பெரிகாத்தான் நேஷனல், இன்றைய அரசியலில், தலையாய எதிர்க்கட்சி.
நிச்சயமாக அந்த கட்சியில் நம்மில் ஒரு சிலர் சேர விரும்புவதை மறுக்க இயலாது. அங்கு சேர விரும்புபவர்கள் ஏதோ ஒரு சில தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும் என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். அந்த நோக்கத்தோடு அங்கு போகிறவர்கள் ஒரு சில முன்னாள் ம.இ.கா. உறுப்பினர்களையும் கொண்டு செல்ல விரும்பத்தான் செய்வார்கள்.
பெரிகாத்தான் தான் ஓரு பல்லின கட்சியாக காட்டிக் கொள்ள விரும்புகிறது. அதனால் எப்பாடுபட்டாவது இந்தியர்களை ஈர்க்க விரும்புகிறது. ஆனால் அது அனைத்தும் தேர்தல்வரை தான். அதற்கு அப்புறம் நம்மைத் தூக்கி எறிந்துவிடுவார்கள்! இப்போது அவர்களின் நோக்கம் எல்லாம் ஆளும் கட்சியில் உள்ள இந்தியர்களின் வாக்குகளைப் பிரித்து அவர்களை வெற்றி பெறாதபடி செய்வது மட்டும் தான். ஒற்றுமை அரசாங்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கம் மட்டுமே.
நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். பெரிக்காத்தான் இந்தியர்களுக்கு எந்த வகையிலும் உதவுவார்கள் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. அவர்கள் தங்களை மலாய்க்காரர்களின் கட்சியாகவே அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். பல்லினம் வேண்டாம் என்பதே அவர்களின் தலையாய நோக்கம்.
முதலில் அவர்களின் தலைவர்களைக் கவனியுங்கள். இப்போதைக்கு நமக்குப் பளிச் என தெரிபவர்கள் முன்னாள் பிரதமர்களான டாக்டர் மகாதீரும், முகைதீன் யாசினும். நிச்சயமாக இவர்கள் எந்த வகையிலும் இந்தியர்களுக்குச் சாதகமானவர்கள் அல்ல.
கடந்த 14-வது பொதுத் தேர்தலில், பக்காத்தான் இரண்டு ஆண்டுகால ஆட்சியில் முகைதீன் யாசின் உள்துறை அமைச்சராக இருந்த போது, பக்காத்தான் உறுதி அளித்தது போல, இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனையை வேண்டுமென்றே அவர் புறக்கணித்ததாக அவரது கட்சியினரே குற்றம் சொன்னார்கள். அவர் கையொப்பம் இட மறுத்தது தான் காரணம்!
டாக்டர் மகாதிர் பற்றி இன்னுமா நாம் சொல்ல வேண்டும்? மைக்கா ஹோல்டிங்ஸ் பிரச்சனையே இவரால் உருவாக்கப்பட்டது தான். எல்லா வகையிலும் இந்தியர்களின் முன்னேற்றத்திற்குத் தடைபோட்டவர். அந்த மலபார் புத்தி இன்றளவும் அவரிடம் உண்டு.
அது சரி. பிரதமர் அன்வார் இந்தியர்களின் பிரச்சனையைத் தீர்த்து விடுவாரா என்கிற கேள்வியும் எழத்தான் செய்யும். நான் செய்வேன் என்று அவர் உறுதி அளித்திருக்கிறார். இதற்கு முன்னரும் சரி, இப்போதும் சரி என்னால் முடியும் என்று தைரியமாக யாராலும் சொல்ல முடியவில்லையே! இத்தனை ஆண்டுகள் நம்பக் கூடாதவர்களை எல்லாம் நம்பினோம் இனி இவரை நம்புவோமே!
இனி வாக்கு உங்கள் கையில். பெரிக்காத்தானை நம்பத்தான் வேண்டுமா?
No comments:
Post a Comment