ஒழுங்காக பள்ளிக்கு வராத ஆசிரியரை என்ன செய்யலாம்? முக்கலாம்! முணகலாம்! முணுமுணுக்கலாம்! அதற்கு மேல் வேறு எதனையும் செய்ய இயலாது! காரணம் அவர்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றவர்களாக இருப்பார்கள்! அல்லது ஏதோ பிரபலம் ஒன்றுக்கு எதற்கும் உதவாதவர்களாக இருப்பார்கள்!
முன்பெல்லாம் தமிழ்ப்பள்ளிகளில் இது போன்ற எதற்கும் உதவாத மலாய் மொழி ஆசிரியர்கள் இருப்பார்கள். இவர்களை யாரும் ஒன்றும் கேட்க முடியாது. வருவார்கள்! போவார்கள்! அப்படித்தான் செயல்பட்டார்கள்! அது ஒரு காலம்!
ஆனால் இன்றைய நிலைமை வேறு! மாணவர்களே ஆசிரியர் மேல் வழக்குத் தொடுக்கும் காலம். சபாவில் அது தான் நடந்தது. ஏழு மாத காலம் பள்ளிக்கு வராத ஒர் ஆங்கில ஆசிரியர். தட்டிக்கேட்க ஆளில்லை. ஆசிரியர் சண்டப்பிரசண்டம் செய்வதை யார் தடுக்க முடியும்? மாணவர்கள் பொறுத்துப் பார்த்தார்கள. அதில் குறிப்பாக மூன்று மாணவிகள் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தார்கள.
ஆசிரியர் மீது வழக்குத் தொடுத்தார்கள். ஆசிரியருக்குப் பக்கபலமாக இருந்த பள்ளி முதல்வர், கல்வி அமைச்சு, அரசாங்கம் என்று அத்தனை பேரையும் கோர்ட்டுக்கு இழுத்தார்கள். அந்த மாணவிகள் நான்காம் பாரத்தில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. ஆங்கில ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் கோபத்தின் உச்சத்தில் இருந்தார்கள. தேர்வுக்கு மாணவர்களைத் தயார் படுத்த ஆசிரியர் தவறி விட்டார் என்று பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்த போது யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் கோர்ட்டுக்குப் போவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பு இப்போது தான் வெளியாகிருக்கிறது. அந்த மாணவிகள் தொடுத்த வழக்கு சரியானது தான் என்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது அத்தோடு அந்த மாணவிகளுக்குத் தலா ஐம்பதினாயிரம் ரிங்கிட் இழப்பிடு வழங்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
மாணவர்கள் ஆசிரியர் மீது வழக்குப் போடுவது என்பதெல்லாம் நாம் விரும்புவதில்லை தான். ஆனால் சோம்பேறிகளை யார் என்ன செய்ய முடியும். எனக்குத் தெரிந்த ஒருவர் மாதத்திற்குப் பத்து, பதினைந்து நாள்களாவது மருத்துவமனையில் தான் இருப்பார். மருத்துவ விடுமுறை தான். என்ன செய்வது?
ஆசிரியர் தொழில் புனிதமானது என்று நாம் சொல்கிறோம். ஆனால் ஒரு சிலர் அதனை அவர்கள் பகுதி நேர தொழில் போல செய்கிறார்கள். ஆனாலும் இப்போது ஆசிரியர் தொழிலில் உள்ளவர்கள் கூடுமானவரை தங்களது கடமைகளைச் செவ்வனே செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். எல்லாரையும் ஒரே தட்டில் நிறுக்க முடியாது.
தவறு செய்பவர்களுக்குத் தண்டனை உண்டு! அது தான் தர்மம்!
No comments:
Post a Comment