பதினான்காவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஓரு புதிய ஆரம்பம் ஏற்பட்டிருக்கிறது.
அமைச்சரவையில் இரண்டு இந்தியர்களுக்கு முழுமையான அமைச்சர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்னும் நீண்ட நாளைய கனவு இப்போதைய பக்கத்தான் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அன்றைய அரசாங்கத்தில் இரு முழு அமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்தவர் நம்மவர் தான்! அதுவே தொடர்ந்தது. அரசியல்வாதிகளின் பொறாமைக் குணத்திற்கு அளவே இல்லை!
Gobind Singh Deo
இன்றைய அமைச்சரவையில் இரண்டு இந்தியர்கள் முழு அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். நாடறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் மனிதவள அமைச்சராகவும், கர்ப்பாலின் புதல்வர் கோபிந்த் சிங் டியோ பல்லூடக,தொடர்புத்துறை அமைச்சராகவும் பிரதமர் டாக்டர் மகாதிர் அறிவித்தார்.
M.Kulasegaran
மலேசிய வரலாற்றில் ஒரு சீக்கியர் அமைச்சராவது இதுவே முதல் முறை. ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வு. பாரிசான் அரசாங்கத்தில் அதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. தலைவர்கள் அவர்களை வளரவிடவில்லை! காரணம் அவர்கள் படித்தவர்கள்! கோபிந்த் சிங் டியோ குடும்பத்தினருக்கு ஜ.செ.க. வுடனான தொடர்பு என்பது ஓர் ஐம்பது ஆண்டுகாலத் தொடர்பு. அவரது தந்தையார் கட்சிக்காக பல தியாகங்களைச் செய்தவர். பலமுறை சிறைக்குப் போய் வந்தவர், ஜ.செ.க. வோடு ஐக்கியமாகி விட்ட ஒரு குடும்பம். கோபிந்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருப்பது மிகவும் நியாயமான ஒரு செயல்.
அதே போல எம்,குலசேகரன். மலேசிய அரசியலில் மிகவும் பிரபலமான ஒரு பெயர். இந்தியர் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளிலும் அவர் குரல் தான் முதலில் ஒலிக்கும். அதுவும் இந்திரா காந்தியின் மத மாற்ற வழக்கில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியவர். அதனால் மக்களிடையே இன்னும் பிரபலமானார். குலாவைத் தெரியாதவர் யார்? அப்படியே அவரை நமக்குத் தெரியவில்லை என்றாலும் அவருக்கு நம்மைத் தெரியும்! நமது பிரச்சனைகள் தெரியும். இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் எப்படி இருக்கின்றன, என்ன நிலையில் இருக்கின்றார்கள் என்பதை அவர் அறிந்தவர், மனித வள அமைச்சர் என்னும் முறையில் அவருக்கு வேலைகள் தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றன.
இரண்டு முழு அமைச்சர்கள் என்று நாம் பெருமைப்படுகிறோம். அதே போல அவர்களும் இந்தச் சமுதாயம் பெருமைப்படும் அளவுக்குத் தங்களது உழைப்பை நல்க வேண்டும்.
இந்தச் சமூகம் வெற்றி பெற வேண்டும்! அதுவே நமது அவா!
No comments:
Post a Comment