Saturday, 26 May 2018
உன்னால் முடியும் தம்பி..!
பதினான்காவது பொதுத் தேர்தலில் மலாக்காவில் ஒர் அதிசயம் நடந்திருக்கிறது.
மலாக்கா மாநில ஜனநாயக செயல் கட்சியின் உதவித் தலைவரும், காடேக் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.சாமிநாதன் சரித்திரம் படைத்திருக்கிறார். மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெற்றிருக்கும் அவருடைய பின்னணி நம்மை வியக்க வைக்கும்.
முன்னாள் லாரி ஓட்டுனரான அவர் ஜனநாயக செயல் கட்சியின் நீண்ட கால உறுப்பினர். ஒரு லாரி ஓட்டுனராக இருந்த அவர் பின்னர் சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். இப்போது அவரின் நிறுவனம் இரண்டு லாரிகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் அவருக்கு ஓர் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து சேவையைத் திறம்பட செய்வார் என்பதில் ஐயமில்லை.
சேவை செய்தவதற்கும் கல்விக்கும் சம்பந்தம் இல்லை தான். ஆனாலும் இப்போதைய நிலையில் கல்வி மிக மிக முக்கியமானது என்பதை அவர் இப்போது புரிந்து கொண்டிருப்பார் என நம்பலாம். கல்வி என்பது பெரிய விஷயம் அல்ல. எப்போது வேண்டுமானாலும் நாம் நமது கல்வித் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. இப்போது வீட்டிலிருந்தே கல்வி பயிலுவதற்கான வசதிகள் உள்ளன. இந்தக் கல்விக்காக தினசரி ஒரு மணி நேரம் செலவழித்தாலே போதும். நீங்களும் பட்டதாரியாக ஆகி விடலாம். நமது உள்ளூர் பல்கலைக்கழகங்கள் கூட வாய்ப்புக்களை வழுங்குகின்றன.
இதெல்லாம் உங்கள் பின்னாலிருந்து பேசுபவர்களின் வாயை அடைக்க, அவ்வளவுதான்! கல்வி உங்களுக்கு ஒரு கம்பீரத்தை அளிக்கும். ஏன் தலைவர் லிம் கிட் சியாங் கூட ஆரம்ப காலத்தில் பத்திரிக்கை நிருபராக இருந்தவர். அதன் பின்னர், அவர் அரசியல் தளத்தில் இருக்கும் போது தான் அவர் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதே போல நீங்களும் செய்யலாம், தவறில்லை.
உங்களால் எதனையும் சாதிக்க முடியும். சீனர்களே அதிகம் உள்ள கட்சியில் உங்களால் உதவித் தலைவராக வர முடியும் என்றால் உங்களால் எதனையும் சாதிக்க முடியும். அதுவும் தமிழன் அல்லவா! நம்மால் எதுவும் முடியும்! பாரிசான் ஆட்சியையே அகற்றி விட்டோம் அல்லவா! நம்மால் முடியும்!
உன்னால் முடியும் தம்பி!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment