Tuesday, 15 May 2018

சட்டத்துறைத் தலைவராக அம்பிகா சீனிவாசன்


அடுத்த சட்டத்துறைத் தலைவர்  யார் என்னும் கேள்வி இப்போது மலேசியர்களிடையே விவாதிக்கப்பட்டுக்  கொண்டிருக்கும்  ஒரு கேள்வி..

நடப்பு சட்டத்துறைத்  தலைவர் அப்பாண்டி அலியை  விடுமுறையில் செல்லுமாறு டாக்டர்  மகாதிர் அவரை  வீட்டுக்கு  அனுப்பி  வைத்திருக்கிறார்! ஆக, சட்டத்துறை அலுவலகம்  இப்போது தலைவர்  இல்லாமல்  தலையாட்டிக் கொண்டிருக்கிறது!

இப்போது,  சமூகப் போராளியும், முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவருமான  அம்பிகா சீனிவாசன் அவர்களைச் சட்டத்துறைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்னும் மக்களின் குரல் ஆங்காங்கே  ஒலித்துக்  கொண்டிருக்கிறது.

அம்பிகா  அவர்களைப்  பற்றி யார்  குறை சொல்ல முடியும்? அவரின் நேர்மையைப் பற்றி யார் சந்தேகப்பட முடியும்? மனதில் பட்டதை ஒளிவுமறைவின்று  பேசுபவர்.  அதனால் பல தொல்லைகளுக்கு ஆளானவர். ஆனால் அவர் யாருக்கும் பயப்படத் தயாராக இல்லை! பாரிசான் அரசாங்கத்தைப் பதவியில் இருந்து வீழ்த்த அவரும் ஒரு காரணமாக இருந்தவர். அவர் அரசாங்கத்தை எதிர்க்கிறார் என்பதனால்  அம்னோ  ரௌடிகள் அவர் வீட்டு முன்னால் கேலியும் கிண்டலுமாக 'போராட்டங்களை' நடத்தினார்கள்!  இவர் அம்னோ ரௌடிகளுக்கெல்லாம் பயந்தவராகத் தெரியவில்லை!  அவர்களே வேறு வழியில்லாமல் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ஓடிப்போனார்கள்!

பல போராட்டக்  களங்களைச் சந்தித்தவர் அம்பிகா. சமீபகாலங்களில் அரசாங்கத்தை முழு மூச்சாக எதிர்த்து வந்தவர்.  அவர் அமரிக்க அரசாங்கம் வழங்கும் துணிச்சல் மிக்க பெண்மணி  என்னும் வீரப்பெண்மணி  விருதையும் பெற்றிருக்கிறார். அத்தோடு பிரான்ஸ் தேசத்தின் "செவாலியர்" என்னும் விருது கொடுத்தும் கௌரவிக்கப்  பட்டிருக்கிறார்.

 அம்பிகா சட்டத்துறைத் அலைவராக வந்தால் அது நாட்டுக்குப் பெருமை.  நீதித்துறையில் நீதி விளங்க அவருடைய தலைமைத்துவம் தேவை. பார்ப்போம்!

No comments:

Post a Comment