தமிழ்ப்பள்ளிகளே நமது தேர்வு என்கிற நம் முழக்கம் இன்று நேற்றல்ல நீண்ட நாள்களாக நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஒரு வருத்தமான செய்தி என்ன வென்றால் தமிழ்ப்பள்ளிகளிலேயே நமது எதிரிகளைத் தமிழன் என்று சொல்லி சோறு போட்டு வளர்த்து வருவது தான். என்ன செய்வது? தகுதி இருந்து விட்டால் அவன் தமிழன் என்கிறோம்!
சமீபத்தில் ஒரு டிக்டாக் செய்தியைக் காண நேர்ந்தது.. இப்போது பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க புதிய புதிய நடைமுறைகள் வந்துவிட்டன. படித்த பெற்றோர்கள் தப்பித்து விடுகின்றனர். படிக்காத பெற்றோர்கள் நிலை என்ன?
கணினி பயன்படுத்தத் தெரியாத பெற்றோர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவது பள்ளிகளின் கடமை. கல்வி அமைச்சும் ஏழ்மையில் உழலும் பெற்றோர்களுக்குக் கணினி அறிவு இருக்காது என்பது தெரியும். பள்ளிகள் அவர்களுக்கு உதவலாம். இது ஒன்று தலை போகின்ற காரியம் அல்ல.
இப்படி கணினி அறிவ் இல்லாத பெண்மணி ஒருவர் தனது மகளைத் தமிழ்ப் பள்ளியில் சேர்க்க சென்ற போது அந்தப் பள்ளியினர் அவர் குழந்தையைப்பள்ளியில் சேர்க்க மறுத்துவிட்டனர். அவர் 'ஆன்லைனில்' மனு செய்யவில்லை என்கிற காரணம் காட்டி அவர்கள் நிராகரித்து விட்டனர்.
அதன் பின்னர் அவர் தேசிய பள்ளிக்குச் சென்றார். அதே பிரச்சனை தான். ஆனால் அவர்கள் எந்த மறுப்பும் சொல்லவில்லை. அதற்கான பாரங்களைப் பூர்த்தி செய்து அவரின் குழந்தை முதலாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதன் பின்னர், போக்குவரத்துக் காரணமாக, அவரின் இரண்டு குழந்தைகளும் அந்தப் பள்ளியிலேயே சேர்க்கப்பட்டனர்.
'தமிழ்ப்பள்ளியே என் தேர்வு' என்கிற முழக்கம் ஒரு பக்கம். ஒரு சில தலைமை ஆசிரியர்களின் திமிரான போக்கு ஒரு பக்கம். அந்த முழக்கத்தைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. நமக்கென்ன என்கிற அலட்சியமே தவிர வேறொன்றும் இல்லை.
ஆசிரியர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. நம்முடைய பூர்வீகம் எல்லாம் தோட்டப்புறங்கள் தான். அவர்கள் படிக்காதவர்கள். அங்கிருந்து வந்தவர்கள் தான் இன்றைய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள். உங்களுக்கும் யாரோ ஒருவர் உதவியிருக்கிறார். இல்லாவிட்டால் நீங்கள் இருக்கும் இடமே வேறு.
ஆசிரியப் பெருமக்களே! ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டும் என்று தான் கல்வி நமக்குப் போதிக்கிறது. யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள். ஏழை என்பதற்காக, கல்வி அறிவு அற்றவர் என்பதற்காக யாரையும் தூக்கி எறியாதீர்கள்!
கல்வி தான் நமது ஆயுதம்! மறந்துவிடாதீர்கள்!
No comments:
Post a Comment