Saturday 31 March 2018

உலக இட்லி தினம்..!


எல்லாவற்றுக்கும் ஒரு தினம் உண்டு.    அதே போல இட்லிக்கும் ஒரு தினம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30- தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணமானவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். காரணம் அந்த அளவுக்கு இட்லியோடு நமக்கு நெருக்கம் உண்டு.

இங்கு நாம் இட்லி செய்முறையைப் பற்றியெல்லாம் விளக்கம் சொல்லப் போவதில்லை. அதற்குத் தேவையும்  இல்லை. இதெல்லாம் பார்த்துப் படித்தெல்லாம் அதன் சுவையைக் கொண்டு வர முடியாது.  அது பரம்பரையாக வீடுகளில் கற்றுக் கொள்ளுவது.

இட்லி தமிழ் நாட்டு உணவு அல்ல.  அது இந்தோனேசியாவிலிருந்து அங்கு பணிபுரிந்த இந்து அரசவை சமையல்காரர்களால் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஓர் உணவு எனச் சொல்லப்படுகிறது. வரும் போது ஒரு விதமாகவும் வந்த பிறகு அதனை மாற்றி அமைத்த பெருமை நம்மையே சாரும். அதனால் தான்  வந்து 700 ஆண்டுகள் ஆகியும்  இன்னும் அது உயிர்த் துடிப்போடு விளங்குகிறது!




பொதுவாக இட்லி என்பது தென்னிந்தியர்களால் மிகவும் விரும்பி சாப்பிடப்படுகின்ற ஓரு காலை உணவு.  நமது நாட்டிலும் இந்தியர்கள் மட்டும் அல்ல சீனர்களும், மலாய்க்காரர்களும் கூட விரும்பி சாப்பிடுகின்ற உணவு தான் இட்லி. அது மிருதுவான தன்மை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாப்பிடுகின்ற உணவாக மாறிவிட்டது. அத்தோடு ஆரோக்கியமான உணவு என்பதும் ஒரு காரணம்.

உலகளவில் பத்து மிகவும் சிறந்த உணவுகளில் இட்லியும் ஒன்று என்பதாக உணவு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

தமிழ் நாட்டில், சென்னையில் ஒர் உணவகத்தின் பெயர் "முருகன் இட்லிக் கடை" என்பதாகவே வெற்றிகரமாக நடந்து வருகிறது.  அது ஒன்றே போது இட்லியின் சிறப்பைச் சொல்ல.

வெறும் "ரொட்டிச்சனாய்" (பரோட்டா) என்று சொல்லி, காலையில் வயிற்றை நிரப்பி உடம்பைக் கெடுத்துக் கொள்ளாமல் கொஞ்சம் ஆரோக்கியமான உணவான இட்லியை சாப்பிட்டு ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்வோம்.

No comments:

Post a Comment