Friday 30 March 2018

வீரத்தாய்க்கு வீர விருது..!



ஒன்பது ஆண்டுகள் சட்டப்போராட்டம். ஏமாற்றியதோடு மட்டும் அல்லாமல்   தாயின் அனுமதியின்றி ஒரு தலை பட்சமாக மூன்று பிள்ளைகளையும் மத மாற்றம் செய்த கணவன். போராட்டம்! தோடர்ந்து போராட்டம்! 

கடந்த ஒன்பது ஆண்டு காலம்  பாலர்பள்ளி ஆசிரியை, இந்திரா காந்திக்கு இது தான் வாழ்க்கை.  போராட்டம் என்றால் அது சாதாரண போராட்டம் அல்ல.  அவருடைய தகுதிக்கு மீறிய போராட்டம். அத்தோடு  தன்னோடு இருந்த மூத்த பிள்ளைகளான  தேவி தர்ஷினி (21)  கரன் தினேஷ் (19)  இவர்களின் கல்வி,  பொருளாதாராச் சிக்கல் அத்தனையும்    சமாளித்து கடைசியாக அவர் நினைத்ததைச் சாதிக்க முடிந்தது.  ஆமாம், அவருடைய  ஒன்பது ஆண்டு காலச்  சட்டப் போராட்டம்  இறுதியாக  கூட்டரசு நீதிமன்றம்  மூலம்    அவருக்கு வெற்றியைக்  கொண்டு வந்தது. தாயின் சம்மதமின்றி மத மாற்றம் செய்தது செல்லாது என்பதாக தீர்ப்பு வெளியானது.      இந்த வழக்கின் வெற்றி என்பது அவருக்கு மட்டும் அல்ல இனி வருங்காலங்களில் இது போன்ற வழக்குகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் அமைந்திருக்கிறது என்பதும் மகிழ்ச்சியான செய்தி.

இந்திரா காந்தியின் அசராத, அயராத,  பல எதிர்ப்புக்களிடையே எந்த விதத்திலும்  பின் வாங்காத அந்தத் துணிச்சல் மிக்க  தாய்க்குக் தான்  "துணிச்சல் மிக்க பெண்" என்கின்ற வீர விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறது அமெரிக்க அரசாங்கம்.  சமீபத்தில்  அந்த விருதினை  இந்திரா காந்திக்கு வழங்கி சிறப்பு செய்திருக்கிறார்  மலேசியாவுக்கான  அமெரிக்க தூதர் கமலா ஷிரின் லக்திர்.

இந்த வெற்றி என்பது அசாதாரணம் என்றாலும்  அவர்  மனதிலே இன்னும் வேதனை உண்டு. அவருடைய கடைசி மகள்,  பிரசன்னா திக்‌ஷா -   பதினோரு மாதக் குழந்தையாய்  இருக்கும் போது ஓடிப்போன கணவனால்  அபகரிக்கப்பட்ட அந்தக் குழந்தை -  இன்னும் தாயிடம் ஒப்படைக்கப்பட வில்லை. இது வ்ரை அவர்  எந்த நீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை!  யார் பின்னாலோ ஒளிந்து கொண்டு தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. குழந்தையைக் கூட பள்ளிக்கு அனுப்பாமல் .....? ஆனால் இந்த அயோக்கித்தனம்  நீண்ட காலம் நீடிக்க முடியாது என்பது மட்டும் உண்மை.

இதற்கு முன்னர் இதே விருதை மனித உரிமைப் போராளி அம்பிகா சீனிவாசனுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நல்லது நடக்கும் என எதிர்பார்ப்போம்! வீரத்தாய்க்கு வீர வணக்கம்!


No comments:

Post a Comment