடுக்கப்பட வில்லை. அவர் போட்டியிடவில்லை என்றால் அது பாரிசானுக்கு வெற்றியைக் கொடுக்கலாம். அதனைத் தவிர்க்கவே பி.கே.ஆர். பிரபாகரனிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தி அவர்கள் சார்பில் போட்டியிட சம்மதிக்க வைத்தனர். அதனால் சுயேட்சை என்ற பெயர் போய் அவர் பி.கே.ஆர். வேட்பாளராக இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவருடைய வெற்றி வாய்ப்புக்கள் எப்படி? சிறப்பாகவே இருக்கும் என நம்பலாம். தியான் சுவாவின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கே வாக்களிப்பார்கள் என்பது உறுதி. மகாதிரின் ஆதரவாளர்கள் பிரபாகரனுக்கே வாக்களிப்பார்கள் என்பதும் உறுதி. அதே சமயத்தில் இவருக்காக தியான் சுவா மட்டும் அல்ல டாக்டர் மகாதிரும் பிரச்சாரம் செய்திருக்கிறார் என்பது மிகப்பெரிய விஷயம்.
பிரபாகரனின் ஆரம்பமே 'அதிருதல்ல!' என்று சொல்லும்படியாக இருக்கிறது! டாக்டர் மகாதிரின் மோதிரக்கையால் கொட்டு வாங்கியிருக்கிறார்! நீ வெற்றி பெறுவாய் இளைஞனே! வாழ்த்துகள்!
Sunday, 6 May 2018
ஏன் டாக்டர் மகாதிர்..?
ஏன் டாக்டர் மகாதிர் என்பது தான் இன்றைய கேள்வி.
வருகின்ற பொதுத் தேர்தலில் யாருக்கு யார் போட்டி? அது டாக்டர் மகாதிர் - நஜிப் இவர்கள் இருவருக்குத் தான் போட்டி. கட்சிகளையெல்லாம் மறந்து விடுங்கள். முன்பெல்லாம் யாரை யாரையெல்லாம் சொன்னோம் என்றால் ஜ.செ.க.யின் லிம் கிட் சியாங் அதில் முக்கியமானவர். ஒரு சீனரோ அல்லது இந்தியரோ இந்த நாட்டின் பிரதமராக வர முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் இப்படிப் பேசியே ஆளுங்கட்சியினர் நமக்கு ஒரு பயமுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே வந்தனர்.
ஆனால் இன்று அந்த நிலை இல்லை. டாக்டர் மகாதிர் தான் பிரதமர் பதவிக்கான போட்டியாளர். டாக்டர் மகாதிரா அல்லது நஜிப்பா என்பது தான் இன்று நம் முன் உள்ள கேள்வி.
இப்போதெல்லாம் எந்தக் கட்சிக்கு உங்கள் வாக்கு என்பதல்ல கேள்வி. டாக்டர் மகாதிரா அல்லது நஜிப்பா அது தான் கேள்வி. மக்களின் மன நிலை என்ன? விலைவாசிகள் விஷம் போல் ஏறிவிட்டன. வேலை வாய்ப்புக்கள் குறைந்து விட்டன. நீண்ட காலம் வேலை செய்து வந்த நடுத்தர வயதினர் வேலை நீக்கம் செய்யப்பட்டு இப்போது வேலைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. இருக்கின்ற பல உலக நிறுவனங்கள் "மூட்டையைக்கட்டிக்" கொண்டு வெளி நாடுகளுக்குத் தங்களது தொழிலை மாற்றிக் கொண்டனர். இது ஏன் நடந்தது என்று அரசாங்கத்தால் அறிய முடியவில்லை!
இதனையே கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள். மகாதிர் காலத்தில் விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருந்தன. நிறைய உலக நிறுவனங்கள் தங்களது கடைகளைத் திறந்தனர். வேலை வாய்ப்புக்கள் குவிந்தன. வேலையில்லாத் திண்டாட்டம் என்பதை நாம் கேள்விப்படவில்லை.
இப்போது இது தான் கேள்வி. அதெப்படி மகாதிர் காலத்தில் நமக்கு அவ்வளவாக இல்லாத சிரமங்கள் இப்போது நஜிப்பின் ஆட்சியில் அதிகமான சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது? "பிரிம்" என்பதெல்லாம் ஒரு சாதனை அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் வேலை வேண்டும்; சாப்பாடு வேண்டும்; பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்; தங்க வீடு வேண்டும். மகாதீர் காலத்தில் ஒரு ஏழையால் வீடு வாங்க முடிந்தது. நஜிப் காலத்தில் அது சாத்தியம் அல்ல என்னும் நிலை உருவாகி விட்டது.
அதனால் தான் டாக்டர் மகாதிர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்னும் மன நிலை மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. மலேசிய நாடு மீண்டும் உலகளவில் கொடிகட்டிப் பறக்க வேண்டுமென்றால் - டாக்டர் மகாதீரால் மட்டுமே முடியும்!
டாக்டர் மகாதிர் என்னும் மந்திரச் சொல்!
டாக்டர் மகாதிர் என்பது ஒரு மந்திரச் சொல். அவரிடம் நாம் எவ்வளவோ குறைகள் கண்டோம் அதுவும் குறிப்பாக நமது சமூகத்தினர் மிக அதிகமாகக் குறைகளைக் கண்டோம். பின்னர் நாம் கண்டு கொண்டதெல்லாம் அது டாக்டர் மகாதிரின் குற்றமல்ல நமது ஏகபோகத் தலைவர், தானைத் தலைவர் அவர்களின் குற்றம் என்று! ஆனால் தானைத் தலைவரோ அவரது குருநாதர் டாக்டர் மகாதீர் மீதே குற்றம் சொல்லுகிறார்!
ஆனால் ஒன்றைக் கவனித்தீர்களா? "அப்படி நான் இந்தியர்களுக்கு ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்" என்று அவரின் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கும் அந்தக் குணம் யாருக்கு உண்டு! சாமிவேலு கூட இந்தச் சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்கவில்லையே!
சரி அதனை விடுவோம். இந்தத் தேர்தலில் டாக்டர் மகாதிரீன் நிலை என்ன? இது நாட்டின் 14வது பொதுத் தேர்தல். மகாதிரோ எத்தனையோ தேர்தல் களம் கண்டவர். முன்பு அரசை ஆண்டவர். இப்போது எதிர்கட்சிகளின் பிரதமராகப் போட்டியிடுகிறார்! உலகமே மகாதிரைத் திரும்பிப் பார்க்கிறது. அது எப்படி? முன்னாள் பிரதமர் இந்நாள் பிரதமராக வரப் போட்டியிடுகிறார் என்றால் அதிசயம் தானே!
ஆமாம், அராஜகங்கள் அதிகரிக்கும் போது அரசாள நல்லதொரு தலைவன் தேவை. அந்தத் தலமைத்துவ பண்பு மகாதிரிடம் இன்னும் இருக்கிறது.அது தான் அவரை மீண்டும் மீண்டும் அரசியலுக்கு வர வைக்கிறது. எங்கு போனாலும் அவரை வரவேற்பதில் மலேசியர்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆயிரக் கணக்கில், பத்தாயிரம் கணக்கில், நாற்பது, ஐம்பதாயிரம் கணக்கில் கூடுகின்றனர்! அவரது பெயரே ஒரு மந்திரச் சொல். மகாதீரர்! தீரரால் தான் தீர்த்து வைக்க முடியும் என்னும் நிலையில் நாடு நாறிக் கிடக்கிறது!
தனது 93-வயதில் இப்போது இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். மக்கள், அலை மோதுகின்றனர். "எனக்கு அடிக்கடி இருமல் வந்தாலும், நான் மேடை ஏறியதும் இருமல் பறந்தோடி விடுகிறது! அது கடவுள் செயல்" என்கிறார். ஒவ்வொரு மேடையிலும் ஒரு மணி நேரம் பேசுகிறார்! இன்னும் அந்த பழைய குரல். தடுமாற்றம் இல்லாத பேச்சு! ஆங்கிலமோ, தேசிய மொழியோ - எதனையும் விட்டு வைப்பதில்லை. வெளுத்து வாங்குகிறார்!
அவரது வயதில் தேர்தல் மேடைகளில் ஒரு மணி நேரம் பேச வேறு யாரும் இந்த உலகத்தில் இருக்கிறார்களா, தெரியவில்லை! நமக்குத் தெரிந்த வரை யாருமில்லை! தமிழகத்தின் கலைஞர் கருணாநிதி கூட சுருண்டு விட்டார்!
இன்றைய நிலையில் டாக்டர் மகாதிர் தான் மலேசிய இளைஞர்களின் எதிர்காலம்! அவர் நீடுழி வாழ பிரார்த்திப்போம்!
Saturday, 5 May 2018
என்னடா அரசியல் இது...!
ஒரு மண்ணும் புரியவில்லை! என்னடா அரசியல் இது என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது!
எல்லாக் காலங்களிலும் - எத்தனையோ ஆண்டுகளாக - தேர்தல் என்றால் அது சனிக்கிழமைகளில் தான் நடக்கும். காரணம் அன்று பள்ளி விடுமுறை, அரசாங்க விடுமுறை, தனியார் நிறுவனங்களிலும் அரை நாள் வேலை - வாக்களிப்பதற்கு ஏற்ற நாள் சனிக்கிழமை. ஆனால் அதனை மாற்றிவிட்டு புதன் கிழமையன்று வாக்களிப்பது என்பது மிகப்பலரால் வாக்களிக்க இயலாது என்பதை அறிந்திருந்தும் - பிறகு அதனையே "உங்களுக்கு விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வாக்களிக்க வேண்டாம்" என்று வாக்காளர்களைப் பார்த்து கிண்டலடிப்பதும் மிகப்பெரிய அயோக்கியத்தனமே அன்றி வேறு என்ன சொல்லுவது?
பதாகைகளில் டாக்டர் மகாதிர் படத்தைப் போட்டால் அல்லது போஸ்டர்களில் அவரது படத்தைப் போட்டால் உடனடியாக அதனை நீக்குவதும், வெட்டுவதும், கிழித்து எறிவதும் கேவலத்திலும் கேவலம்! இந்த நாடு இதுவரை இப்படி ஒரு கண்கொள்ளா காட்சியைப் பார்த்ததில்லை!
பிரச்சாரம் செய்வதற்கு எவ்வளவு கெடுபிடிகள்! தங்களது தொகுதிகளில் பிரச்சாரம் செய்யலாமாம். வெளி இடங்களில் பிரச்சாரம் செய்ய காவல்துறையின் அனுமதி வேண்டுமாம்! அதுவும் யார், எத்தனை மணிக்கு என்பதையெல்லாம் பத்து நாளைக்கு முன்னரே தெரியப்படுத்த வேண்டுமாம்!
என்னடா இது! இம்சை அரசன் 23-ம் புலிகேசி கூட இப்படி எல்லாம் ஆட்சி செய்திருக்க மாட்டான்! இப்படி கோமாளிகளிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டு இன்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்!
ஒன்றை மட்டும் நான் யோசிக்கிறேன். அரசாங்கத்தினர் தங்களை யாரும் தோற்கடிக்கக் கூடாது என்பதில் எவ்வளவு எச்சரிக்கையாய் இருக்கிறார்கள். ஆனால் மக்கள் நலனில் ஏன் இவர்களால் எச்சரிக்கையாய் இருக்க முடியவில்லை?
அரசியலா இது! கேடு கட்ட அரசியல்! கேடு கெட்ட அரசியல்வாதிகள்!
Friday, 4 May 2018
தமிழ் இல்லையா? புறக்கணியுங்கள்!
நாம் எல்லாக் காலங்களிலும் மிகவும் தாராளக் குணமுடையவர்களாக இருக்கிறோம். அதனை நமது பலவீனமாக மற்ற இனத்தவர்கள் நினைக்கின்றனர். "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்பதெல்லாம் நமது இளிச்சவாயதனத்தின் அடையாளம் என்று மற்றவர்கள் நினைக்கும் அளவிற்குத் தான் நாம் உள்ளோம். நன்றி கெட்டவர்களின் பார்வையில் நாம் நன்றி கெட்டவர்கள்!
நமது இந்திய வியாபார நிறுவனங்களைத்தான் சொல்லுகிறேன். பெரும்பாலும் தமிழர்களையே நம்பி வாழும் இந்த நிறுவனங்கள் கொஞ்சம் கவனித்தால் அவர்கள் தமிழைப் புறக்கணிப்பதை நாம் பார்க்கின்றோம். இன்னும் ஒரு சில நிறுவனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்குத் தமிழைப் போட்டுவிட்டு தாங்கள் ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக நினைக்கிறார்கள்.
ஆனால் எதைப் பற்றியும் நமக்குக் கவலை வேண்டாம். நாம் நாமாக இருக்க வேண்டும். நமக்கு என்று சில கொள்கைகள் உண்டு. அந்தக் கொள்கையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த நிறுவனங்கள் தமிழைப் புறக்கணித்தால் நாம் அவர்களைப் புறக்கணிப்போம். தயவு தாட்சண்யம் என்பதை எல்லாம் நாம் மூட்டைகட்டிப் போட்டுவிட்டு நம்மால் எதை செய்ய முடியுமோ அதனைச் செய்வோம். இனிமேலும் "நான் ஒருவன் புறக்கணித்தால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா?" என்னும் கேள்விகள் எல்லாம் வேண்டாம். நான் புறக்கணிக்கிறேன், அவ்வளவு தான்.
சமீபத்தில் புதிதாக இனிப்புக்கள் விற்கும் (பலகாரக் கடை) ஒரு கடையைப் பார்க்க நேர்ந்தது. நம் இன இளைஞர்கள் தொழில் செய்வதை நான் வரவேற்கிறேன். ஆனால் பெரும்பாலும் நம்மை நம்பி வியாபாரம் செய்யும் இவர்கள் - மற்ற இனத்தவரும் இனிப்பு சாப்பிடுகிறார்கள் என்பதும் உண்மை தான் - அவர்களுடைய விளம்பரப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருந்தது. அவர்கள் சீனர்களையோ நம்பியோ, மலாய்க்காரர்களை நம்பியோ - எப்படிப் பார்த்தாலும் இந்தியர்களை நம்பியே வியாபாரத்திற்கு வந்திருக்கும் இவர்கள் - மற்ற இனத்தவர்களை நம்பி வரவில்லை என்பது திண்ணம். அப்படியிருக்க அவர்கள் ஏன் தமிழைப் புறக்கணிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இவர்கள் தங்களைத் தமிழர்கள் இல்லை என்பதைக் காட்டுகிறார்கள் என்பது தானே பொருள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? "நான் தமிழன் இல்லை தமிழை நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை. நான் விற்கும் பொருளை நிச்சயம் தமிழன் வாங்குவான்" என்று தானே அவர்கள் நினைக்கிறார்கள்? அது தவறு என்பதை நாம் செயலில் காட்ட வேண்டும்.
இது போன்ற செயல்களை நாம் வளர்த்து விடக்கூடாது என்பது தான் எனது கோரிக்கை. நம்மை நம்பி வாழ்பவன் எல்லாம் நமது மொழியைப் புறக்கணித்தால் நாமும் அவர்களின் நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும். சீனர்களைப் பார்த்தாவது நாம் திருந்த வேண்டும். இனி நமக்குத் 'தாராள' மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்னும் அவசியமில்லை.
கடைசியாக ஒன்றே ஒன்று தான். தமிழ் இல்லையா? புறக்கணியுங்கள்!
Subscribe to:
Posts (Atom)