டத்தோ நெல்சன் ரெங்கனாதன், ம.இ.கா.கல்விக்குழு தலைவர்
மெட் ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு சுமார் 206 இந்திய மாணவர்களுக்கு மறுக்கப்பட்டிருப்பதாக ம.இ.கா. கல்விக்குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரங்கனாதன் கூறியிருக்கிறார். மறுக்கப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்ய கல்வி அமைச்சின் பார்வைக்குச் சமர்ப்பிக்கப்படும் என்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ம.இ.கா.வின் இந்த முயற்சிக்கு மனதாரப் பாராட்டுகிறோம். இந்த கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டால் இந்தப் பிரச்சனையை யார் முன்னெடுப்பார் என்று தெரியாத நிலையில் ம.இ.கா. அதனைக் கையில் எடுத்திருப்பதை வரவேற்கிறோம்.
ஒரு விஷயம் நமக்கு இன்னும் புரியவில்லை. 206 மாணவர்கள் இடம் மறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லும் போது தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அதாவது 2500 இந்திய மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கிய பின்னர் அது போதாமல் 206 மாணவர்கள் மறுக்கப்பட்டிருக்கின்றனரா என்பது தெரியவில்லை. அல்லது குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டு அந்தக் குறைவான இடங்களில் கூட இந்த மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று எடுத்துக் கொள்வதா? தெரியவில்லை!
எத்தனை இந்திய மாணவர்கள் மெட் ரிகுலேஷன் கல்விக்கு இதுவரை எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர் என்பது ம.இ.கா. கல்விக் குழுவுக்கே தெரியுமா என்பதும் தெரியவில்லை. அதனைத் தெரிவிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கல்வி அமைச்சுக்கும் இல்லை. பொது வெளியில் அதனை அறிவிக்க வேண்டும் என்கிற எந்த நிர்ப்பந்தமும் கல்வி அமைச்சுக்கு இல்லை.
பொதுவாக இதுபோன்ற விஷயங்கள் கல்வி அமைச்சு வெளியிடாமல் கப்சிப் என்று இருந்தாலே ஒன்றை நாம் புரிந்து கொள்ளலாம். எங்கோ தவறு நடந்திருக்கிறது. இந்திய மாணவர்கள் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை கல்வி அமைச்சு கப்சிப் என்று இருப்பதன் மூலம் நமக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.
வேறு வகையிலும் இதனை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். மெட் ரிகுலேஷன் நுழைவு என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை. கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. இன்னும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்பதாகத்தான் அது காட்டுகிறது.
இன்னும் ஓர் ஆச்சரியமும் நமக்கு உண்டு. சீனர்கள் பக்கமிருந்து எந்தவொரு சத்தத்தையும் காணோம். இரண்டு ஆண்டு கால பக்காத்தான் ஆட்சியின் போது இந்தியர்களுக்கான இடங்களைச் சீனர்கள் அபகரித்துக் கொண்டார்கள் என்று ம.இ.கா. குற்றம் சாட்டியது. அது உண்மை தான். சீனர்களுக்கான இடத்தை கல்வி அமைச்சு நம்மிடமிருந்து அபகரித்து அங்கே அலுங்காமல் குலுங்காமல் அப்படியே கொடுத்து விடுகிறது. ஆனால் நமக்கு மட்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் பரிசீலனை, பரிசீலனை, பரிசிலனை!
பார்ப்போம்! நமது ஜ.செ.க. ஜால்ராக்களின் ஜால்ராக்களை!
No comments:
Post a Comment