மாணவர்களை அடிப்பதே குற்றச்செயல் என்பது தான் இன்றைய நிலைமை.
ஆனாலும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது. காரணம் தெரியவில்லை. சொல்லப்படுகின்ற காரணம் பையன் வீட்டுப்பாடம் செய்யவில்லை மற்றும் வகுப்பில் பாடத்தில் கவனம் செலுத்ததுவதில்லை.
இதெல்லாம் எப்போதும் நடப்பது தானே! இதற்கா தண்டனை! என்கிற நிலைமைக்கு நாமும் வந்துவிட்டோம்.
பெற்றோர்கள் பையனின் கல்வியில் கவனம் செலுத்தியிருக்கலாம். கல்வியில் சிறப்பாக செயல்பட்டிருந்தால் ஆசிரியர்கள் எந்தத் தண்டனையும் கொடுக்க மாட்டார்கள். பெற்றோர்கள் எதனையும் கண்டு கொள்வதில்லை.
ஆசிரியர்கள் இயற்கையாகவே தங்களது மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் அக்கறை உண்டு. அது எல்லா ஆசிரியர்களுக்கும் உரியது தான். ஒரு சில மாணவர்கள் குறும்பு செய்வதால் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களையும் அது பாதிக்கும் என்பதால் தான் ஆசிரியர்கள் அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். முதலில் அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். பெற்றோர்கள் சொன்னாலும் பிள்ளைகள் கேட்பதில்லை என்பது தான் இன்றைய நிலைமை.
இப்படி ஒரு நிலைமையில் தான் ஆசிரியர்கள் "எக்கேடு கெட்டாவது போ!" என்று கைகழுவி விடுகிறார்கள்! மாணவர்கள் மீது கொஞ்சம் கூடுதல் அக்கறை உள்ளவர்கள் பிரம்பை கையில் எடுக்கிறார்கள்! அது தவறு என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் வேறு வழியில்லை!
நமது பெற்றோர்கள் அந்தக் காலத்தில் சொல்வதுண்டு. முழங்காலுக்குக் கீழே அடியுங்கள் என்பார்கள். அது கொஞ்சம் பாதுகாப்பு அவ்வளவு தான். இங்கே கொஞ்சம் அதிகமாகப் போய்விட்டது! கன்னம், கழுத்து, தோள்பட்டை என்று அடித்துக் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டார் என்றே சொல்லலாம்.
என்னதான் சால்ஜாப்புகளைச் சொன்னாலும் கடைசியில் ஆசிரியர் மேல் தான் பழி விழும். மாணவர்களைக் குறை சொல்ல என்ன இருக்கிறது? அவர்கள் அறியாமல், புரியாமல் செய்கின்ற தவறுகளுக்கு ஆசிரியர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆசிரியர் தொழிலில் இது போன்ற ஆபத்துகள் இருக்கத்தான் செய்யும். தெரிந்தது தான்.
ஆசிரியர்கள் கை நீட்டுவதைக் குறைக்க வேண்டும் என்பதைத் தவிர நம்மால் வேறு எதனையும் சொல்ல இயலாது.
No comments:
Post a Comment