வருகின்ற 15-வது சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் மீண்டும் வெற்றி பெற்றால் அந்த அரசாங்கத்தில் ம.இ.கா. வும், ம.சீ.ச. வும் இடம் பெறும் என்பதாக பி.கே.ஆர். கட்சியின் சிலாங்கூர் மாநிலத் தலைவர் அமிருடின் ஷாரி உறுதி அளித்துள்ளார்.
இந்த இரண்டு கட்சிகளுமே மாநிலத் தேர்தலில் ஒதுங்கி நிற்போம் என அறிவித்துவிட்ட நிலையில் பி.கே.ஆர். மாநிலத் தலைவரின் இந்த அறிவிப்பு வரவேற்கக் கூடிய ஒன்று என நிச்சயம் நம்பலாம்.
அரசாங்கத்தில் இடம் பெறும் என்பதை வரவேற்றாலும் அதற்கு மேல் எந்த ஒரு விளக்கமும் இல்லை. அதனால் நமக்கும் அதுபற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் நல்லதொரு பங்களிப்பு அவர்களுக்கு இருக்கும். இந்த இரு கட்சிகளுமே தங்களுக்கான அங்கீகாரம் வேண்டும் என நினைக்கின்றன. மக்களிடமிருந்து அவர்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை, இனி கிடைக்காது, என்பது அவர்களுக்கே தெரியும். அவர்கள் இனி ஆளுங்கட்சியின் துணையோடு தான் தங்களது கட்சியை அடையாளம் காடட வேண்டும்!
சிலாங்கூர் மாநிலம் பெரிய மாநிலங்களில் ஒன்று. இந்தியர்களும் கணிசமான அளவில் அங்கு இருக்கின்றனர். இன்னும் அந்த மாநிலத்தில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. கணபதிராவ் பிரச்சனைகள் முடித்துவிட்டுத் தான் வெளியேறுவார் என்று பார்த்தோம்! அவர் தப்பித்தோம்,பிழைத்தோம் என்று நாடாளுமன்றத்திற்கு ஓடிவிட்டார். இதோ! ஒரு கோயில் பிரச்சனை. அதற்கு அவர் ஒரு முடிவு கண்டிருக்க வேண்டும். கல்விக்காக நிறையவே பாடுபட்டிருக்கிறார். ஆனால் கோயில் பிரச்சனை என்பது மட்டும் எல்லா மாநிலங்களிலும் அப்படியே தான் இருக்கின்றன! அதனைத் தீர்த்து வைக்க முடியவில்லை! நமது அறிவுரை என்னவென்றால் சட்டமன்ற உறுப்பினர்கள் முடிந்தவரை கோயில் பிரச்சனைகளை அவர்கள் பதவிகளில் இருக்கும் காலத்திலேயே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிட வேண்டும். இழுத்துக் கொண்டே போக அனுமதிக்கக் கூடாது என்பதே நமது அறிவுரை.
எது எப்படியிருப்பினும் ஒற்றுமை அரசாங்கம் அந்த இரு கட்சிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் ஒற்றுமை அரசாங்கத்தில் பதவிகள் கொடுத்து அவர்களுக்கு ஓர் அங்கீகாரம் கொடுப்பதை நாம் வரவேற்கிறோம்.
அவர்கள் சேவையைத் தொடர்ந்தால் அவர்களுக்கான அங்கீகாரம் மக்களிடமிருந்து கிடைக்கத்தான் செய்யும். பொதுவாக ம.இ.கா. அந்த வகையில் மிகவும் பலவீனமான கட்சி. அவர்களிடம் இருந்த சேவை மனப்பான்மை எப்போதோ அவர்களிடமிருந்து போய்விட்டது. அதனால் தான் இன்று அவர்கள் மக்களின் ஆதரவை இழந்து நிற்கிறார்கள்.
ஒற்றுமை அரசாங்கத்தில் அந்த இரு கட்சிகளும் பங்கு பெறுவதில் நமக்கு மகிழ்ச்சியே!
No comments:
Post a Comment