Sunday 18 March 2018

கழிப்பறைகள் கட்டிய காட்டிலாகா அதிகாரி!



காட்டிலாகாவில் பெண்கள் வேலை செய்வது என்பதே குதிரைக் கொம்பு என்பதை நாம் அறிவோம். ஆனால்  பி.ஜி. சுதா என்னும் பெண்மணி அந்த ஆண் ஆதிக்கத்தை எல்லாம் மீறி, உடைத்து ஒர் அதிகாரியாகவும் பணியாற்றுகிறார். ஆனால் இந்தச் சாதனைகள் எல்லாம் பற்றிப் பேச ஏற்ற காலம் அல்ல இது. காரணம் பெண்கள் எத்தனையோ துறைகளில் ஆண்களை மிஞ்சி விட்டார்கள்!

ஆனால் இந்தப் பெண்மணியிடம் யாரிடமும் இல்லாத ஒரு தயாளக் குணம்,  நல்லது நடக்காத போது அதனைப் பார்த்துக் கொண்டு இருப்பது அவரின் குணம் அல்ல! அது தான் அவரைப் பற்றிய அந்தத்  தயாளக் குணத்திற்காக  இன்று அவர் உலகப் புகழ் அடையும்படி செய்துவிட்டது.

கேரளாவைச் சேர்ந்த சுதா,  அவர் பணி செய்கின்ற நேரத்தில் ஏற்பட்ட அனுபவம்,  அவரை மலைவாழ் மக்களிடம் அனுதாபம்கொள்ளச் செய்தது.  கழிப்பறை என்று ஒன்றை அவர்கள் எந்தக் காலத்திலும் பயன்படுத்தியதில்லை! அதற்கு அவசியம் என்று அவர்கள் நினக்கவில்லை! திறந்த வெளியே அவர்களுக்குப் போதும்! ஆனால் அதுவும் அவர்களின் குற்றம் இல்லை. காரணம் கழிவறைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களை அவர்கள் வாழ்கின்ற மலைகளினுள் கொண்டு செல்ல இயலாது!  அந்தச் சூழலில் தான் சுதா,  அவர்களுக்கு உதவ வேண்டும் என்னும் நோக்கில் அவர்களின் பிரச்சனையைக் கையில் எடுத்தார். பிரச்சனைகளில் மாற்றமில்லை. மூன்று நான்கு மணி நேரம் நடந்து,  சுமார் 15-20 கிலோ மீட்டர் தூரம் கடந்து.  காட்டினில் உள்ளே நுழைந்து கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல எந்த நிறுவனமும் தயாராக இல்லை.   அத்தோடு போகின்ற வழியில் காட்டு யானைகளின் கூட்டம் வேறு!    

அந்த காட்டினுள் ஒன்பது கிராமங்கள் இருந்தன. அவைகள் அனைத்திலும் கழிப்பறைகள் கட்ட வேண்டும்.  பொருட்களின் விலைகளோ பல மடங்குகள் ஏறிவிட்டன. 300 ரூபாய் பொருட்கள் 3000 ரூபாய்க்கு விற்கப்பட்டன.  இருந்தும் சுபாவுக்கு எதுவும் தடையாக இல்லை. தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து அனைத்துக் கிராமங்களுக்கும் சுமார் 600 க்கும் மேலான கழிப்பறைகளைக்கட்டி வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்.  சுபாவும் தனது சொந்தப்  பணத்தை  இந்த மலைவாழ் மக்களுக்காக இந்தத் திட்டத்தின் மூலம் செலவு செய்திருக்கிறார்.  அவர் செலவு செய்த பின்னரே தான் அரசாங்கமும் இத்திட்டத்தில் பங்கேற்று இத்திட்டம் முழுமை அடைந்தது.

அரசாங்கப் பதவியில் இருந்தாலும் ஒரு தனி மனிதரின் முயற்சியால் தான் பல காரியங்கள் நிறவேறியிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. முடியாதது என்று எதுவும் இல்லை. எல்லாம் முயற்சி தான்!

இன்று கேரளா எல்லா இடங்களிலும் கழிப்பறைகள் கொண்ட ஒரு மாநிலமாக விளங்குகிறது! அதில் குறிப்பிடத்தக்கது காட்டிலாக அதிகாரியான சுபாவின் முயற்சியும் ஒன்று!

No comments:

Post a Comment