Tuesday, 29 May 2018
பெர்னாமவில் மீண்டும் தமிழ்ச்செய்தி
கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெர்னாமா தமிழ், சீனச் செய்திகள் மீண்டும் வரக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. தொடர்பு, பல்லூடக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனைப் பரீசீலனை செய்யுமாறு பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
முதலில் இது ஏன் நிறுத்தப்பட்டது என்பதைக் கவனிப்போம். ஒன்று சிக்கனம் கருதி நிறுத்தப்பட்டிருக்கலாம். சீனர்களுக்கோ, இந்தியர்களுக்கோ செய்திகள் தேவை இல்லை என்று அதிகாரிகள் நினைத்திருக்கலாம். இன்னொன்று பெர்னமா தருகின்ற செய்திகளை யாரும் சீண்டுவதில்லை எனவும் அவர்கள் நினைத்திருக்கலாம்.
கடைசியாக சொன்னது தான் சரி. செய்திகள் என்றால் கடைசி நிமிடம் கிடைக்கின்ற செய்திகளும் அவர்களின் செய்திகளில் இடம் பெற வேண்டும். எனக்குத் தெரிந்த வரை பெர்னமா தனது கடமையை சரி வர செய்யவில்லை என்பது தான்.
தமிழில் அவர்கள் செய்திகள் எப்படி இருந்தன. நேற்றைய செய்திகள், முந்தா நாள் செய்திகள் அப்புறம் செய்திச் சுருள்கள் - இப்படித்தான் அவர்கள் செய்திகள் அமைந்திருந்தன. புதிதாக ஏதேனும் செய்திகள் அவர்களிடம் இல்லை. இல்லை என்பதைவிட அவர்களுடைய அதிகாரிகள் புதிய செய்திகளை அனுமதிப்பதில்லை! அதற்கு ஒரு முட்டாள் தனமான காரணம் உண்டு! எட்டு மணிக்கு ஒளிபரப்பாகும் பிரதான தேசிய மொழி செய்திக்குப் பின்னர் தான் மற்ற மொழிகளில் அந்தச் செய்திகள் வர வேண்டுமாம்! இவர்கள் தான் முட்டாள்கள் என்றால் மற்றவர்களையும் முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டார்கள்! பழைய செய்திகளைப் பார்க்க வேண்டும் என்பது என்ன நமது தலையெழுத்தா! இப்படித் தான் பழைய செய்திகளைக் கொடுத்து தமிழ்ச் செய்தியின் குரல்வலையைப் பிடித்து திருகிவிட்டார்கள்!
அப்புறம் இந்தியர்கள் பெர்னாமா தமிழ்ச் செய்திகளுக்கு வரவேற்புக் கொடுக்கவில்லை என்பதாக ஒரு குற்றச்சாட்டு! வரவேற்பு இல்லையென்றால் அதற்கான காரணங்களை அறிந்து கொள்ளாமல் அந்தத் தமிழ்ச் செய்தியையே மூடி விடுவது என்பது முட்டாள்களுக்கு கைவந்த கலை! காரணம் அவர்களைப் பொறுத்தவரை வீண் செலவு!
இனி மேல் இவர்களின் செயல்பாடு எப்படி இருக்குமென்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் தமிழ்ச் செய்தி என்பது இனிமையான செய்தி தான்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment