இன்று காலை எனக்கு வந்த தொலைபேசி அழைப்பின் காரணமாக இந்த கட்டுரை எழுத நேர்ந்தது.
குறிப்பாக உங்கள் கைப்பேசிக்கு 'மக்காவ் மோசடி கும்பல்' லிடமிருந்து அழைப்புக்கள் வந்தால் ஒன்றை கவனிக்கலாம். அந்த அழைப்பு எங்கிருந்து வருகிறது என்று குறிப்பிடாமல் வெறும் "MALAYSIA" என்றே காட்டும். இப்படி காட்டினாலே ஏதோ வில்லங்கமான அழைப்பு என்று புரிந்து கொள்ளலாம்.
எனக்கு வரும் இந்த அழைப்பைத் தவிர்க்கலாம் என்று பார்த்தாலும் அவர்கள் நம்மை அவ்வளவு சீக்கிரத்தில் விடமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை நாம் அவர்களுடைய வாடிக்கையாளர்கள். எந்த ஒரு முதலீடும் இல்லாமல் இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற போது அவ்வளவு எளிதில் அவர்களது பிடியிலிருந்து நம்மைத் தப்பிக்க விடமாட்டார்கள்! "முயற்சி திருவினையாக்கும்" என்பதை இவர்களிடமிருந்து தான் நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!
நம்மால் செய்ய முடிந்தது எல்லாம் அந்த அழைப்புகளைத் துண்டித்துவிட வேண்டியது தான். நம்மால் பேசி அவர்களைக் கவிழ்க்க முடியும் என்றால் நாம் அவர்களிடம் பேசலாம். அது நம்மால் முடியும். நமது பேச்சிலிருந்தே அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அனுபவம் இல்லாதவர்கள் தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு சில விஷயங்களையாவது நாம் புரிந்து வைத்திருக்க வேண்டும். காவல்துறையினர் நம்மிடம் தொலைப்பேசியில் பேச மாட்டார்கள். அது முதல் விஷயம். வங்கியிலிருந்து அழைப்புகள் வரலாம். ஆனால் உங்கள் வங்கிக் கணக்கு எண் அவர்களுக்குத் தெரியும். அதனால் உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே கேட்டால் நேரடியாக 'வங்கிக்கு வருகிறேன்' என்று சொல்லி அவர்களைப் போய் பாருங்கள்.
வங்கிக்கணக்கு, அடையாளை அட்டை எண் போன்றவற்றை யாரிடமும் கொடுக்காதீர்கள். இப்போதெல்லாம் பாரங்களைப் பூர்த்தி செய்யுங்கள் என்று சொல்லி எது எதற்கோ விளம்பரங்கள் வருகின்றன. அங்கிருந்து தான் உங்களுடைய அனைத்துத் தகவல்களும் இந்த மோசடி கும்பல்களிடம் போய் சேருகின்றன. விளம்பரங்கள் கொடுப்பவர்களே இந்த மோசடி கும்பல்கள் தான்! அது எந்த விளம்பரமாக இருந்தாலும் சரி உங்கள் வங்கி எண்களைக் கொடுத்து விடாதீர்கள்.
இன்று நாட்டில் பெரும் பெரும் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கொஞ்சம் கூட குறைந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் மோசடி செய்திகள் வருகின்றன. பிரச்சனை என்னவென்றால் இப்படி ஒரு மோசடி நடக்கிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. யாரும் எந்தவொரு செய்தியும் படிப்பதில்லை. பத்திரிக்கைகள் தான் படிப்பதில்லை. கணினி மூலம் கூட படிக்கலாம். செய்திகள் வருகின்றன ஆனால் யாரும் அதனை முக்கியம் என்று கருதுவதில்லை.
மோசடிகள் தொடர்கின்றன. நிறுத்தத் தான் வழி தெரியவில்லை! சீக்கிரம் அதற்கான வழிகள் காணப்படும் என நம்பலாம்!
No comments:
Post a Comment