இன்று காலை படித்த செய்திகளில் மிகப் பிடித்தமான செய்தி என்றால் அது நமது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் பதவியேற்றது தான். வழக்கம் போல என்றால் அது ஒரு சாதாரண நிகழ்வாக ஆகியிருக்கும். காரணம் இது நாள் வரை நாம் செம்மறியாடுகளின் பதவி ஏற்புக்களைத் தான் பார்த்து வந்தோம்!
குலசேகரனின் பாணி வேறு. அவர் மனிதவளத் துறை அமைச்சராக பதவி ஏற்கும் போது தலைப்பாகை அணிந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
தலைப்பாகையை நாம் மறந்து விட்டோம். அதனை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் குலா. அதுவும் நமது கலாச்சாரம் தான். தமிழகத்தில் விவசாயிகள் இன்றும் தலைப்பாகை அணிவதை நாம் பார்க்கிறோம். விவசாயிகள் அல்லாதவர் கூட எப்போதும் ஒரு துண்டோடு வலம் வருவதைப் பார்க்கலாம். ஏதாவது வேலையில் இறங்கும் போது உடனடியாக அந்தத் துண்டை எடுத்து தலைப்பாகையாக கட்டிக் கொண்டு களத்தில் இறங்குவர். அதாவது வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்குவர். தலைப்பாகைக் கட்டினாலே தானாகவே சுறுசுறுப்பு ஓட்டிக் கொள்ளும்!
தலைப்பாகைக் கட்டுவதை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. மீரா நியு ஜென் கட்சியின் தலைவர் இராஜரத்தினம் மட்டும் தான் தலைப்பாகை அணிபவராக இருக்கிறார்.
ஏதோ எப்படியோ தலைப்பாகைக்கு ஒரு புது மரியாதையைக் கொண்டு வந்திருக்கிறார் குலசேகரன். நமது இளைஞரிடையே ஒரு வேளை இது தொடரலாம். இனி இவரைப் போன்று பதவி ஏற்பு சடங்குகளில் பங்குபெறுபவர்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணம். இது தொடர வேண்டும். நமது கலாச்சாரமும் இஸ்தானா நெகராவில் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
இனி பதவி உறுதிமொழி எடுக்கும் மாண்புமிகுகள் தலைப்பாகையைத் தொடர்வார்கள் என நம்புவோம்!
No comments:
Post a Comment