Sunday, 6 May 2018
டாக்டர் மகாதிர் என்னும் மந்திரச் சொல்!
டாக்டர் மகாதிர் என்பது ஒரு மந்திரச் சொல். அவரிடம் நாம் எவ்வளவோ குறைகள் கண்டோம் அதுவும் குறிப்பாக நமது சமூகத்தினர் மிக அதிகமாகக் குறைகளைக் கண்டோம். பின்னர் நாம் கண்டு கொண்டதெல்லாம் அது டாக்டர் மகாதிரின் குற்றமல்ல நமது ஏகபோகத் தலைவர், தானைத் தலைவர் அவர்களின் குற்றம் என்று! ஆனால் தானைத் தலைவரோ அவரது குருநாதர் டாக்டர் மகாதீர் மீதே குற்றம் சொல்லுகிறார்!
ஆனால் ஒன்றைக் கவனித்தீர்களா? "அப்படி நான் இந்தியர்களுக்கு ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்" என்று அவரின் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்கும் அந்தக் குணம் யாருக்கு உண்டு! சாமிவேலு கூட இந்தச் சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்கவில்லையே!
சரி அதனை விடுவோம். இந்தத் தேர்தலில் டாக்டர் மகாதிரீன் நிலை என்ன? இது நாட்டின் 14வது பொதுத் தேர்தல். மகாதிரோ எத்தனையோ தேர்தல் களம் கண்டவர். முன்பு அரசை ஆண்டவர். இப்போது எதிர்கட்சிகளின் பிரதமராகப் போட்டியிடுகிறார்! உலகமே மகாதிரைத் திரும்பிப் பார்க்கிறது. அது எப்படி? முன்னாள் பிரதமர் இந்நாள் பிரதமராக வரப் போட்டியிடுகிறார் என்றால் அதிசயம் தானே!
ஆமாம், அராஜகங்கள் அதிகரிக்கும் போது அரசாள நல்லதொரு தலைவன் தேவை. அந்தத் தலமைத்துவ பண்பு மகாதிரிடம் இன்னும் இருக்கிறது.அது தான் அவரை மீண்டும் மீண்டும் அரசியலுக்கு வர வைக்கிறது. எங்கு போனாலும் அவரை வரவேற்பதில் மலேசியர்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆயிரக் கணக்கில், பத்தாயிரம் கணக்கில், நாற்பது, ஐம்பதாயிரம் கணக்கில் கூடுகின்றனர்! அவரது பெயரே ஒரு மந்திரச் சொல். மகாதீரர்! தீரரால் தான் தீர்த்து வைக்க முடியும் என்னும் நிலையில் நாடு நாறிக் கிடக்கிறது!
தனது 93-வயதில் இப்போது இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். மக்கள், அலை மோதுகின்றனர். "எனக்கு அடிக்கடி இருமல் வந்தாலும், நான் மேடை ஏறியதும் இருமல் பறந்தோடி விடுகிறது! அது கடவுள் செயல்" என்கிறார். ஒவ்வொரு மேடையிலும் ஒரு மணி நேரம் பேசுகிறார்! இன்னும் அந்த பழைய குரல். தடுமாற்றம் இல்லாத பேச்சு! ஆங்கிலமோ, தேசிய மொழியோ - எதனையும் விட்டு வைப்பதில்லை. வெளுத்து வாங்குகிறார்!
அவரது வயதில் தேர்தல் மேடைகளில் ஒரு மணி நேரம் பேச வேறு யாரும் இந்த உலகத்தில் இருக்கிறார்களா, தெரியவில்லை! நமக்குத் தெரிந்த வரை யாருமில்லை! தமிழகத்தின் கலைஞர் கருணாநிதி கூட சுருண்டு விட்டார்!
இன்றைய நிலையில் டாக்டர் மகாதிர் தான் மலேசிய இளைஞர்களின் எதிர்காலம்! அவர் நீடுழி வாழ பிரார்த்திப்போம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment