Friday 16 March 2018

எதிர்கட்சிகளின் தேர்தல் அறிக்கை..!


எதிர்கட்சிகளின் தேர்தல் அறிக்கையை எதிர்கட்சிகளின் இந்தியத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வெளியிட்டு    
இருக்கின்றனர். இந்தியர்களின் நலனுக்காக சில பல   திட்டங்கள். குறை சொல்ல ஒன்றும் இல்லை!

அதனால் குறையே ஒன்றுமில்லை என்று சொல்லுவதாக நினைக்க வேண்டாம். முதலில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் சீன, மலாய்க்காரத் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை! ஆக, இவர்கள் ஆட்சிக்கு வந்தால்....வந்தால்! ......... இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்து போகும்!  காரணம் சீனத் தலைவர்களிடம் இவர்களால் (நமது ம.இ.கா.வினர் போலவே) பேசும் அளவுக்கு யாருக்கும் துணிவில்லை என நாம் நம்பலாம்! அதற்கான காரணம் "நீங்களாகக் கூட்டத்தைக் கூட்டி அறிக்கையை வெளியிட்டதால்  அதற்கு நாங்கள் பொறுப்பல்ல" எனத் தட்டிக் கழிக்கலாம்!  

இப்படி சொல்லுவதற்குக் காரணங்கள் உண்டு. சிலாங்கூர் மாநிலத்தில் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் சிறப்பாகத்தானே செயலாற்றி வந்தார்? அவரைத் தூக்கிவிட்டு கணபதி ராவ் ஏன் அந்த இடத்தில் அமர்த்தப்ப்பட்டார்? இன்றும் ஜெயக்குமாரின் சேவைகள் தானே பேசப்படுகின்றன!  தமிழ்ப்பள்ளிகளுக்கும், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் அவர் செய்த சேவைகள் இன்னும் நாம் மறக்கவில்லையே, ஏன்? பொதுவாக எதிர்கட்சிகள், அதுவும் குறிப்பாக சீனர்கள், இந்தியர்களுக்கு நாம் நினைப்பது போல் உதவி விட மாட்டார்கள் என்பது புரிந்தவர்களுக்குப் புரியும்! அவர்களைப் பொறுத்தவரை சீனர்களுக்குத் தான் முதலிடம். தமிழ் மொழிக்குக் கூட அவர்கள் வாய்ப்புக் கொடுப்பதில்லை.அவர்களுடைய பதாகைகளைப் பார்த்தாலே அது புரியும்.

இன்று எந்த அளவுக்கு நாம் ம.இ.கா. வை குறை சொல்லுகிறோமோ அதே போன்று தான் நாளை      எதிர்கட்சியினர் பதவிக்கு வந்தால் நாம் குறை சொல்ல நேரிடும். காரணம் அங்கும் பெரிதாக "தொண்டு" செய்வோம் என்று யாரும் கங்கணம் கட்டிக் கொண்டு  வரவில்லை!  தொண்டு என்பதெ,ல்லாம்  தானாக வர வேண்டும். வற்புறுத்தி வருவதில்லை.

ஆக, எல்லாம் வெற்று அறிக்கைகள் தாம்! ரொம்பவும் நம்பி விடாதீர்கள்!

ஏதோ, டாக்டர் மகாதிர் என்பதால்,  அனைத்தையும் யோசிக்க வேண்டியுள்ளது!



No comments:

Post a Comment