Monday 26 March 2018

செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி


தெம்மாங்கு பாடல்கள் மீது எனக்கு  ஓர் அலாதியான ஈர்ப்பு உண்டு.  அந்தக்கால சினிமாவில் பல பாடல்கள் தெம்மாங்கு மெட்டில் வந்திருக்கின்றன. அது அப்படியே கரைந்து கரைந்து அப்புறம் கேட்க முடியாமலே போய்விட்டன. இப்போது அது தேவை இல்லை என்னும் நிலைமைக்கு வந்து விட்டது.

முன்பு தெம்மாங்கு என்றார்கள். அப்புறம் கானா பாடல், கிராமிய பாடல் இப்போது மக்கள் இசை என்கிறார்கள். பெயர் தான் வேறையே தவிர அது மக்களால் விரும்பி, போற்றக்கூடிய பாடல்கள்.

இப்போது தீடீரென இந்தத் தெம்மாங்கு பாடல்களுக்கு ஒரு தெம்பு வந்துவிட்டது!  இத்தனை ஆண்டுகள் முடங்கிக் கிடந்த இந்தக் கிராமிய இசை  இப்போது புதியத்  தெம்போடு விஜய் டிவியின்   ஒத்துழைப்போடு ஒரு புதிய உத்வேகத்தோடு வலம் வரத் தொடங்கியிருக்கிறது!  முதலில் விஜய் டிவிக்கு ஒரு நன்றியைச் சொல்ல வேண்டும். 

அது வெளியான நேரமும் சரியான நேரம் தான்.  தமிழ் நாடு இசைக்கல்லூரியின் துணை வேந்தர் பதவி பற்றிய ஒரு சர்ச்சையை புஷ்பவனம் குப்புசாமி எழுப்பியிருந்தார். தமிழர்களின் பாரம்பரிய இசையான மக்களிசை எப்படி கர்நாடக இசையினரால்  புறக்கணிக்கப்படுகிறது என்பது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில் மக்களிசையின் நிழல் தான் கர்நாடக இசை. ஆனால் காலப்போக்கில் அது மாறி கர்நாடக இசை உயர்ந்தது மக்களிசை தாழ்ந்தது என்னும் ஒரு நிலையை உருவாக்கிவிட்டனர்.

இந்த நேரத்தில் விஜய் டிவி,  மக்களிசைப் பாடகர்களான செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணையை  அறிமுகப்படுத்தினர். அவர்கள் பாடிய முதல் நாள் பாடலிலிருந்து இந்நாள் வரை  அவர்களுக்கு ஈடு இணை இல்லை என்பதைக் காட்டி வருகின்றனர். அவர்கள் பாடி வரும் பாடல்கள் தமிழ் நாடு மட்டும் அல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஒர் உத்வேகத்தைக் கொடுத்து வருகின்றது.    நமது இசை என்கிற உறவை ஏற்படுத்துகிறது. இது நாள் வ்ரை இந்தப் பாடல்கள் எங்கே போயிருந்தன? ஏன் மறைக்கப்பட்டன  என்னும் கேள்விகள் எழுகின்றன.

எனினும் இனி மக்களிசைக்கு எந்தத் தொய்வும் இல்லை! வாழ்க, வளர்க செந்தில்-ராஜலட்சுமி இணையர்!

No comments:

Post a Comment