இன்றைய காலகட்டம் குழந்தைகளுக்கு ஏற்ற காலகட்டம் என்று சொல்வதற்கில்லை.
குழந்தைகளுக்கு எல்லாமே கிடைக்கிறது. ஆனால் எதுவும் கிடைக்கும் மனநிறைவு இல்லை. நம் வீடுகளில் குழந்தைகள் பண்ணுகின்ற அட்டகாசங்களை நாம் தினம் தினம் பார்க்கின்றோம். பொதுவாகச் சொன்னால் நம்மால் சகிக்க முடியவில்லை!
அதனால் என்ன ஆகிறது? முடிந்தவரை அவர்களை ஏதோ ஓரு பள்ளிக்கு அனுப்பி நமது பாரத்தைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறோம்! அதாவது நமது பாரத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி விடுகிறோம்! 'இந்தா இந்த சுமையை நீ சுமந்துக்கோ!'
அதுவும் நமது பாலர்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைமை மிகவும் மோசம். நல்ல பயிற்சி உள்ள ஆசிரியர்கள் என்றால் இந்தக் குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்று புரிந்து வைத்திருப்பார்கள். பயிற்சி பெறாதவர்கள் கையாளத் தெரிவதில்லை. சிடுமூஞ்சிகள் குழந்தைகளைப் பார்க்க நேர்ந்தால் என்ன ஆகும்? ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவருமே சிடுமூஞ்சிகள்! என்ன நடக்குமோ அது தான் நடந்து கொண்டிருக்கிறது.
ஆசிரியர் ஒருவர் குழந்தைகளைக் கடிக்கிறாராம்! இது பள்ளி நிர்வாகத்திற்குத் தெரியாமலா இருக்கும்? ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அந்தப் பிரச்சனைப் பெரிதாகி பொதுவெளியில் வரும்வரை நிர்வாகம் வாய் திறப்பதில்லை! என்னதான் இரும்புத்திரை போட்டு மறைத்தாலும் அது வெளியே வந்து தான் ஆகும்.
பாலர்பள்ளியில் குழந்தை ஒருவன் நீச்சல் குளத்தில் விழுந்து இறந்து போனான். அது எப்படி, என்ன நடந்தது என்று நமக்குத் தெரியவில்லை. காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பெற்றோர் தங்களுக்கு நீதி வேண்டும் என்று காலில் செருப்பு அணியாமல் வெறுங்காலில் பதினைந்து மைல் தூரம் நடந்து வந்து காவல்துறை தலைமை அலுவலகத்தில் தங்களது மனுவை அளித்தனர்.
ஒரு பக்கம் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்குப் போதைப்பொருள் கொடுத்து தூங்க வைக்கின்றனர். இன்றைய குழந்தைகள் படாதபாடு படுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். எங்கே தவறு நடக்கின்றது என்று புரியவில்லை. குழந்தைகள் படுசுட்டிகளாக இருக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் படுமட்டிகளாக இருக்கின்றனர்! இன்றைய இளம் பெற்றோர்கள் பொறுப்புகளை வேலைக்காரி அல்லது பள்ளி ஆசிரியர்களிடம் தள்ளிவிட வேண்டும் என்பதில் தான் குறியாய் இருக்கின்றனர்!
குழந்தைகளை நாம் குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அது தான் அவர்களின் இயல்பு. குற்றம் நம்முடையது தான். அது தான் சட்டமும் சொல்லுகிறது. நாம் தான் திருத்தப்பட வேண்டியவர்கள்! குழந்தைகள் அல்ல!
No comments:
Post a Comment