பினாங்கு மாநில துணை முதல்வர், பேராசிரியர் இராமசாமி அவர்கள் இம்முறை எந்தத் தொகுதியிலும் நிறுத்தப்படவில்லை. அதாவது இந்தப் பதினைந்தாவது தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
இது அரசியல். நம்மால் எதனையும் கணிக்க முடியாது. எது முடியும் எது முடியாது என்பதை நம்மால் சொல்ல முடியாது.
நாம் இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது அவர் வகித்த துணை முதல்வர் பதவி யார் நிரப்புவார் என்பது தான். அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். எந்த குப்பனும் வரலாம் எந்த சுப்பனும் வரலாம். நமக்கு அதில் பிரச்சனையும் இல்லை.
ஆனால் நமக்குத் தேவை இராமசாமி போன்ற தலைவர்கள் தான். நல்ல படிப்பாளிகள், தமிழர் பிரச்சனைகளை அறிந்தவர்கள், நமது சமூகத்தை நல்ல முறையில் வழி நடத்துபவர்கள் - அவர்களைத்தான் இந்த சமூகம் எதிர்பார்க்கிறது.
பேராசிரியர் இராமசாமி அவர்கள் தேர்தலில் போட்டி இடவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து இந்தப் பதவியில் இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த சமூகம் விரும்புகிறது.
நல்ல தலைவர்களை இந்த சமூகம் நீண்ட நாள்களாகக் கொண்டிருக்கவில்லை. துன் வி.தி.சம்பந்தனுக்குப் பிறகு வந்தவர்கள் அனைவருமே இந்த சமூகத்தைக் கைவிட்டுவிட்டனர். இராமசாமி அவர்கள் மாநில அளவில் தான் துணை முதல்வராக இருந்தாலும் அவருடைய செல்வாக்கு என்னவோ மலேசிய அளவில் இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதற்கு அவர் தகுதியானவராக இருந்தார்.
நம்முடைய விண்ணப்பம் என்னவென்றால் அவர் துணை முதல்வராகத் தொடர்ந்தால் நமக்கு மகிழ்ச்சியே. அப்படி ஒரு வாய்ப்பில்லை என்று வந்தால் அந்தப் பதவி மீண்டும் ஒரு தமிழருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்பது தான். தமிழர் மட்டும் அல்ல தமிழ் அறிந்தவராகவும் இருக்க வேண்டும். தமிழர் பிரச்சனைகளை அறிந்தவராக இருக்க வேண்டும். ஜ.செ.க. வுக்கு தலை ஆட்டுபவராக இருந்தால் எதுவும் நடக்காது. சீனர்கள் பிரச்சனைகள் வெற்றிகரமாக முடியும். தமிழர் பிரச்சனைகள் அனைத்தும் தள்ளாடும். அதற்காகத்தான் நாம் அஞ்சுகிறோம்.
பேராசிரியர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது தான். அது பினாங்கு மாநில அரசியல். அவர் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவருடைய சேவை தொடர வேண்டும். நமது இனம் காக்கப்பட வேண்டும். தொடர்ந்து அவர் செய்த பணிகள் தொடர வேண்டும்.
நல்லதே நடக்கும் என நம்புவோம்!
No comments:
Post a Comment