பக்கத்தான் ஆதரவு கட்சியான மிரா நியு ஜென் கட்சி என்ன சொல்ல வருகிறது?
அதன் தலைவர் இராஜரத்தினம் இந்தியர்களின் பல்வேறு பிரச்சனைகளைக் கலைய அரசாங்கம் இந்தியர்களுக்கென தனித் துறையை அமைத்து செயல்பட வேண்டும் என அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்திருக்கிறார். இதில் முக்கியமானது அவரே சொல்லியிருப்பது போல குடியுரிமை, அடையாள ஆவணங்கள் இன்றி பல லட்சம் பேர் இருப்பதாக கூறியிருக்கின்றார்.
அவர் சொல்லுவது நியாயம் தான். இல்லையென்று யாரும் சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு கருத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
பக்காத்தான் தனது தேர்தல் அறிக்கையில் இந்தியர்களின் குடியுரிமை, அடையாள அட்டை பிரச்சனையை, அவர்கள் பதவிக்கு வந்தால் (100) நூறு நாள்களில் தீர்க்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறது.
இப்போது இராஜரத்தினம் என்ன சொல்ல வருகிறார்? "எங்களுக்கு நூறு நாள்கள் எல்லாம் வேண்டாம் ஒரு பத்து வருடத்திலோ அல்லது 20 வருடத்திலோ முடித்துக் கொடுத்தால் போதும். அந்த அமைப்புக்கு நானே தலைவராக இருந்து உதவி செய்கிறேன்." என்று சொல்ல வருகிறாரா? அவர் தலைவராக வருவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் இப்படி ஒரு கருத்தை அவரோ அவரது கட்சியோ சொல்லக் கூடாது; வாயைத் திறக்கவும் கூடாது!
அவர்களால் நூறு நாள்களில் முடியும் என்று அவர்கள் சொல்லும் போது அதனை நாம் ஏற்றுக் கொண்டோம். அதற்குத் தான் நாம் அவர்களுக்கு வாக்களித்து பதவியில் அமர வைத்தோம். இன்னும் அமைச்சரவை அமைக்கப்படாத நிலையில் இப்படி ஒரு கருத்து நமது பக்கம் இருந்து போகக் கூடாது என்பதை நான் வலியுறுத்துகிறேன்.
புதிய சமுதாயம் என்று சொல்லிக் கொண்டு பழைய பாணியிலேயே சிந்திப்பதை நிறுத்த வேண்டும். பழையவர்களாக இருந்தாலும் புதிய பாணியில் சிந்திக்க வேண்டும். நமது தாத்தா மகாதிர் அப்படித்தானே சிந்திக்கிறார்!
பகாத்தான் வாக்களித்தபடி இந்தியர்களின் குடியுரிமை, அடையாள அட்டை பிரச்சனை நூறு நாள்களில் தீர்க்கப்படும் என நான் நம்புகிறேன். இந்தியர்கள் அவர்கள் மேல் உள்ள நம்பிக்கையை இதன் மூலம் நிருபிக்க வேண்டும்.
பக்கத்தான் வாழ்க! வளருக!
No comments:
Post a Comment