Monday 28 May 2018

கொடி பிடிப்பதை விடுங்கள்...!


ம.இ.கா. கலாச்சாரத்தை நம்மால் இன்னும் கை விடமுடியவில்ல! முப்பது, நாற்பது ஆண்டு கால பழக்கத்தை விடுவது அவ்வளவு எளிதல்ல என்பது நமக்குப் புரிகிறது!

நடந்த முடிந்த பொதுத் தேர்தலில் இந்தியர்களில் பலர் சட்டமன்ற, நாடளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றிருக்கின்றனர். அனைவருக்கும் நமது வாழ்த்துகள்!

சில இடங்களில் ஏதோ ஒரு சிலர் ஒன்று கூடி குறிப்பிட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினரை அமைச்சராக்க வேண்டும் என்று நாளிதழ்களில் அறிக்கை விடுவதைப் பார்க்கிறோம்.

இது முற்றிலும் ம.இ.கா. வில் இருந்த "இவர் பதவிக்கு வந்தால் நமக்கு இலாபம்" என்னும் சுயநல போக்குடையவர்கள் இப்படி அறிக்கை விட்டுக் கொண்டு இலாபம் தேட முயற்சி செய்வார்கள்! 

இதனை நாம் தொடர வேண்டாம்.  யார் தகுதியானவர்கள் என்பது தலைமைக்குத் தெரியும். நாம் ஒருவரைச் சுட்டிக் காட்டும் போது மற்றவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்பது தானே பொருள்?  என்ன முக்கியம்?  அவரது சேவை தான் முக்கியம். அவரவர் வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும்.  செய்ய விடுங்கள் என்பது தான் எனது வேண்டு கோள். இப்படி அறிக்கை விட்டு அந்தப் பதவி கிடைக்கவில்லை என்றால் ....? அவருக்கு என்ன ஆகும்? தான் எதற்கு வந்தோமோ அதனை மறந்து விடுவார்!

இன்று சராசரி குடிமகன் என்னும் முறையில் நாம் என்ன செய்ய வேண்டும்?  நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ - அவர்கள் முன் கூனி குறுகி நிற்காதீர்கள்.  நமக்காக சேவை செய்யத்தான் அவர்களுக்கு அந்தப் பதவிகளைக் கொடுத்திருக்கிறோம். நம்முடைய பிரச்சனைகளுக்கு அவர்கள் தீர்வு காண வேண்டும். அது தான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை. அந்த வேலைகளை அவர் செய்தால் போதும். அவர்களிடம் போய் பணம் கேட்டு பிச்சை எடுக்க வேண்டாம். தேவைகளுக்காக மட்டும் அவர்களிடம் போங்கள்.

மாண்புமிகுகளுக்கு அந்தப் பதவி கொடுங்கள், இந்தப் பதவி கொடுங்கள் என்று கொடி பிடிக்காதீர்கள். அது நமது வேலை அல்ல. அவர்களின் சேவையின் மூலம் பட்டங்கள்,பதவிகள் பெறட்டும். அந்தத் தகுதியை  அவர்கள் வளர்த்துக் கொள்ளட்டும். அவர்களும் குறுக்கு வழிகளில் மக்களைத் தூண்டி விட்டு பதவியில் அமர வேண்டும் என்னும் எண்ணத்தை விட வேண்டும்.

இனி நமக்கு இந்த "கொடி பிடிக்கிற" வேலைகள் வேண்டாம்!

No comments:

Post a Comment