Wednesday 21 March 2018

ஏமாற்றும் விளம்பரங்கள்..!


SPM, STPM  முடிவுகள்  வெளியாகிவிட்டன. இதற்காகவே தனியார் கல்லுரிகள் உங்களை ஏமற்றுவதற்காக ஒரு சில மாதங்களாக வரிசையில்  காத்துக் கிடக்கின்றன!

உங்களை அவர்கள் உலக அளவில் கொண்டு செல்லுவார்களாம்! உலகத் தரத்திலான கல்வியை அவர்கள் உங்களுக்குத் தருவார்களாம்!  அவர்களுக்குத் தேவை எல்லாம் உங்கள் பணம்.  அதற்காக அவர்கள் எத்தனை பொய்யையும் சொல்லத் தயார்!

இன்னும் சில கல்லுரிகளில்  உங்களுக்கு முழு அரசாங்கக் கடன் உதவி கிடைக்கும் என்று உறுதிக் கூறுவார்கள். கிடைக்கும் தான். ஒன்றை ஞாபகத்தில் வையுங்கள். உங்களுடைய விண்ணப்பங்கள் ஏற்றுக் கொண்ட பின்னர், அரசாங்கத்தின் கடன் உதவி கிடைக்கும் என்று உறுதிக் கிடைத்த பின்னர், நீங்கள் அந்தக் கல்லுரியின் அடிமை!  அரசாங்கத்தின் நிதி உதவி கிடைத்த பின்னர் உங்களை அவர்கள் சட்டை செய்ய மாட்டார்கள்! நீங்கள் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, உங்களை ஏன் என்று கூட மாட்டார்கள். காரணம் உங்களை அரசாங்கத்தின் நிரந்தர கடனாளியாக்கி விட்டார்கள்! அவர்களுக்குச் சேர வேண்டிய பணம் சேர்ந்துவிட்டது!   

 இவர்களால் எப்படி இப்படியெல்லாம் ஏமாற்ற முடிகிறது? இவர்களெல்லாம் பெரும்பாலும் அரசியல்வாதிகள்.  இந்திய மாணவர்களை ஏமாற்றிப் பணம் பறிக்க வேண்டும் என்று திட்டம் போட்டுச் செயல்படுபவர்கள்! பொதுவாக இந்தியர்கள் என்று சொன்னாலும் இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் மாணவர்கள் தாம். மலையாள சமூகமும், சீக்கிய சமூகமும் படித்த சமுகம் என்பதனால் அவர்கள் ஏமாறுவது குறைவு. 

இந்த நேரத்தில் நான் சொல்லுவது ஒன்று தான். தனியார் பள்ளிகளோ, கல்லூரிகளோ அவற்றைப் புறக்கணியுங்கள். அரசாங்கம் ஏகப்பட்டக் கல்லுரிகளை - தொழிற்நுட்பக் கல்லூரிகளைத் திறந்து வைத்திருக்கிறது. உங்களின் திறமைக்கேற்ப  ஏதாவது ஒன்றில் சேருங்கள். உங்களின் தகுதி எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதற்கும் அரசாங்கம் உங்களைச் சேர்த்துக் கொள்ள கல்லூரிகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். அது அரசாங்கக் கல்வி. அதுவும் இலவசக் கல்வி. சில கல்லூரிகளில் உங்களுக்குப் படிக்கும் காலத்தில் ரி.ம. 300.00  வெள்ளி உதவித் தொகையும் கொடுக்கிறார்கள்.

அரசாங்கம் கொடுக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிது புதிதாக ஏன் படிக்கவில்லை என்பதற்கான காரணங்களைக் கண்டுப் பிடித்துக் கொண்டிருக்காதீர்கள்.

போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்!  ஏதோ ஒரு உயர்க் கல்வியைக் கற்க வேண்டும் என்பதில் உறுதியாயிருங்கள். வாழ்த்துகள்!

No comments:

Post a Comment