Wednesday 30 May 2018

இந்து சங்கம் அதிருப்தியா...?


அரசாங்கம் இந்து அறப்பணி வாரியம் அமைப்பதில் மலேசிய இந்து சங்கம் அதிருப்தி அடைவதாக இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ மோகன் தெரிவித்திருக்கிறார்.

அவர் அதிருப்தி தெரிவிப்பதில் முக்கியமான ஒன்று:  கோவில் சொத்துக்கள் பற்றியது.  மாற்று அரசாங்கம் வந்தால் அல்லது மதவாத அரசாங்கம் அமைந்தால் கோயில் சொத்துக்களை அவர்கள்  எடுத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள்  இருக்கிறதே என்று அவர் கூறியதில் ஒரு நியாயம் உண்டு.

ஒரு விஷயம் ந்மக்குப் புரிகிறது. நமது இந்துக் கோயில்களில்  நிறையவே சொத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்பது  டத்தோ மோகன் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. 

நமது கோயில்களில் ஏன் எப்போதும்  கோயில் தலைவர்களிடையே அடிபுடி சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது இப்போது நமக்கு புரிகிறது.

இப்போது நமக்குத் தெரிகிற பிரச்சனை என்னவெனில்  பணம் என்று வந்து விட்டால் உடனே அடிதடியும் கூடவே எழுந்து விடுகிறது என்பது தான்.

நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். பணத்தை ஏன் சேர்த்துக் கொண்டே போகிறீர்கள்?  ஒரு கோயிலைப் பணக்கார கோயிலாக  ஆக்குவது யார்?  பக்தர்கள் தானே!  அவர்கள் என்ன பணக்காரர்களா? அதுவுமில்லை. பெரும்பாலும் நடுத்தர மக்களே. இந்த நடுத்தர மக்களிடையே ஏகப்பட்ட பிரச்சனைகள் என்பதும் புதிய விஷயம் அல்ல.

 இந்த நடுத்தர மக்கள் பிள்ளைகளின் கல்வி தான் எல்லாப் பிரச்சனைகளையும் விட  முதன்மையான பிரச்சனை. இந்தக் கல்வி பிரச்சனையில் கோயில்கள் உதவி செய்தாலே நமது சமுதாயமே ஒரு பெரிய மாற்றத்தைக் காணும்.  கல்வி கற்ற சமுதாயம் என்பதே நமக்குப் பெருமையான விஷயம். இருக்கின்ற பணத்தை கல்விக்காக செலவு செய்வது மிகவும் புண்ணியம். அதைவிட பெரிய புண்ணியம் வேறு எதிலும் இல்லை. பணத்தை சேர்த்து வைத்து கோயிலைப் பணக்கார கோயிலாக மாற்றிவிட்டு பிறகு அதன் சொத்துக்காக அடித்துக் கொள்ளுவது நம்மிடையே அதிகம். பிறகு தலைவரின் வாரிசுகளையே மீண்டும் மீண்டும் தலைவராக ஒரு வாரிசைக்  கொண்டு வந்து வேறு யாரும் தலைவராக ஆகாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறோம்.

ஏன் இப்படிக் கோயிலுக்குத் துரோகம் செய்கிறோம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கல்விக்குச் செய்வதைவிட வேறு என்ன புண்ணியம் உண்டு. அதுவும் ஏழை சமுதாயம். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நமது கோயில்களுக்கும் கடமை உண்டு. பணத்தைச் சேர்த்து, சேர்த்து இப்போது 'கோயில் நடராஜா' வின் நிலை என்ன? ஓடி ஒளிய வேண்டியது தான்! 

ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட சமீபத்தில் கோயிலின் பிரச்சனைக்குத் தான் வருகிறார்களே தவிர பள்ளிக்காக யாரும் வருவதில்லை என்கிறார்.  

கடைசியாக,  கோயிலுக்குப் பணத்தைச் சேர்த்து வைத்து அப்புறம் அதற்காக நீதிமன்றத்துக்கு அலையாய் அலைந்து கொண்டு இருப்பதை விட தலைவராக இருக்கும் போதே நல்ல காரியங்களைச் செய்யுங்கள். உங்களுக்குப் புண்ணியம் வந்த சேரும்.

No comments:

Post a Comment