Saturday 19 May 2018

டாக்டர் மகாதிர் இல்லை என்றால் பக்கத்தான் ஆட்சி சாத்தியமில்லை!


தேர்தலுக்குப் பின்னர், 60 ஆண்டு  பாரிசான் ஆட்சிக்குப் பின்னர், டாக்டர் மகாதிர் இல்லையென்றால் பக்காத்தான் ஆட்சி சாத்தியமா என்று கேள்வி எழுப்பினால் சாத்தியம் இல்லை என்று தான் நான் சொல்லுவேன்.

நடந்த முடிந்த தேர்தலில் பக்காத்தான் 122 தொகுதிகளை வென்றது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன், 133 தொகுதிகளை வென்றதாகக் கூட இருக்கட்டுமே, அதனால் என்ன! யார் ஆட்சி அமைப்பார்? லிம் கிட் சியாங் ஆட்சி அமைக்க முடியுமா? முகைதீன் ஆட்சி அமைக்க முடியுமா? நஜிப் அந்த அளவுக்கு கேனையனா என்ன!  சும்மா ஆட்சியைத் தூக்கிக் கொடுத்து விடுவாரா!

நஜிப்பை பொறுத்தவரை அவர் தேர்தலில் தோற்றுப் போனாலும்  இராணுவம் மூலமாக ஆட்சியைத் தக்க வைத்தக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தில் இருந்தவர்.அது தான் அவருடைய 'பிளான் 2'! இதனைத்  தேர்தலில் தோற்றுவிட்ட பிறகு அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதைக் கவனித்தால் புரியும்.   "யார் என்ன சொன்னாலும் பேரரசர் வந்த பிறகு தான் ஆட்சி அமைப்பது யார் என்று முடிவு செய்ய வேண்டும்" என்று மீண்டும் மீண்டும் சொன்னது அந்தக் காரணத்தினால் தான்! டாக்டர் மகாதிர் இல்லையென்றால் நஜிப் கொல்லைப்புற வழியாக  ஆட்சியைப் பிடித்திருப்பார்! அதில் சந்தேகமில்லை!

டாக்டர் மகாதிரைப் பொறுத்தவரை அவர் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர். நஜிப் தேர்தலில் தோற்றுவிட்ட பிறகு அவருடைய நடவடிக்கைகள் எப்படி அமையும் என்பதை ஓரளவு புரிந்து கொண்டவர். அதனால் தான் உடனடியாக தனது வேலைகளை ஆரம்பித்துவிட்டார். பேரரசரைப் பார்த்து ஆட்சி அமைப்பதற்கான ஆணையையும் பெற்று விட்டார்.  அதிகாரபூர்வமாக பிரதமர் என்றும் அறிவித்துவிட்டார்.  அதன் பிறகு தான் அவருடைய வேலைகள்  ஆரம்பமாயின!

ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியால் தான் - அதுமட்டும் அல்ல அரசாங்க அனுபவப்பட்ட  அரசியல்வாதியால் தான் - இது போன்ற 'அபாயகரமான" சூழலை  சமாளிக்க முடியும்! டாக்டர் மகாதிர் மட்டும் இல்லையென்றால் நாம் இப்போது இராணுவ  ஆட்சியில்  கீழ் வலம் வந்து கொண்டிருப்போம்! அத்தோடு மக்களைப் பழி வாங்கும் எல்லைக்கும் நஜிப் போயிருப்பார்!

இந்தச் சூழலை டாக்டர் மகாதிர் ஒருவரால் மட்டுமே சமாளிக்க முடியும். வேறு யாராலும் முடியாது! லிம் கிட் சியாங் முடியாது!  அன்வாராலும் முடியாது!  முகைதீனாலும் முடியாது! வேறு யாராக இருந்தாலும் முடியாது!

டாக்டர் மகாதிர் அந்த இடத்தில் இருந்தார். அவர் ஆளும் அரசியல் சூழல் தெரிந்தவர். பல ஆண்டு அனுபவம் பெற்றவர். யாரை எப்படி குறி பார்த்து அடிப்பது என்பதைத் தெரிந்து வைத்திருப்பவர். அதனால் தான் அவரால் மிகவும் சாதுரியமாக இந்த அரசியல் சூழலை சமாளிக்க முடிந்தது! அதுவும் எந்த சேதாரமுமின்றி சமாளிக்க முடிந்தது!

உண்மையைச் சொன்னால் டாக்டர் மகாதிர் இல்லையென்றால் இப்போது பக்காத்தான் ஆட்சி இருக்காது! காரணம் நாடு சரியான வில்லனிடம் மாட்டிக் கொண்டிருந்தது! அந்த வில்லனிடம் இருந்து தப்பிக்க வைத்தவர் டாக்டர் மகாதிர்!

டாக்டர் மகாதிரால் தான் இன்று பக்காதான் ஆட்சி சாத்தியமாயிற்று என்பது உண்மை!

டாக்டர் மகாதிர் இல்லையென்றால்  இன்று பக்காத்தான் ஆட்சி இல்லை!

No comments:

Post a Comment