நாசி லெமாக் நாம் தினசரி சாப்பிடும் உணவு. பெரும்பாலும் காலை உணவு.
நான் பள்ளி போன போது நாசி லெமாக் மட்டுமே கிடைக்கும். விற்பனையில் வேறு எதுவும் இல்லை. அப்போது சம்பலில் அவர்கள் போடுவது எல்லாம் ஊடாங் அல்லது சமயங்களில் நெத்திலி சம்பல். அது கடற்கரை நகரம் என்பதால் ஊடாங் தான் பெரும்பாலும் கிடைக்கும்.
இப்போதெல்லாம் நாசி லெமாக்கில் எல்லாவற்றையுமே போட்டு சம்பல் என்கிறார்கள்! கோழி என்பதெல்லாம் மிகச் சாதாரணம். எனக்கு அதில் உடன்பாடில்லை.! காலை நேரத்தில் கோழி சம்பல் நாசி லெமாக்? வேண்டவே வேண்டாம்.
இப்போது சமீப காலங்களில் சிறு நெத்திலிகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. அதனால் சம்பலில் நெத்திலிகளைப் பார்க்க முடிவதில்லை. அப்படியே நெத்திலிகள் கிடைத்தாலும் பெரிய நெத்திலிகளாகவே இருக்கின்றன.
சமீபத்தில் நான் சாப்பிட்ட போது பெரிய நெத்திலிகள் தான். பெரிது என்றால்? பல்லி அளவு பெரிது என்று தாராளமாகச் சொல்லலாம்! ஆனால் அது பல்லி அல்ல!
இப்போது சம்பலில் அவர்கள் பயன்படுத்தும் நெத்திலி என்பது உண்மையில் சிறு மீன்கள். நிச்சயமாக சிறு மீனா, பல்லியா என்கிற வித்தியாசம் தெரிய வாய்ப்பில்லை!
எப்படியோ அந்த வியாபாரி நெத்திலி, மீன், பல்லி என்கிற வித்தியாசம் தெரியாமல் சம்பலில் கலந்துவிட்டிருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் அது வியாபாரி மீதான குற்றம் தான். இது மனிதர் சாப்பிடும் உணவு என்பது அவருக்குத் தெரியும். அவர் தான் கவனமாக இருக்க வேண்டும்.
இப்போது கடைகளில் சாப்பிடுவதே அலர்ஜியை ஏற்படுத்துகிறது. சுத்தமில்லாத உணவு என்கிற நினைப்பு தான் வருகிறது.
இதனால் தான் நாம் ஒன்றை உணவகங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. உணவகங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்கவில்லை என்றால், அவர்களுடன் பகைமையை ஏற்படுத்திக் கொண்டால், ஊழியர்களுடனான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டால் அவர்கள் நிச்சயமாக பல வழிகளில் உணவகங்களுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடுவார்கள்! இது தான் நடந்து கொண்டிருக்கிறது!
நாசி லெமாக் என்பது மலேசியர்களின் காலை உணவு. பணம் மட்டுமே குறி என்பவர்கள் தயவு செய்து உணவு சம்பந்தமான விஷயங்களுக்கு வராதீர்கள். பணம் வேண்டும் அதே சமயத்தில் தரமான சாப்பிடும் உணவை வழங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டுமே இது போன்ற தொழிலுக்கு வர வேண்டும்.
பல்லி நாசி லெமாக் வேண்டவே வேண்டாம்!
No comments:
Post a Comment