Sunday 6 May 2018

ஏன் டாக்டர் மகாதிர்..?


ஏன் டாக்டர் மகாதிர் என்பது தான் இன்றைய கேள்வி.

வருகின்ற பொதுத் தேர்தலில் யாருக்கு யார் போட்டி?  அது டாக்டர் மகாதிர் - நஜிப்  இவர்கள் இருவருக்குத் தான் போட்டி. கட்சிகளையெல்லாம் மறந்து விடுங்கள். முன்பெல்லாம் யாரை யாரையெல்லாம் சொன்னோம் என்றால் ஜ.செ.க.யின் லிம் கிட் சியாங் அதில் முக்கியமானவர்.  ஒரு சீனரோ அல்லது இந்தியரோ இந்த நாட்டின் பிரதமராக வர முடியாது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் இப்படிப் பேசியே ஆளுங்கட்சியினர் நமக்கு ஒரு பயமுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே வந்தனர்.

ஆனால் இன்று அந்த நிலை இல்லை. டாக்டர் மகாதிர் தான் பிரதமர் பதவிக்கான போட்டியாளர். டாக்டர் மகாதிரா அல்லது நஜிப்பா என்பது தான் இன்று நம் முன் உள்ள கேள்வி.

இப்போதெல்லாம் எந்தக் கட்சிக்கு உங்கள் வாக்கு என்பதல்ல கேள்வி. டாக்டர் மகாதிரா அல்லது நஜிப்பா அது தான் கேள்வி. மக்களின் மன நிலை என்ன?  விலைவாசிகள் விஷம் போல் ஏறிவிட்டன. வேலை வாய்ப்புக்கள் குறைந்து விட்டன.  நீண்ட காலம் வேலை செய்து வந்த நடுத்தர வயதினர் வேலை நீக்கம் செய்யப்பட்டு இப்போது வேலைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர். பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. இருக்கின்ற பல உலக நிறுவனங்கள் "மூட்டையைக்கட்டிக்" கொண்டு வெளி நாடுகளுக்குத் தங்களது தொழிலை மாற்றிக் கொண்டனர். இது ஏன் நடந்தது என்று அரசாங்கத்தால் அறிய முடியவில்லை!

இதனையே கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள். மகாதிர் காலத்தில் விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருந்தன. நிறைய உலக நிறுவனங்கள் தங்களது கடைகளைத் திறந்தனர். வேலை வாய்ப்புக்கள் குவிந்தன. வேலையில்லாத் திண்டாட்டம் என்பதை நாம் கேள்விப்படவில்லை. 

இப்போது இது தான் கேள்வி.  அதெப்படி  மகாதிர் காலத்தில் நமக்கு அவ்வளவாக இல்லாத சிரமங்கள் இப்போது நஜிப்பின் ஆட்சியில்  அதிகமான சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது? "பிரிம்" என்பதெல்லாம் ஒரு சாதனை அல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் வேலை வேண்டும்; சாப்பாடு வேண்டும்; பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்; தங்க வீடு வேண்டும். மகாதீர் காலத்தில் ஒரு ஏழையால் வீடு வாங்க முடிந்தது.  நஜிப் காலத்தில் அது சாத்தியம் அல்ல என்னும் நிலை உருவாகி விட்டது.

அதனால் தான் டாக்டர் மகாதிர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்னும் மன நிலை மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. மலேசிய நாடு மீண்டும் உலகளவில் கொடிகட்டிப் பறக்க வேண்டுமென்றால் - டாக்டர் மகாதீரால் மட்டுமே முடியும்!

No comments:

Post a Comment