Monday, 12 March 2018
சீனப்பள்ளியில் ரவீந்திரநாத் தாகூர்...!
சீனப் பள்ளிக்கும் வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூருக்கும் என்ன சம்பந்தம்? பெரிய அளவில் அவருடைய உருவப்படம் ஒன்று சீனப்பள்ளியை அலங்கரித்துக் கொண்டிருக்கிறதே, என்ன காரணம்?
நீங்கள் மேலே பார்க்கின்ற சீனப்பள்ளிக்கூடம் பினாங்கு மாநிலத்தில் உள்ள பல சீனப்பள்ளிக்கூடங்களில் இதுவும் ஒரு பள்ளிக்கூடம் அவ்வளவு தான்! இருந்தாலும் SJK (C) HU YEW SEAH என்னும் பெயரில் உள்ள அந்தப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு வித்தியாசம் உண்டு.
இரவீந்திரநாத் தாகூர் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டியவர். இது நடந்தது 1927 - ம் ஆண்டு.
தாகூர் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். தனது கீதாஞ்சலி கவிதை தொகுப்பிற்காக 1913-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இன்னும் கதை, கவிதை, கட்டுரை, நாடகம் என்று எல்லாத் துறைகளிலும் கால் பதித்தவர். வங்காள மொழியில் புதுமைகளைப் புகுத்தியவர். இந்தியாவின் தேசிய கீதமும், வங்காள தேசத்தின் தேசிய கீதமும் இவரால் இயற்றப்பட்டவை. இரு நாடுகளின் தேசிய கீதத்தை எழுதிய ஒரே மனிதர், உலகிலேயே, இவர் ஒருவர் மட்டும் தான்.
தாகூரின் பக்கத்தில் இருக்கும் அந்த சீனர் யார்? அவர் தான் பினாங்கில் பிறந்த டாக்டர் வூ லியான் தே. நோபல் பரிசுக்காக 1935-ல் முன்மொழியப்பட்டவர். அத்தோடு முதன் முதலாக இங்கிலாந்து சென்று மருத்துவ படிப்பை மேற்கொண்ட முதல் மலேசிய சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்.
இவைகள் எல்லாம் எதற்காக? அவர்கள் எல்லாம் மாணவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டுக்கள். மாணவர்க்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்க, ஓர் உந்துதலைக் கொடுக்க இவர்களின் ஓவியங்கள் அங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு மாணவனும் ஒரு இலட்சிய வெறியோடு தனது எதிர்காலத்தைக் கொண்டு செல்ல, செயல்பட உதவும் என்பதே நோக்கம்.
நல்ல நோக்கம்! அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் முன்னேறட்டும்! வாழ்த்துகள்!
நன்றி: FMT
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment