Friday 2 March 2018

இன்னும்....இன்னும்.....!



இன்னும்...இன்னும்....! பெண்களே!  கொஞ்சம் கவனமாக இருங்கள்.

எல்லாவற்றுக்கும் ஓர் அளவு உண்டு. பொருளாதாரத் தேவைகளுக்கும் ஓர் எல்லை உண்டு. சராசரியான மலேசியத் தமிழனுக்கு  அல்லது ஒவ்வொரு மலேசியனுக்கும்   ஓர் வீடு, ஒரு கார்,  மாதா மாதம் ஒரு வருமானம். இவைகள் தான் அவனின் இலக்கு. ஏழையாய் இருப்பவனுயும் இந்த இலக்கை நோக்கித்தான்  பயணிக்கிறான்.

தொழிற்துறையில் இருப்பவர்களுக்கு  இன்னும் இலட்சியங்கள் அதிகமாக இருக்கும்.   விலை உயர்ந்த வீடுகள், சொகுசு கார்கள், பல தொழில்களில் முதலீடுகள் என்று  இலட்சியங்கள் உயர்ந்து கொண்டே போகும்.

இவைகள் எல்லாம் தவறுகள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.  அதற்காகத்தானே தொழிற்துறையில் ஈடுபட்டிருக்கிறோம். இல்லாவிட்டால் கைக்கட்டி யாரிடமாவது வேலை அல்லவா செய்து கொண்டிருப்போம்! அதனால் உயர்ந்த இலட்சியங்கள் இருப்பதில் தவறில்லை.

ஆனாலும் பெண்களே, உங்களுக்குத் தான் இந்த ஆலோசனை.  உங்கள் கணவர் தனது  இலட்சியத்திற்காக  இரவும் பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டியது உங்களது கடமையாக நினையுங்கள்.  உங்களது கணவரின் வெற்றி உங்கள் கையில் தான் இருக்கிறது. நீங்கள் அவரின் கவனைத்தை திசைத் திருப்பினால் அனைத்தும் திசைத்  திரும்பி விடும்!

அடுத்த வீட்டு அமுதாவோடு போட்டிப் போட வேண்டும் என்று நினைக்காதீர்கள்! அவர்கள் உங்களை விட வளர்ந்து  விட்டவர்கள்.   உங்களின் தகுதிக்கு ஏற்றவாறு உங்களுக்கென்று ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவுவது நமது கடமை. உங்களின் தகுதிக்கு மீறி 'இன்னும்...இன்னும்... அவரைவிட.....அவரைவிட...!' என்று தகுதியற்றப் போட்டிகள் வேண்டாம்!  நீங்கள் கொடுக்கும் போது 
'கொடுத்துச் சிவந்த கரங்கள்!' என்பார்கள்! கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால் 'இரத்தக் கறை படிந்த கரங்கள், அதான் இப்படி!'  என்று அவமானப் படுத்துவார்கள்! இது தான் உலகம்!

கணவர்மார்களை  உசுப்பிவிட்டு உங்களுக்குப் பெருமைத் தேட நினைக்காதீர்கள்!  பணம் வருகின்ற பாதைகளை அடைத்துவிட்டால், உங்கள் பெருமைக்காக, உங்கள் கணவர் இருட்டறைகளைத் தேடித்தான் செல்வார்!  உங்கள் பணம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். செல்வத்தைப் பெருக்க 'இன்னும்,,,,இன்னும்,,,,!' என்று  முயற்சி செய்யலாம். ஆனால் பெருமைகளைத் தேட 'இன்னும்...இன்னும்...!' என்றால் சிறுமைகள் தான் உங்களைத் தேடி வரும்!

பணத்தின் அருமை நமக்கும் தெரியும். அது பாதாளம் மட்டும் பாயும் என்பதும் நமக்குத் தெரியும். 

ஆனால் ......   இன்னும்.......இன்னும்.....! என்று  பெருமைக்காக   போட்டியில் இறங்கினால் பாதாளம் மட்டும் அல்ல பதாகைகளிலும் பாயும்!

No comments:

Post a Comment