டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து இப்போது சிறையிலிருப்பது மலேசியர்கள் அறிந்ததே.
அது நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. முறையீடு, மேல் முறையீடு என்று அனைத்தையும் முயற்சி செய்திவிட்டு கடைசியில் எதுவும் செய்ய முடியாமல் சிறை சென்றார் நஜிப்.
ஆனாலும் நஜிப் பொறுத்தவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை என்கிறார். அதோடு அவரின் ஆதரவாளர்களும் அவருக்கு நீதி வேண்டும் என்கிறார்கள்.
அவர் என்ன தான் சொல்ல வருகிறார் என்று அவருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் புரிகிறது. ஆனால் மலேசியர்களுக்கு அது புரியவில்லை. அதிலுள்ள சட்ட சிக்கல்களைப்பற்றி சராசரியான நமக்குப் புரிய நியாயமில்லை.
தவறு செய்தார். இப்போது சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார் என்பதைத் தவிர வேறு எந்த நியாயமும் நமக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஒரு சாரார் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிறார்கள்! நீதி கிடைத்துவிட்டது, அதைத்தான் இப்போது அவர் அனுபவித்துக் கோண்டிருக்கிறார். இன்னும் என்ன நீதி வேண்டும்?
அவருடைய வழக்கு நடந்து கொண்டிருந்த போதே ஏத்தனையோ ஜாம்பவான்கள் அவரின் விடுதலைக்காகப் போராடினர். அவருக்காக வாதாடினர். ஆனாலும் அவரின் வழக்கு நிற்கவில்லை. தோல்வியில் தான் முடிந்தது! அப்படியென்றால் அவரின் பக்கம் நியாயமில்லை அதனால் தோல்வியில் முடிந்தது என்பது தானே பொருள்?
இப்போது நஜிப் என்ன சொல்ல வருகிறார்? தனக்கு நீதி வேண்டும் என்கிறார். அது தான் நமக்குப் புரியவில்லை! நீதி இல்லாமலா அவரைச் சிறையில் போட்டார்கள்? நமக்கு நீதி பற்றி தெரியாததால் தலை வால் எதுவும் புரியவில்லை!
சரி, நீதிமன்றம் தவறு செய்துவிட்டது. இப்போது நீதி வேண்டும் என்று யாரைப் பார்த்துக் கேட்கிறார்? ஒற்றுமை அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்கிறாரா? அரசாங்கம் என்ன செய்யும்? நீதிமன்றம் சொல்வதைத்தானே அரசாங்கம் கேட்கும். அது தானே நடைமுறை.
நீதி கிடைக்க அம்னோ போராடும்! போராடட்டும்! நீதி அவருக்குச் சாதகமாக இருந்தால் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அவர் விடுதலையானால் அதற்கும் சரியான காரணங்கள் இருக்க வேண்டும்.
நீதி கிடைக்க வேண்டும். ஆனால் குறுக்கு வழியில் அல்ல! அரசியல்வாதிகள் குறுக்கு வழிகளைத்தான் நீதி என்கிறார்களோ!
No comments:
Post a Comment