Friday 9 March 2018

நாடற்றவர் பிரச்சனை - 100 நாள் போதும்!


நாட்டின் பிரதான எதிர்க்கட்சித்  தேர்தல் கூட்டணியான  பக்காத்தான் ஹரப்பான் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 

அதில் ஒன்று:  புத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய 100 நாள்களுக்குள் இந்நாட்டிலுள்ள  நாடற்ற இந்தியர்களின் பிரச்சனைத் தீர்க்கப்படும்.

தீர்க்கப்படுமா, தீர்க்கப்படாதா என்பதை விட  இந்தப் பிர்ச்சனைத் தீர்க்கப்பட 100 நாள்  போதும் என்பது தான் முக்கியம்.  இதற்கு 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் என்று இழுத்தடிப்பதற்கு  எந்தக் காரணமும் இல்லை! ஏதோ ஏதோ உப்புச்சப்பில்லாத காரணங்களைக்  கூறி இந்தியர்களை நாடற்றவர்கள் என்று கூறி கேவலப்படுத்திக் கூத்தடிப்பது  கோமாளிகளின் வேலை என்பது நமக்குப் புரிகிறது! இவர்கள் கூத்தடிப்பதற்குக் கிடைத்தவர்கள் இந்தியர்கள்!  இதனைக் கேட்பதற்கு ஆளில்லை! ஆளில்லை என்றால் ....?  அது தான் ஆளில்லை!

நாடற்றவர் என்று சொல்லப்படுகின்ற இந்தப் பிரச்சனையை நூறு நாள்களுக்குள் தீர்க்கப்படும் என்று சொல்லுபவர் யார்?  நமது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர்.  அவர் சொல்லுவதில் தவறு இருக்க முடியாது. அவர் நீண்ட காலம் அரசாங்கத்தில் இருந்தவர். பிரதமர் ஆவதற்கு முன் பல அமைச்சுகளில் அமைச்சராக இருந்தவர். அவரை ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல.  அதனால் அவர் சொல்லும் - நூறு நாள்களுக்குள் - தாராளமாக ஏற்கலாம்.

ஆமாம், இப்போது - நமது பி.என். அரசாங்கம் ஏன் இந்தப் பிரச்சனையை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் காலந்தாழ்த்துகிறது?  இப்போது  நம்மைச் சுற்றிப் பார்த்தால் எங்கிருந்தோ வந்த வங்காளதேச, பாக்கிஸ்தானியர் நீல நிற அடையாளக்கார்டுகளோடு சுற்றி வருகின்றனர்.  அவர்கள் பிரஜைகள். இந்நாட்டில் பிறந்த ஏதோ ஒரு பத்திரம் இல்லை, அல்லது ஏதோ ஒரு பத்திரத்தில் அரசாங்க முட்டாள் ஒருவன் செய்த தவறு - இது போன்ற காரணங்களால் அவர்கள் நாடற்றவர்கள் என்று முத்திரைக் குத்தப்படுகின்றனர்!

நாம் கேட்பதெல்லாம் இது தான். மூன்று மாதத்தில் செய்யப்பட வேண்டிய வேலைகளை ஏன் இந்த அளவுக்கு - 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் -  இழுத்தடிக்கப்படுகின்றது?    ஒரே காரணம் அவன் இந்து  என்பது மட்டும் தான் காரணமாக இருக்குமோ!

No comments:

Post a Comment